பி.எம்.எம்.ஏ.காதர்-
இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம்தான் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக்காண முடியும் அதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் நாங்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது என கிழக்கு மாகாண சுகாதார. சுதேச வைத்தியத்துறை.சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார. சுதேச வைத்தியத்துறை.சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் கீழ்உள்ள சமூக சேவைத் திணைக்களத்தின் தொழில் பயிற்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தலைமையில் சனிக்கிழமை (26-08-2017) பெரியநீலாவணையில்; நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பின்னிப்பிணைந்து வாழுகின்ற பிரதேசம் மருதமுனை. பெரியநீலாவணை பிரதேசமாகும் இந்தப் பிதேசத்திலே இந்தப் பயிற்ச்சி நிலையத்தை அமைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆகவே இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நாங்கள் ஒற்றுமையைக் கையாளுகின்ற போதுதான் எந்த ஒரு தீர்வும்,எந்த ஒரு எண்ணமும் எதிர்காலத்திலே கிடைக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எனது அமைச்சின் கீழ் உள்ள சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் நல்ல ஆழுமையும்,ஆற்றலும் உள்ளவர். எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் பணிக்கின்ற எந்த விடையமாக இருந்தாலும் அதை அமைதியாச்; செவி மடுத்து கண்ணியமாக மதித்து செய்கின்ற ஆழுமை உள்ளவர்தார் அன்சார். வசதி இல்லாத மக்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு எப்போதும் எனது பணிப்புரை உங்களுக்கு இருக்கிறது என்றார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம்.அப்துல் றஸாக்(ஜவாத்), எம்.ராஜேஸ்வரன், ஏ.எல்.தவம், கிழக்கு மாகாணசபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஆகியோருடன் அமைச்சினதும் திணைக்களத்தினதும் அதிகாரிகளும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
.மூன்று மாடிகளைக் கொண்ட இந்தப் பயிற்சி நிலைய நிர்மானத்திற்கு முதல் கட்ட நிதியாக ஐம்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார். மேலும் வசதி குறைந்த தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டதுடன் நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.