நல்லூர் திருவிழா நிறைவடைந்த பின் வாள் வெட்டு குழுக்களுக்கு கடும் நடவடிக்கை - எஸ்.டி.ஐ.ஜி

பாறுக் ஷிஹான்-
டக்கில் உள்ள வாள் வெட்டுக்குழுக்கள் எங்களுக்கு பெரிய சவாலான விடயமல்ல.இப்பிரச்சினையை மிக விரைவில் அடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவேன். எமது மக்கள் பாதுகாப்பிற்காக சுமார் 600 வரையான பொலிஸார் தற்போது நல்லூர் திருவிழா பாதுகாப்பு கடமையில் நிலைகொண்டுள்ளனர். இத் திருவிழா நிறைவடையட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கின்றேன் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் எமது ஊடகவியலாளருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டில் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டபோது அந்த முதலாவது படையணியில் நான் இருந்தவன். போர்க்காலங்களில் வடக்கில் சிறப்பு அதிரடிப் படையில் கடமையாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.அவ்வாறு இருந்த எனக்கு ஆவா குழுக்கள் போன்ற வாள் வெட்டு குழுக்களின் பிரச்சினை ஒரு பெரிய விடயமல்ல . 

ஆவா குழுவை சேர்ந்த 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் .கடந்த ஜனவரியில் சிலர் பிடிபட்ட போதிலும் ஒரு சிலர் தப்பி சென்றிருந்தனர். அவ்வாறு தப்பியவர்களில் ஒருவரே விக்டர் நிசா என்று அழைக்கப்படுபவரான நிசாந்தன். அவர் மேலும் சிலரை சேர்த்துக்கொண்டு கடந்த காலங்களில் ஒரு குழுவாக இயங்கி வந்தார்.

மேலும் இதுவரை நாம் கைது செய்யப்பட்டவர்களில் எவரையும் துன்புறுத்தவில்லை .இதில் மாணவர்கள் இருவர் க.பொ.தர (உ/த) பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தவிர இப்பிரச்சினையை கட்டுப்படுத்தும் முகமாக முன்னர் ஆவா குழுவில் இருந்தவர்களும் கைது செய்யப்படவுள்ளனர்.

இப்பிரச்சினை எழுவதற்கு காரணம் பாடசாலை முடிந்ததும் இளைஞர்கள் பலருக்கு வேலை கிடைப்பதில்லை.அதனால் அவர்கள் ஆங்காங்கே குழுக்களாக சேர்கிறார்கள் பின்னர் மது பாவனைக்கு ஆளாகின்றனர். பின்னர் போதைக்கும் தங்களை அடிமையாகி கொள்கின்றனர்.

இது தவிர வெளிநாடுகளில் இருக்கும் கிடைக்கும் பணத்தில் மோட்டர் சைக்கிள்களை அவ்விளைஞர்கள் வாங்குவதுடன் பின்னர் அவர்கள் குழுக்களாகச் சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் . தற்போது நல்லூர் திருவிழா பாதுகாப்புக் கடமையில் 600 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதனுடன் பொலிசாரின் நடமாடும் சேவையும் இடம்பெறுகிறது. எனவே தான் நல்லூர் திருவிழாவை நிறைவடையட்டும் என்று காத்து கொண்டிருக்கின்றேன்.என்ன செய்வேன் என்று இப்போது கூற மாட்டேன் என கூறினார்.

இதே வேளை அண்மையில் துன்னாலை பகுதியில் பொலிசாருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சரணடைய வேண்டும் .அதன்பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக இணக்கம் குறித்து ஆராயலாம்.அப்படி செய்யா விட்டால் தேடப்படுபவர்களைக் கைது செய்வதற்கான வேட்டை தொடரும் என எச்சரிக்கையுடன் அறிவுறுத்த விரும்புகின்றேன்.

மேற்படி விடயம் குறித்து கடந்த வியாழக்கிழமை(17) அன்று எனது அலுவலகத்தில் வைத்து துன்னாலை கிராமத்தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். இதன் போது சுமார் 10 பேர் கொண்ட இக்கிராமத்தைச் சேர்ந்த தலைவர்கள் என்னால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகளும் பிரசன்னமாகி இருந்தனர். இந்த கூட்டத்தில் நான் குறிப்பிட்ட விடயம் என்ன வெனில் துன்னாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து பொலிஸாரினால் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர். ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இக்கிராம தலைவர்கள் தமது கிராமத்தவர்கள் மீதான நடவடிக்கையை பொலிஸார் கைவிட வேண்டும் என கோருகின்றனர். அது தொடர்பில் நான் அவர்களுக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளேன். அதாவது வடமராட்சிப் பகுதியில் இடம்பெறுகின்ற மணல் கடத்தல் மாடு வெட்டுதல் உள்ளிட்ட பல குற்றங்களில் துன்னாலையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். அதனைத் தடுக்கப் பொலிஸார் சுற்றுக்காவலில் ஈடுபடுகின்றனர். அப்படி மணல் கடத்தினார்கள் என்று சந்தேகப்படுபவர்களைத் துரத்திச் சென்ற போதே எதிர்பாராத அந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. பொலிஸார் அவர்களை வேண்டும் என்று சுட்டுக்கொல்லவில்லை

எனினும் அவர்களை சுட்ட 2 பொலிஸ் உத்தியோகத்தவர்களும் தற்போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதெல்லாம் நடந்த பின்னர் தான் பொலிஸ் ஜீப் சிறப்பு அதிரடிப்படையினரின் பவள் வாகனம் ஆகியன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கற்கள் வீசப்பட்டுள்ளது. பொலிஸ் சோதனை சாவடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சாலையில் ரயர்கள் போட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டனர். பொலிஸ் உத்தியோகத்தரின வீடு சேதமாக்கப்பட்டது.இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டனர்.இன்னும் பலர் தலைமறைவாகி உள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இருந்தால் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நாம் சந்தேகிக்கின்ற சுமார் 20 பேரையும் சரணடையச் சொல்லுங்கள் சரணடைந்தால் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக இணக்கத்தை எட்டலாம். அவர்கள் சரணடையாது விடுவார்களேயானால் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் என்று கூறினேன். மேலும் எனது கருத்தான சந்தேக நபர்களைச் சரணடையச் செய்வது தொடர்பில் கூட்டத்திற்கு வந்திருந்த கிராமத்தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. என்பதையும் இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன்.

மேற்படி இக்கூட்டம் இடம்பெற்ற வேளை என்னுடன்இராணுவ உயர் அதிகாரிகள் யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வடமராட்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் உடனிருந்தனர் என தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -