அனா-
கடந்த வாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கோவைகளை உயர்த்திக் காட்டி அபிவிருத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரால் முடியுமாக இருந்தால் தேசிய ஊடகமொன்றில் விவாதத்திற்கு அழைக்கின்றேன் முடியுமாக இருந்தால் அங்கு வந்து கோவைகளை காட்டட்டும் என்று என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை 206சி கிராமத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் கிளை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் புதன்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
கல்குடாத் தொகுதியில் 2019ம் ஆண்டிற்குள் அனைத்து வீதிகளும் புனரமைத்து வடிகாண்கள் அமைத்து முற்றாக வேலைகளை முடித்து விடுவோம். இந்தப் பிரதேச பாடசாலைக்கு வந்த தளபாடங்கள் வேறு பிரதேசத்திற்கு சென்றது உங்களுக்கு தெரியும்.
இந்தப் பிரதேசத்தில் அரசியல் தலைமை இருந்த படியால் பல வேலைத் திட்டங்கள் தினமும் இடம்பெற்று வருகின்றது. அவ்வாறு இல்லையெனில் வருடத்திற்கு ஒரு தடவை தான் அபிவிருத்தி மழை வந்து போகும்.
இப்பிரதேசத்திற்கு தேசிய பட்டியல் தருவதாகவும், பாடசாலைகளுக்கு கட்டடம் தருவதாகவும், பல அபிவிருத்திகளை செய்வதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் செல்வார்கள். ஆனால் அதன் பிறகு அடுத்த தேர்தல் வரம்போகும் சிறிது காலங்களில் தான் பார்க்க முடியும். நாங்கள் அவ்வாறு அல்ல. உங்களின் அபிவிருத்திக்காகவும், உரிமைக்காகவும் என்றும் உங்களுடன் இருப்பவர்கள்.
கல்குடா பிரதேசத்தில் ஒருசில குறுநில மன்னர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் தான் அவர்களது இலாபத்திற்காக தேர்தல் காலங்களில் வரும் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குபவர்களாகவும், அவர்கள் செய்யும் தவறுகளை மறைத்து பிரச்சாரம் செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு பிரதேசத்தில் அபிவிருத்தி நடந்தாலும் ஒன்று நடக்காவிட்டாலும் ஒன்றுதான், அவர்களது பக்கட் நிரம்பினால் போதுமானதாக உள்ளனர்.
கிழக்கு மாகாண சபை கலைத்து விட்டால் எனக்கு தொங்க கயிறு இல்லையே என்கின்ற பயம், அச்சம் அவரை அழுத்திக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஆரம்பித்து வைத்த வேலைகளை திறந்து வைத்த நிகழ்வுகள் ஏராளம் இருக்கின்றது என்றார்.
இதற்கு பதிலளிப்பாரா முதலமைச்சர் ? காத்திருப்போம்..