ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நல்லாட்சி அரசு காலத்தைக் கடத்தக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்மைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27.08.2017) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது மேலும் அவர் கூறியதாவது;
நல்லாட்சி அரசு உருப்படியான ஒரு அரசியல் தீர்வைத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னிலங்கையிலிருக்கின்ற அடிப்படைவாதிகள் குழப்புகின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு காலத்தை இழுத்தடித்து சிறுபான்மை மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது. பேரினவாத சக்திகளும் அடிப்படைவாதிகளும் சிறுபான்மை மக்களை மோதவிட்டு குளிர்காய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
தற்போது 2 வருடங்களைக் கழித்த நல்லாட்சி அரசு என்ன செய்து முடித்தது என்று மீள் பார்வை செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். அரசியல் தீர்வுக்கான கால இழுத்தடிப்புக்கள் என்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. காணாமலாக்கப்பட்டவர்களின் விடயத்தில் பொறுப்பற்ற வித்ததில் நல்லாட்சி அரசு இருக்கமுடியாது.
காணாமலாக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டிய அவசியமும் இந்த நல்லாட்சி அரசுக்கு இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணைங்க பிரதம அமைச்சர் அவர்கள் வடக்கு கிழக்கிலே வீடுகளை இழந்து இழந்வர்களுக்கு 50000 கல்வீடுகளை அமைப்பதற்கு ஓதுக்கீடுகளைச் செய்வதற்கு அமைச்சரவைத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றார். இதனை நாம் பாராட்டுகின்றோம். யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மற்றும் அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்களையும், வழங்க இந்த அரசு துரிதமாக செயற்பட வேண்டும்.