கிழக்கு மாகாணத்திற்கான கேரளா கஞ்சா விற்பனையின் முக்கிய முகவர்களென சந்தேகிக்கப்படும் இருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸார் கஞ்சா வாங்குவதாக குறித்த முகவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கஞ்சாவை ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்திற்கு எடுத்து வருமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டு கிலோ கேரளா கஞ்சாவை எடுத்த வந்த இரு கஞ்சா வியாபாரிகளை ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.
இச்சந்தேக நபர்கள் மிக நீண்ட நாட்களாக இப்பிரதேசத்தில் கேளரா கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.