திட்டம் போட்டு சாதித்தவர்கள் யார்..?

ஹிந்தவை வீழ்த்தவேண்டும் என்று 2010ம் ஆண்டு ரணில் தலைமையில் திட்டம் போட்டு செயல்பட்டார்கள், ஆனால் அது அவர்களினால் முடியாமல் போய்விட்ட விடயமானதை நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். அதன் பிற்பாடு சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ரகசியமான முறையில் திட்டம் தீட்டப்பட்டு, அதற்காக யார் யாரை பயன்படுத்த வேண்டும் எப்படி பயன் படுத்த வேண்டும் என்று நன்றாகவே சிந்தித்து செயல்பட துவங்கினார்கள்.

அதன் காரணமாகவே மஹிந்த ஆட்சியில் முக்கிய புள்ளிகளாக இருந்தவர்களும் பின்னாலில் மஹிந்தவுக்கு எதிரியாக மாறியவர்களுமான இன்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க போன்றோரை பல நாட்களுக்கு முன்னமே அவர்களின் அணியில் சேர்த்துக்கொண்டார்கள். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்தான் அளுத்கம பிரச்சினை ஏற்படுகிறது, அதற்கு முன்னமே இவர்கள் திட்டமிட்டு செயல்பட துவங்கிவிட்டார்கள் என்பதை பின்னாலில் அவர்களே ஒத்துக்கொண்ட விடயமாகும்.

ஒரு சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா அம்மையார் அவர்கள் பகிரங்கமாகவே மேடைகளில் பேசியிருந்தார், நாங்கள் திட்டமிட்டு செயல்பட்ட விடயத்தை மஹிந்த அறிந்திருந்தால் பல சிக்கல்களை நாங்கள் சந்தித்திருப்போம் அதனால் தான் நாங்கள் ரகசியமாக திட்டமிட்டு செயல்பட்டோம் என்று கூறியிருந்தார். பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட்ட இவர்கள் மஹிந்த ஆட்சியில் மஹிந்தவுக்கு ஆதரவாக இதயசுத்தியுடன் செயல்பட்டிருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

சிரித்து சிரித்து அப்பம் சாப்பிட்டு விட்டு அடுத்தநாள் மஹிந்தவை எதிர்க்கும் முக்கிய ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய விடயமானது, ஒரு நாளைக்குள் எடுத்த முடிவாக இருக்கமுடியாது மாறாக பல நாட்களுக்கு முன்னமே எடுத்த தீர்மானமாகத்தான் அது இருக்கமுடியும். இப்படி திட்டம் போட்டு செயல்பட்டவர்கள் அளுத்கம பிரச்சினை மூலம் மஹிந்த பாதிக்கப்படுவதைத்தான் விரும்பியிருப்பார்கள், காரணம் மஹிந்தவின் வீழ்ச்சி இவர்களுக்கு மகிழ்ச்சி என்றதனாலாகும்.

மஹிந்தவின் வாக்கு வங்கியில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தால் முஸ்லிம்களின் பிரச்சினை தீயாக எறியவேண்டும் அதன் மூலம் எமக்கு வாக்குகள் கூடும் என்று திட்டம் போட்டு செயல்பட்டவர்கள் எப்படி முஸ்லிம்களின் மீது அனுதாபம் காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அளுத்கம பிரச்சினையின் போது ராஜித சேனாரத்ன முஸ்லிம் மக்களின் மீது கருணை கொண்டவர்போல் நாடகமே ஆடினார் என்பது பின்னாலில் அவருடைய செயல்பாடுகள் நிறூபித்து நிற்கின்றது.

அளுத்கம பிரச்சினையின் போது மஹிந்தவோ, பசீலோ யாரும் நாட்டில் இருக்கவில்லை ஆனால் அன்று இலங்கையின் அதிகாரத்தை வைத்திருந்தவர் இன்றய ஜனாதிபதியும் அன்றய பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிரிசேன அவர்கள்தான், அவர்கள் நினைத்திருந்தால் அந்த பிரச்சினையை இலேசாக அடக்கியிருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் செய்யத் துணியவில்லை, காரணம் இந்த பிரச்சினையின் பழியையெல்லாம் மஹிந்த மீது விழுந்தால் நாளை எமக்குத்தான் அது லாபமாக வந்து சேரும் என்ற கெட்ட என்னமேயாகும்.

அண்மைகாலமாக மஹிந்த அவர்கள் பல இடங்களில் இதனை குறிப்பிட்டு வருகின்றார், என்னையும் முஸ்லிம்களையும் எதிரியாக்குவதற்கு எனக்குள் இருந்தவர்களே சதிசெய்தார்கள் என்றும் அந்த இனவாதிகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதெல்லாம் இவர்களே தடுத்தார்கள் என்றும் இதனை நான் புரிந்து கொள்ளாமல் விட்டது எனது தவறுதான் என்றும் கூறிவருகின்றார்.

அவரது கூற்றில் உண்மையுள்ளதா பொய்யுள்ளதா என்று பார்ப்பதற்கு முதல், இன்று இந்த நல்லரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள இவர்கள் அதே இனவாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே கணக்கெடுக்க முடியும் இவர்கள்தான் அவர்கள் என்று. அவர்களுடைய அரசியல் நாடகத்துக்கு முஸ்லிம்களின் உணர்ச்சிகளில் விளையாடி விட்டார்கள், இந்த சதி நாடகத்தை புரிந்து கொள்ளாத அப்பாவி முஸ்லிம்களும் அதற்குள் மாட்டிக் கொண்டார்கள்,

உண்மையிலேயே இந்த ஆட்சி மாற்றத்துக்கு அவர்கள் நினைத்தது போன்று முஸ்லிம்களின் வாக்குகள்தான் காரணமாக இருந்தது.

அதற்கு நன்றிக் கடனாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...

*இனவாதிகளை நாய்க்கூண்டில் அடைப்போம் என்றார்கள்,

*நூறு நாள் திட்டத்தில் மத நல்லிணக்க சட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார்கள்,

*அளுத்கமை பிரச்சினைக்கு விசாரணை நடத்தி உரிய குற்றவாழிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்றார்கள்,

*தம்புள்ள பள்ளிவாசலுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவோம் என்றார்கள்,

இன்னும் என்னனென்னவோ சொன்னார்கள், இன்று ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் தாண்டிவிட்டது அவர்கள் சொன்னதை நிறைவேற்றினார்களா? அவர்கள் சொன்னதற்கு மாறாகவே இன்றும் செயல்பட்டுவருகின்றார்கள், அது மட்டுமல்ல இனவாதிகளுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெறிவித்தும் செயல்படுகின்றார்கள் இதனையெல்லாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

ஆகவே,.. ஏற்கனவே மஹிந்தவை வீழ்த்தவேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டு, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு சதி செய்தவர்கள் எப்படி முஸ்லிம் சமூகத்தின் மீது கரிசணை காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆக அவர்களுடை அரசியல் நாடகத்துக்கு முஸ்லிம் சமூகத்தை பகடைகாயாக பயன்படுத்தி விட்டார்கள் என்பதே உண்மையாகும். இருந்தாலும் சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் என்பதை யாரும் மறுக்கமுடியாது, நிச்சயமாக இறைவன் இதற்கு தண்டனை வழங்குவான் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்,
கல்முனை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -