கஹட்டோவிட்ட ரிஹ்மி -
"நாங்கள் எல்லோரும் இந்த நிலமைக்கு வந்ததற்கு, நாட்டின் இலவசக்கல்விக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கல்வியினைப் பெற்று இன்று பதவி, சலுகைகளை அனுபவிக்கும் எங்களது பொறுப்பாக இருப்பது அக்கடனை நாட்டுக்காக செலுத்துவதாகும். அது நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றவேண்டிய ஒன்று என்பது மட்டுமல்லாமல், எங்களது எதிர்கால சந்ததியினருக்காக மேற்கொள்ள வேண்டிய கடமையுமாகும். இங்கு அரச சேவைக்குப் புதிதாக நியமனம் பெறும் நீங்கள் தாபன விதிமுறை, நிதி முறைமை போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டியது, மக்களுக்கு முறையான பணியை செய்வதற்கே அன்றி வேலை செய்யாமல் இருப்பதற்கான கருவியாக அல்ல" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் தெரிவித்தார்.
சென்ற 21 ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலங்கை கட்டிட நிர்மாண சேவைக்குப் புதிய பணியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இலங்கை கட்டிட நிர்மாண சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதவற்கு புதிய ஊழியர்கள் 10 பேர் உள்வாங்கப்பட்டதுடன், அவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளனர். இச் சேவையில் இன்னும் 5 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், அதற்கும் எதிர்காலத்தில் நியமனம் வழங்கப்படும்.
இங்கு செயலாளர் அவர்கள் மேலும் உரையாற்றுகையில், "அரச சேவையில் இணைந்து கொள்ளும் சகலரும் நாட்டின் எப்பாகத்திலும் சேவை புரிவதற்கு கடமைப்பட்டுள்ளனர். இன்று நியமனம் பெறும் உங்களுக்கும் கூறிக்கொள்வது, இன்று பெற்றுக்கொள்ளும் நியமன இடத்தினை மாற்றிக்கொள்ள நாளை வர வேண்டாம். ஏனெனில் உங்களது சேவை நாட்டின் தூரப்பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு மிகவும் அவசியமாகிறது. நாட்டின் சகல நடவடிக்கைகளையும் ஆரம்ப திட்டமிடுபவர்கள் நீங்கள். அதனால் நீங்கள் திட்டமிடும் சகலதும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்ற, அதிக வினைத்திறனான திட்டமாக இருக்க வேண்டும். இச் சேவையில் இருக்கும் போது அரச சேவையின் பெயருடன், தனியார் வருமான வழிகளும் உருவாகும். ஆயினும் அரச சேவையையும் தனியார் நடவடிக்கைகளையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. எந்த நேரத்திலும் அரச சேவைக்கு முதலிடம் கொடுங்கள். அதன் போது முன்னே செல்வதற்கான வழி தானாகப்பிறக்கும்" என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.