சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரம் - சில கேள்விகளும், சந்தேகங்களும்

மீண்டும் சூடுபிடித்துள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரமும், சில கேள்விகளும், சந்தேகங்களும். மிக நீண்ட காலமாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்ற கோரிக்கை இருந்துகொண்டு வருகின்றது. இந்த கோரிக்கை சில காலங்களில் மூர்க்கமடைவதும், பின்பு சோர்வடைவதுமாக காணப்பட்டது. 

இவ்வாறாக இந்த கோசம் சோர்வடைந்து கிடப்பிலிருந்த நிலையில் கடந்த 12.08.2017 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுயதொழிலுக்கான உபகரணங்களை வளங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் ஹரீஸ் அவர்கள் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக பகிரங்க அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். 

அதாவது சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளூராட்சிமன்ற கோரிக்கை பல அழுத்தங்களுக்கு மத்தியில் விரைவில் கிடைக்க இருக்கின்றது என்பதுவே அந்த அறிக்கையாகும். 

அத்துடன் இது முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி மட்டுமல்லாது, இதற்காக பிரதமர் ரணிலிடமிருந்து வாக்குறுதியினை பெற்றுக்கொடுத்ததாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வந்ததாகவும் தற்போது அதற்கான காலம் கணிந்துள்ளது என்றும் தனது உரையில் கூறியிருந்தார். 

பிரதி அமைச்சர் ஹரீசின் குறித்த உரையானது அதே 12 ஆம் திகதியன்று ஊடகங்களிலும், முகநூல்களிலும் வெளியாகியது. அதன்பிற்பாடு, அதாவது மறுநாளான 13 ஆம் திகதி மாலை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தரப்பிலிருந்து அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்ததாகவும், விரைவில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி வர்த்தமானி அறிக்கை வெளியாக இருக்கின்றது என்றும் அறிக்கை வெளியாகியிருந்தது. 

இதன் பிற்பாடுதான் இன்னும் பெற்றுக்கொள்ளப்படாத இந்த உள்ளூராட்சி மன்றத்துக்கு உரிமையாளன் யார் என்ற பட்டிமன்றம் முகநூல் வாயிலாக விவாதிக்கப்பட்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது. 

இங்கே கேள்வி என்னவென்றால், பிரதி அமைச்சர் ஹரீஸ் 12 ஆம் திகதிய அந்த அறிக்கை வெளியிடாது இருந்திருந்தால், 13 ஆம் திகதி அமைச்சர் ரிசாத்தின் தரப்பிலிருந்து உரிமை கோரலுடனான அறிவிப்பு வெளியாகி இருக்குமா? 

உண்மையில் ரிசாத் தரப்பினர்கள்தான் இதற்கு உரிமையாளர் என்றால், அதே 12 அல்லது அதற்கு முந்திய தினங்களில் இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டிருக்கலாமே ? பிரதி அமைச்சர் ஹரீசின் அறிவிப்பு வெளிவரும் வரைக்கும் இவர்கள் ஏன் வாய்மூடி இருந்தார்கள் என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றது. 

இந்த உள்ளூராட்சிமன்றம் கிடைக்கின்ற சாதகமான சூழ்நிலை இருந்தபோது, தாங்கள் அதில் பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினை சாய்ந்தமருதுக்கு அழைத்துவந்து விரைவில் சபை கிடைக்க இருப்பதாகவும், அதற்காக அமைச்சர் ரிசாத் பாடுபடுவதாகவும் விளம்பரம் செய்தார்கள். 

பின்பு மீண்டும் இது இழுபறிபட்டதனால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்தான் அதிகாரம் உள்ள கட்சியாகும். எனவே அவர்களால்தான் இதனை பெற்றுத்தர முடியும் என்று பந்தை முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் திருப்பினார்கள். 

உள்ளூராட்சி மன்றத்துக்கான சாதகமற்ற சூழ்நிலை தெரிகின்றபோது பழியை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பின்மீது போட்டுவிட்டு விமர்சிக்க முடியுமென்றால், அதே அதிகாரம் உள்ள முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியாமல் உள்ளூராட்சி மன்றம் மலருமா? என்ற கேள்வியும் எழுகின்றது. 

எனவே முஸ்லிம் காங்கிரசின் முழு அதிகாரத்துக்கு உள்பட்ட பிரதேசத்தில் தனியான உள்ளூராட்சி மன்றமானது முஸ்லிம் காங்கிரசின் அழுத்தம் இல்லாமலும், முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியாமலும் நடைபெறப்போவதில்லை என்ற உண்மையை விளங்கி கொள்வதுடன், உண்மையில் இந்த சபை கிடைத்தால் அரசியலுக்கு அப்பால் நின்று அதற்காக உழைத்த சிவில் அமைப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். 
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -