முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் 34 பேரின் கையொப்பத்துடன் கடந்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்காக அவசரமாக திகதியொன்றை நிர்ணயிக்க இன்றைய கூட்டத்தில் கோர இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஏனைய கட்சிகளும் துரிதமாக திகதி யொன்றை ஒதுக்குவதற்கு ஆதரவு வழங்கும் எனவும் அறியவருகிறது.
திறைசேரி முறி மோசடி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளின் பிராகாரம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் மோசடியுடன் தொடர்பு இருப்பது புலனாகியுள்ளதால் அவரை பதிவி விலக்க வேண்டும் என்று கோரி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது.
இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வ தன்மை குறித்து ஆராய்ந்த பின்னர் அதனை ஏற்பதா? இல்லையா என சபாநாயகர் சபையில் அறிவிப்பார் எனவும் அதற்கேற்ப திகதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிய வருகிறது.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை தனித்தனியாக பெயர் கோரியே நடத்த வேண்டும் என பந்துல குணவர்தன எம்.பி கோரியுள்ளார்.