இன்று இலங்கையின் அரசியல் களத்தில் முக்கிய புள்ளிகளாக உள்ளவர்கள் மைத்திரிபால சிரிசேன, மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களாவார்கள். முன்பு கட்சிகளுக்குத்தான் ஆதரவாளர்கள் இருந்தார்கள் இப்போது அந்த விடயம் மாற்றத்துக் உள்ளாகியுள்ளதை நாம் அறிவோம். நாட்டில் புரையோடிப்போயிருந்த பயங்கரவாத பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக சிங்கள மக்களின் அறுபது சத வீதமானவர்கள் மஹிந்தவை ஒரு ஹீரோவாகத்தான் இன்றும் பார்க்கின்றனர் என்ற விடயம் நாட்டின் தற்போதைய நிலைமையை வைத்து நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
இருந்தபோதும் தமிழ் மக்களில் பெரும்பாண்மையானோர் மஹிந்தவை எதிரியாக பார்க்கத் துவங்கியிருந்தனர். இந்த நேரத்தில் முஸ்லிம் மக்களின் ஆதரவு என்பது இருபெரும் கட்சிகளுக்குமாக இருந்து வந்த நேரத்தில்தான் 2010ம் ஆண்டய ஜனாதிபதி தேர்தலில் ரணில் தலைமையில் வீயூகம் அமைக்கப்பட்டு மஹிந்தவுக்கு எதிராக, பயங்கரவாதத்தை அடக்குவதற்கு முன் நின்றவரும் இராணுவ தளபதியாக இருந்தவருமான சரத்பொன்சேகாவை களத்தில் இறக்கியிருந்தார்கள், அந்த தேர்தலில் மஹிந்தவே வெற்றியடைந்திருந்தார்.
அதன் பிறகு மஹிந்த ராஜபக்ஸ ஏதோ காரணத்துக்காக ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்துக்கு முன்னமே நடத்த தீர்மானித்து 2015ல் தேர்தலை அறிவித்திருந்தார். அதன் பிற்பாடு மஹிந்தவை வீழ்த்துவதற்கு முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் ரகசிய திட்டம் தீட்டப்பட்டு, மஹிந்த ஆட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்த மைத்திரிபால சிரிசேன அவர்களையும் இன்னும் பலரையும் தங்கள் பக்கம் ரகசியமாக இணைத்துக் கொண்டார்கள்.
இந்த விடயம் அன்றய ஜனாதிபதி மஹிந்தவுக்கு தெறிந்துவிடாமலிருக்க மிக ரகசியமாகவே அந்த விடயத்தினை பேணி வந்தார்கள். இந்த விடயமானது மஹிந்தவிடமிருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு அவருக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளாராக மைத்திரி மாறும் வரைக்கும் இந்த விடயத்தை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இந்த நேரத்தில்தான் மஹிந்தவை எதிர்த்து பொதுவேட்பாளராக மைத்திரி அவர்கள் களம் இறக்கப்படுகின்றார், அதன் பின் பெரும்பாண்மையான ஐ.தே.கட்சியினதும், தமிழ் முஸ்லிம் மக்களினதும் ஆதரவை பெற்று மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக தெறிவு செய்யப்படுகின்றார்.
அந்த தேர்தலில் சிங்கள மக்களின் 58லட்சம் பேர் மஹிந்த அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள்.
மைத்திரி அவர்கள் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களினால் ஜனாதிபதியாக தெறிவு செய்யப்பட்டிருந்தாலும், தனக்கு எதிர்த்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் சுதந்திர கட்சியின் தலைவராக பதவியை ஏற்றுக்கொண்டாலும், அடுத்து எதிரே வந்த பாராளுமன்ற தேர்தலை மஹிந்தவை முன்னிறுத்தியே சந்தித்தார், அந்த தேர்தலில் மஹிந்த பிரதமராகும் நிலையிருந்தும் கடைசிநேரத்தில் நடந்த பல திள்ளு முள்ளுகளின் காரணமாக மஹிந்த ஏமாற்றப்பட்டார் இருந்தாலும் அவரது தலைமையில் 96 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெறிவு செய்யப்பட்டனர்.
இந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியோ அல்லது இந்தாட்சி வருவதற்கு முன்னின்ற சந்திரிக்கா அம்மையாரோ சுதந்தி கட்சிக்கு வாக்குகேட்க எந்த மேடையிலும் ஏறவும் இல்லை, ஜனாதிபதி மைத்திரி சு.கட்சி தலைவராக இருந்தும் கூட சு.கட்சிக்கு வாக்களியுங்கள் என்று எந்த சந்தர்ப்பத்திலும் கூறவும் இல்லை. மைத்திரி அவர்கள் நான் நடு நிலை வகிக்கப்போகின்றேன் என்று கூறிவிட்டு பேசாமல் இருந்து விட்டார்.
அதன் பிறகு மஹிந்தவின் செல்வாக்கினாலும், அவரது தனிப்பட்ட விடா முயற்சியினாலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்கு பெற்றுக்கொடுத்தார். இந்த நன்றிகூட இல்லாமல் பின்னாலில் பதவிக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சிக்கு எந்த பங்களிப்பையும் செய்யாத மைத்திரி பக்கம் சென்றதானது, அரசியல் அரங்கில் மிக கேவலமாக பார்க்கப்பட்ட செயலாகும் என்பதை நாம் அறிந்து வருகின்றோம்.
அதன் பின் மஹிந்த அணியென்றும், மைத்திரி அணியென்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி பக்கம் இருந்தாலும் சு.கட்சியின் பெரும்பாண்மையான மக்கள் கட்சிக்கு அப்பால் தனிமனித ஆளுமையை முன்னிருத்தி மஹிந்த பக்கமே இன்றுவரை இருந்து வருகின்றார்கள் என்ற உண்மையும் நாடரிந்த உண்மையாகும்.
எப்படியோ பாராளுமன்ற தேர்தலை மஹிந்தவை வைத்து ஒப்பேற்றிக்கொண்ட மைத்திரி அவர்கள், பிறகு வரப்போகும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை தனது தலைமையில் நடத்துவதற்கு பின்னிற்கின்றார் என்பதே உண்மையாகும். தனது தலைமையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலையோ, அல்லது மாகாண சபை தேர்தலையோ சந்திக்கும் போது சு.கட்சி ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவு தெறிவிக்காமல் நாம் படுதோல்வி அடைந்தால் அது அவரின் கௌரவத்தை மட்டுமல்ல, அவர் தற்போது வகிக்கும் நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவியையும் அது பாதிக்கும். அது மட்டுமல்ல தான் ஒரு மக்கள் ஆதரவு இல்லாத பொம்மை ஜனாதிபதி என்ற ஏளன பார்வைக்கும் ஆளாகவேண்டியும் வரும் என்ற பயமும் இதற்கு காரணமாகும்.
இந்த நிலைமையை சீர்செய்வதற்கு ஐ.தே.கட்சியும் அவருக்கு உதவப்போவதில்லை, அவர்கள் அவர்களின் கட்சியின் வளர்ச்சியையே குறிவைப்பார்கள், அதன் காரணமாக மைத்திரி அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் செல்வாக்கு தற்போதைக்கு கிடைக்காது போவதன் காரணமாக தன்னையொரு "டம்மி பீஸாக" உலகமும், நாட்டுமக்களும் தன்னை என்னிவிடுவார்கள் என்ற பயமும் மைத்திரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்தல்களை சந்திப்பதற்கு ரணில் அவர்களை விட மைத்திரி அவர்கள்தான் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளார் என்பதே தெளிவான விடயமாகும். இதன் காரணமாக ஏதேதோ காரணங்களை காட்டி 2019ம் ஆண்டுவரையும் தனது தலைமையில் எந்த தேர்தலையும் சந்திக்க மனமின்றி காலம் கடத்தி வருவதற்கே அவர் முயற்சிக்கின்றார்.
இது எந்தளவு அவருக்கு கைகொடுக்கும் என்பது காலம்தான் பதில் சொல்லும் என்றிருந்தாலும், அவர்களுடைய இந்த செயல்பாடு எதிரணியிரான மஹிந்த அணிக்கு இன்னும் மக்கள் ஆதரவு கூடுவதற்கு ஏதுவாக அமைந்து வருகின்றது என்கின்ற உண்மையையும் அவர்கள் அறியாமலில்லை எனலாம்.
ஆகவே எதிர்வரும் தேர்தல்கள் ரணிலுக்கோ மஹிந்தவுக்கோ சோதனையாக அமையாது விட்டாலும் ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்குத்தான் சோதனையான காலமாக அமையப்போகின்றது என்பதே உண்மையாகும்.
இந்த சோதனைகளை மக்கள் ஆதரவு இல்லாத மைத்திரி அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார் என்பதே தற்போதைக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆயிரம் வோட்ஸ் கேள்வியாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்,
கல்முனை.