கஹட்டோவிட்ட ரிஹ்மி -
"மக்களின் நன்மைக்காக தமது சேவைகளை வழங்கும் அரச ஊழியர்கள் ஆட்சிக்கும், அரசிற்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியொன்று 5 வருடங்களுக்கு அமைக்கப்பட்டால் அங்கு ஒரு அரசியல் நடைபெறுகிறது. ஆட்சியாளர்க்கு என்று ஒரு அரசியல் கொள்கை இருக்கிறது. ஆனால் அரசை எடுத்துக் கொண்டால் அவ்வாறல்ல. அரசு தொழிற்படுவது நாட்டு மக்களின் நலவை இலக்காக வைத்து ஆகும். அதற்காக ஊழியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் நீதியானவையாகும். ஆயினும் இந்த வேறுபாடு இன்று சில ஊழியர்களிடத்தில் இல்லாதது அவர்களது சில செயற்பாடுகளைப் பார்க்கும் போது புரிகிறது. அரச ஊழியர்கள் செயற்பட வேண்டியது இந்த அரசாங்கத்தின் கொள்கைகள், தீர்மானங்களுக்கு அமையவாகும்.
சில நேரங்களில் அரசின் முடிவு, தீர்மானங்களை கருத்தில் எடுக்காமல் அரச ஊழியர் ஒருவர் நடக்கிறார் என்றால், அங்கு பாரிய பிரச்சினை இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசு என்ற வகையில், அவர்களுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டியேற்படுகிறது. அங்கு எவ்வித அரசியல் பழிவாங்கல்களோ, ஊழியர்களை கஸ்டப்படுத்தலோ இடம்பெறுவதில்லை. சிலர் இந்த அரசாங்கத்தை விமர்சிப்பது, இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் குழப்பிக்கொண்டதால் ஆகும்." என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்னர் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் செயற்படுத்தப்படும் "நில பியச" திட்டம் சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இணைந்த சேவைகள் பிரிவின் ஊழியர்களின் வருடாந்த இடமாற்றத்தின் போது, அவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையான வதிவிடப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்காக இந்த நில பியச வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், ஊழியர்களுக்கு நாடு முழுவதும் தமது சேவையினை சிரமமமின்றி வழங்க முடியுமாகிறது. உற்பத்தித்திறன் மிக்க அரச சேவையினை வழங்குவதற்கு மற்றும் திருப்தி மிக்க அரச ஊழியரை உருவாக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் சிந்தனையில் உதித்த இந்த நில பியச வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றன.
இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், "எமது அரசின் தேவை உற்பத்தித்திறன் மிக்க அரச சேவையினை மக்களுக்கு வழங்குவதற்காகும். அதற்காக இந்த இரண்டு வருடங்களில் நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
முதல் கட்டமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தினைப் பல வருடங்களின் பின்னர் முதன் முறையாக நாமே உயர்த்தினோம். மற்றும் அரச சேவையினை அரசியல் தலையீடுகள் அற்றதாக மாற்ற நடவடிக்கை எடுத்தோம். இதனால் அரச சேவையில் பாரிய சுதந்திரம் ஏற்பட்டுள்ளது. இதற்குள்தான் நான் சிந்தித்தேன், அரச அதிகாரிகளின் பாரிய பிரச்சினையான வதிவிடப்பிரச்சினையைத் தீர்ப்பது எமது கடமை என்று. அரசாங்க நிர்வாக அமைச்சர் என்ற வகையில் எனக்குத் தெரியும், ஊழியர்களுக்கு சேவையின் அவசியம் கருதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும். அதனால் அவர்கள் சமூகப்பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டனர்.
தந்தை ஒரு இடத்திலும் தாயும் சேயும் இன்னொரு இடத்தில், அல்லது தாய் ஒரு இடத்திலும் தந்தையும் சேயும் இன்னொரு இடத்திலும். இது பாரிய சமூகப்பிரச்சினை. இப்பிரச்சினையை ஒழிக்கவே ஒருவானது இந்த வீடமைப்புத்திட்டமாகும். இதன் மூலம் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். தற்போது மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 5 மாவட்டங்களில் 5 திட்டங்களை ஆரம்பிப்பது எமது எண்ணமாகும்.
இவற்றை நாம் அரச ஊழியர்களுக்காகச் செய்வதன் மூலம், அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது உச்ச பட்ச சேவையினை மக்களுக்கு வழங்குவதற்காகும். இதில் அரசியல் கிடையாது. அதுதான் நான் கூறுகிறேன், அரசும் ஆட்சியும் வேறு வேறு என்று. தமது அரசியல் கருத்துக்களை கூறும் சுதந்திரம் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகம் உண்டு. ஆயினும் சேவை புரியும் இடத்தில் அரசாங்கத்தின் ஆதரவாளனாகவோ அல்லது எதிர்ப்பாளனாகவோ அல்லாமல் அரச ஊழியனாக செயற்பட வேண்டும். இன்று ஜனநாயக உரிமை அதிகமாக உள்ளது. விரும்பியவர்க்கு விரும்பிய கருத்தை கூறலாம். ஆயினும் சேவைக்காலத்தில் அதனை தவிர்க்க வேண்டும். எங்களுக்கு வேண்டும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு. அதற்காக சகல கட்டங்களிலும் அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம்" என்றார்.
இந்நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் மேலதிக செயலாளர்கள், சிரேஸ்ட உதவி செயலாளர்கள், வீடமைப்புத்திட்டத்தின் ஒப்பந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.