என்.எம்.அப்துல்லாஹ்-
17-08-2017 அன்று வடக்கு மாகானசபையின் 102வது அமர்வு கைதிடியில் உள்ள வடக்குமாகாண சபா மண்டபத்தில் இடம்பெற்றது, இதன்போது விஷேட கவனயீர்ப்பு விவாதம் ஒன்றை முன்வைத்து கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் உரையொன்றினை நிகழ்த்தினார், குறித்த உரையில் அவர் முன்வைத்த கருத்துக்களின் முழுமையான வடிவம் வருமாறு.
வடக்கு மாகாணசபையும், வடக்கு மாகாண காணி அமைச்சரும் பொதுவாக வடக்கின் காணி சார்ந்த விடயங்களில் சீரான செயற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை; குறிப்பாக வடக்கு முஸ்லிம் மக்களின் காணி சார்ந்த பிரச்சினைகளில் பாராமுகமாகவே இருந்தார்கள் ஏன் வடக்கு முஸ்லிம் மக்களின் காணிகள் வடக்கு மாகாணத்தின் காணிகள் இல்லையா..? என்று கேட்க விரும்புகின்றேன்.
கடந்த மூன்றரை வருடங்களில் வடக்கு முஸ்லிம் மக்களின் காணி சார்ந்த விடயத்திலே நான் தொடராக பல்வேறு கவனயீர்ப்புக்களை, பிரேரணைகளை இந்த சபையிலே முன்வைத்திருக்கின்றேன். ஆனால் வடக்கின் காணி அமைச்சர் குறித்த விடயங்களில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை மாறாக வடக்கு முஸ்லிம் மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்கின்ற விடயத்திலே காணி அமைச்சர் முன்வைத்திருக்கின்ற கருத்துக்கள் முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு குறித்து நாம் கடுமையான வாதங்களை முன்வைத்திருக்கின்றோம். ஒட்டுமொத்த சபையும் அது குறித்து தன்னுடைய கருத்துக்களைப் பதிந்திருக்கின்றது. இராணுவ உடையோடு மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளே ஒரு சிலரின் கண்களுக்குப் புலப்படுகின்றன; ஆனால் மேலும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதை நாம் கவனிக்கத் தவறிவிடுகின்றோம்.
மறிச்சுக்கட்டியிலே வில்பத்து வனப்பிரதேசம் தொடர்பிலே 2014ம் ஆண்டு நான் ஒரு விஷேட பிரேரணையினை முன்வைத்தேன். அப்போதும் அது குறித்துப் பேசவில்லை, அண்மையில் கௌரவ உறுப்பினர் ஜயதிலக்கா அவர்கள் வில்பத்து சரணாலய விஸ்தரிப்பு தொடர்பிலே பிரேரணை முன்வைத்திருந்தார்; அதனைத் தொடர்ந்து நான் வில்பத்து விடயத்திற்கு அவசர கவனயீர்ப்புப் பிரேரணையினை முன்வைத்திருந்தேன்.
முசலி பிரதேசத்தில் 100,000 ஏக்கர் காணிகள் வனப்பிரதேசமாக அடையாளம் செய்யப்பட்டு “மாவில்லு பேணற்காடுகள்” 2011/34- 2017/03/24 என்ற விஷேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியாகியிருந்தது. இதனை இரத்துச் செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது, இந்த சபையிலும் அது குறித்து நான் பேசியிருக்கின்றேன், ஜனாதிபதிக்கு ஒரு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்றும் நிலைமைகளில் எவ்வித முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
வில்பத்து மாவில்லு வனப்பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி ஒரு விஷேட குழுவினை நியமித்தார், அந்தக் குழு இதுவிடயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தக் குழுவின் இறுதித் திகதி 20-ஆகஸ்ட் 2017 அதாவது இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றது. குறித்த குழு முழுமையான மக்கள் பங்கேற்புடனான ஆய்வுகளை நடாத்தவில்லை, வடக்கு மாகாணசபைக்கோ அல்லது காணி அமைச்சிற்கோ குறித்த விடயம் தெரியப்படுத்தப்படவில்லை. எனவே இன்றே உடனடியாக வடக்கு மாகாணசபை ஜனாதிபதிக்கு இது விடயத்தை எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும், குறித்த குழுவின் அறிக்கை வெளிவந்ததன் பின்னர் அங்கலாய்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது.
மாவில்லு பேணற்காடு விடயத்தில் எம்முடைய அணுகுமுறை பொதுவானதாக இருக்கவேண்டும்; குறித்த இனம் சார்ந்தோ அல்லது சமூகம் சார்ந்தோ இதனை அணுகுவது சிறப்பானதல்ல, அதேபோன்று அரசியல் ரீதியாகவும் இதனை நோக்க முடியாதுள்ளது. இதுவிடயத்தில் அமைச்சர் கௌரவ றிசாத் பதியுத்தீன் அவர்களின் நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது, மாகாண அரசாங்கத்தோடு இதுவிடயமாக கலந்துபேசாமல் வெறுமனே மத்திய அரசாங்கத்தோடு இது விடயத்தை அணுக முற்பட்டமை, மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவர்களுடைய ஈடுபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தியமை, இதுவிடயத்தை தான் மட்டுமே கையாளவேண்டும் என்று எண்ணுகின்றமை போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் முன்வைக்கப்பட்டிருக்கின்றது; இதுவிடயத்தை வெற்றிகொள்ள முடியாவிட்டால் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் அவர்கள் எதற்காக அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும்? அவர் தன்னுடைய பதவியை துறந்து குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகப் போராட முன்வரவேண்டும்.
அதேபோன்று முல்லைத்தீவிலே முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளையும் நாம் கருத்தில் எடுக்கவேண்டும், கௌரவ உறுப்பினர் ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவு முஸ்லிம்கள் யார் என்றும் வெளிமாவட்ட முஸ்லிம்கள் யார் என்றும் தன்னிடம் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன என்று குறிப்பிடுகின்றார்; அவருடைய அரசியலுக்கு அந்த விபரங்களை அவர் வைத்திருக்கட்டும், ஆனால் சட்டபூர்வமான விபரங்களை மாவட்ட செயலகத்திலேயே நாம் பெற்றுக்கொள்தல் அவசியமாகும், அங்கு முல்லைத்தீவு மாவட்ட காணியற்றோர் என்றே விடயங்கள் கையாளப்படல் வேண்டும். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்று விடயங்களைக் கையாளவேண்டிய அவசியம் கிடையாது. முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் முல்லைத்தீவில் எப்பிரதேசத்திலும் காணியைப் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள், அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அது அவர்களுடைய் அடிப்படை உரிமை; இதுவிடயத்தை பூதாகரமாக்க வேண்டிய அவசியம் கிடையாது, இதனை மனிதாபிமானத்தோடு அணுக முன்வரவேண்டும்.
காணிப்பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ முதலமைச்சர் அவர்களை முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் சந்திப்பதற்கு முயற்சித்தார்கள், முதலமைச்சரும் அதற்கு அனுமதி கொடுத்தார், அவருடைய வீட்டு வாசல் வரைக்கும் அவர்கள் வந்தார்கள்; அன்றைய தினம் அவரது வாயிற்காவலர்களால் முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை; முதலமைச்சர் வடக்கின் எல்லா மக்களுக்குமான முதலமைச்சர் என்றே இருக்கின்றார், ஆனால் முஸ்லிம்களைப் புறக்கணித்தமை வருத்தமளிக்கும் விடயமே.
இதுபோன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்களும் காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். யாழ்ப்பாணத்திலே பறச்சேறிவயல் என்கின்ற பிரதேசத்திற்கான அனுமதியினை முன்னையநாள் விவாசய அமைச்சரே தடுத்து வைத்திருந்தார் என்ற ஒரு தகவலும் எமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவிடயங்களில் கடந்த மூன்றரை வருடங்களாக வடக்கு மாகாண காணி அமைச்சு பாராமுகமாக இருந்திருக்கின்றது என்பதோடு இதுவிடயமாக கருத்துக்களை வெளியிடுகின்ற எமக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன, அண்மையில் மாவட்ட செயலகத்திலே இடம்பெற்ற கூட்டமொன்றில் வீட்டுத்திட்டப் பயனாளிகள் விடயத்தில் இடம்பெற்ற முறைகேடொன்றினை மக்கள் சார்பிலே சுட்டிக்காட்டினேன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உறுதி செய்திருந்தார், ஒரு அதிகாரி இதுவிடயத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பது அறியக்கிடைத்தது; அதன் விளைவு அடுத்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை, விளக்கம் கேட்டதற்கு நான் மன்னார் மாவட்ட உறுப்பினர் யாழ்ப்பாணத்தின் கூட்டங்களுக்கு என்னை அழைக்க முடியாது என்று பதில் தருகின்றார்கள்.
இதுதான் நிலைமை; இவற்றை முறையாக சட்டரீதியாக அணுகினால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்கொள்வார்கள்; பலிவாங்கப்படுவார்கள்; நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனவேதான் இவற்றை நாம் மென்மையாக அணுக முயற்சிக்கின்றோம், பொறுமையாக இருக்கின்றோம், பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றோம். எனவே முதலமைச்சர் இதுவிடயங்களில் கவனம் செலுத்தவேண்டும். என்று கேட்டுக்கொள்கின்றேன். என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவிடயமாக வடக்கு மாகாணசபையின் கரிசணை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.