அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத்திட்டம் மொனராகலையில் ஆரம்பம்

நாடு தழுவிய ரீதியில் உள்ள அரச ஊழியர்களுக்காக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அமைத்து வரும் வீடமைப்புத்திட்டத்தின் முதலாவது திட்டமான மொனராகலை மாவட்ட வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் 03 ஆந் திகதி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். மொனராகலை மாவட்டச் செயலகத்தின் பழைய கட்டிட வளாகத்தில் இது அமைக்கப்பட்டு வருகிறது. நான்கு மாடிக்கட்டடமாகக் கட்டப்படும் இத்தொகுதியில் மொத்தம் 32 வீடுகள் அமையப்பெறும். அத்துடன் வீடொன்றின் பரப்பளவு 1200 அடிகளாகும். இதற்கான செலவு சுமார் 300 மில்லியன்களாகும்.

அரச சேவைக்கு உள்வாங்குதல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் அரச ஊழியர்களின் வதிவிடப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதல் என்பன தமது அமைச்சின் முக்கிய பொறுப்புக்களாக இனங்கண்டுள்ள அரசாங்க நிர்வாக அமைச்சு, அப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்காக இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. முக்கியமாக, இடமாற்றங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வதிவிடப்பிரச்சினை அதிகமாகக் காணப்படும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைப் போன்று கஷ்டப்பிரதேசங்களான மொனராகலை, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலும் வீடமைப்புத்திட்டங்கள் அமைவதன் மூலம் அரச ஊழியர்களினது பெரியதொரு பிரச்சினைக்குத் தீர்வு வழங்க தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

மொனராகலை போன்ற கஷ்டமான மாவட்டங்களுக்கு வெளியில் இருந்து வரும் அரச ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரதான் பிரச்சினையான வதிவிடப்பிரச்சினையானது இனிமேல் இடம்பெறாமல் பார்ப்பது எமது அரசினதும், அமைச்சினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அரச ஊழியர்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் பெறுவது வழமையாகும். இவ்வாறு வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இடமாற்றம் பெறும் மேலதிகாரிகளுக்கு வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. தன்னுடைய சேவைக்காலம் முடிந்த பின்னர் குறித்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், அதே போன்று வீடு அவசியமான ஒரு ஊழியருக்கு அவ்வீடு வழங்கப்படும்.

இதற்குச் சமாந்தரமாக நடைபெறும் கம்பஹா மாவட்ட வீடமைப்புத் திட்டத்தின் வேலைகள் எதிர்வரும் 04ஆந் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அங்கும் 32 வீடுகள் அமையப்பெறும். அதற்கான செலவும் 300 மில்லியனாக கணிக்கப்படவுள்ளதுடன் அது அரசாங்க நிர்வாக அமைச்சினால் வழங்கப்படும். இதற்கான இடம் களனிப் பிரதேச சபைக்கு அருகில் அமைந்துள்ள பழைய களனி ஓய்வு வளாகத்திலாகும். 

பொலன்னறுவை மாவட்ட வீடமைப்புத்திட்டத்திற்கான இடம் விரைவில் இனங்காணப்படவுள்ளது. அங்கும் 32 வீடுகள் அமையவுள்ளன. மற்றும் கொழும்பு 07 இல் இவ்வாறான ஒரு வீடமைப்புத்திட்டம் அமைப்பதற்கு அரசாங்க நிர்வாக அமைச்சு எதிர்பார்த்துள்ளதுடன், அதற்கான செலவு 985 மில்லியன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய மாவட்டங்களை விட பெரிதாக இங்கு அமைக்கப்படவுள்ள கட்டிடம் 8 மாடிகளாக இருக்கும். 

அரசாங்க நிர்வாக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் மற்றுமொரு திட்டமான "நில செவன" தற்போது அங்கு 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 32 வீடுகள் அமையப்பெறவுள்ளன. நில செவன திட்டத்தின் சிறப்பம்சமாக, இங்குள்ள வீடுகளை கொள்வனவு செய்யலாம். அங்குள்ள வீடுகளில் 80 வீதமான வீடுகளை அரச ஊழியர்களுக்கு சாதாரண விலையில் வழங்கப்படவுள்ளதுடன், மிகுதி 20 வீதமான வீடுகளை வாங்குவதற்குத் தனியார் துறையினர்க்கு வாய்ப்பை வழங்கும். 

அரச சேவையின் வினைத்திறன், உற்பத்தித்திறன் என்பவற்றை அதிகரிப்பதற்காக இவ்வாறான திட்டங்களை அரசாங்க நிர்வாக அமைச்சு ஆரம்பிப்பதுடன், இதன் மூலம் அரச ஊழியர்களின் மனத்திருப்தி அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சிறந்த மக்கள் சேவைக்கான வழியைத் திறக்கும்.

கஹட்டோவிட்ட ரிஹ்மி
ஊடக ஒன்றியம்
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -