கைக்கூலி கொடுக்கும் முறை என்பது பல காலமாக இலங்கை முஸ்லிம்களிடம் வழக்கில் உள்ள ஒன்று. அந்த வழக்கு நூறு வீதம் ஒழிக்கப்பட்டால் அப்படி ஒன்றை பதிவிடும் தேவை இல்லை. ஆனால் அனைத்து திருமணங்களிலும் கைக்கூலி வழங்கப்படுகிறது. பலர் அவற்றை குறிப்பிடாமல் விடுகின்றனர்.
கைக்கூலி என்றதும் பலரதும் மனதில் தோன்றுவது மணமகள் தரப்பில் சீதனமாக, கைக்கூலியாக மணமகனுக்கு கொடுக்கப்படும் காணி அல்லது பணம் என்று மட்டுமே பலரும் நினைக்கின்றனர். அதனால் காணி, பணம் கொடுக்கப்படாவிட்டால் கைக்கூலி என்ற இடத்தில் இல்லை என பதிவிடுகிறார்கள்.
உண்மையில் மணமகள் தரப்பில் அவளுக்கு வழப்க்கப்படும் அனைத்தும் சீதனம்தான். அந்தப்பெண் அணியும் ஆடை தொடக்கம் அவள் கழுத்தில், காதில் போடும் நகைக்களும் சீதனம்தான். அவை அனைத்துக்கும் இன்னொரு சொந்தக்காரனாக அவளது கணவனும் இருப்பதால் அவையும் கைக்கூலிதான். ஆனால் இவற்றை யாரும் குறிப்பிடாமல் எமது திருமணத்தில் கைக்கூலி இல்லை பலரும் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களின் அனைத்து திருமணங்களிலும் இந்த வகை சீதனமும், கைக்கூலியும் இடம் பெறுகிறது. பெண்ணை இஸ்லாத்துக்கு முரணாக இழுத்துக்கொண்டு ஓடும் திருமபங்களில்தான் பெண் அணிந்துள்ள நகையும் வேண்டாம் என கூறி களட்டி வைத்து விட்டு ஓடி விடுகிறார்கள். ஓடும் போதும் அவள் அப்பன் வாங்கிக்கொடுத்த ஆடையுடன் அவளும் ஓடுகிறாள் என்பதால் அதில் கூட பெண்ணின் தந்தையின் சீதனம் இடம்பெறுகிறது என்பதை பலரும் சிந்திப்பதே இல்லை.
எனவே இப்படியாக அனைத்து திருமணங்களிலும் சீதனமும் கைக்கூலியும் இடம் பெறுவதால் நாளை திருமண முறிவு ஏற்பட்டால் மணமகளுக்கு அவளது தந்தை வழங்கிய சீதனத்தை அவளது கணவன் சுருட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே நமது படித்த முன்னோர் திருமண பதிவில் சீதனம், கைக்கூலி வழங்கப்பட்டதா என்ற பாராவை ஏற்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக ஒரு பெண் திருமணம் முடிக்கும் போது அவள் காது, கழுத்து என சுமார் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நகையை அசள் தந்தை அவளுக்கு சீதனமாக வழங்கி பின்னர் ஒரு அவசரத்துக்கு அந்த நகையை அவள் கணவன் அவளிடமிருந்து பெற்று வாழ்க்கைத்தேவைக்காக விற்று விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். பின்னர் இரண்டொரு வருடத்தில் அவர்களுக்கிடையில் திருமண முறிவு ஏற்பட்டால் அந்த நகையுடன் அவளை நான் மண முடிக்கவில்லை என அவள் கணவன் வாதிட்டால் அவள் எந்த ஆதாரத்தை வைத்து அதனை நிரூபிப்பாள்? திருமணப்பதிவிலாவது குறிப்பிட்டிருந்தால் அதனை நீதிவான் ஏற்று அதனை திருப்பி கொடுக்கும் படி ஏவுவார்.
இவ்வாறு மணப்பெண் அநீதிக்குள்ளாக்கப்பட்டு விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டமாகும். நீங்கள் எதனை கொடுத்தாலும் அதனை எழுதிக்கொள்ளுங்கள் என்பது இறை கட்டளை. அந்த இஸ்லாத்தின் சட்டப்படியே நமது நாட்டு முஸ்லிம் திருமண சட்டத்தில் சீதனம், கைக்கூலி வழங்கப்பட்டதா என்ற கேள்வி இடம்பெறுகிறது. அவ்வாறு வழங்காதவர்கள் அதில் எதையும் குறிப்பிட தேவையில்லை. ஆனால் வழங்கப்பட்டால் என்ன செய்வது என்பதற்காகவே அந்த பாரா உள்ளது.
சிலர் கேட்கலாம் அது என்ன பத்தாயிரம் ரூபா பெறுமதியான அவள் நகைதானே என. பத்தாயிரமோ பத்து சதமோ அதுவும் அவளிடமிருந்து பெறப்பட்ட பின் மறுக்கப்பட்டால் அது அவளுக்கு செய்யும் அநீதியாகும்.
முஸ்லிம் திருமண சட்டத்திருத்தம் பற்றி சுமார் ஐந்தாறு வருடங்கள் முன் கொழும்பு வை எம் எம் ஏயில் ஜமிய்டத்துல் உலமா மற்றும் இட்லாமிய இயக்கங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் உலமா கட்சி சார்பாக கலந்து கொண்ட போது மேற்படி சரத்தை நீக்க வேண்டும் என அனைவரும் கூறிய போது நான் மட்டும் அதனை மறுத்தேன். அவ்வாறு நீக்கும் பட்சத்தில் பெண்ணுக்கு அவள் தந்தை சீதனமாக கொடுத்த அவளது நகைகள் அவள் கணவனால் அபகரிக்கப்பட்டு அவள் விரட்டப்பட்டால் அதற்கு நீங்கள் இறைவனிடம் பொறுப்பாவீர்களா எனக்கேட்டேன்.
ஆகவே முஸ்லிம் திருமண பதிவில் உள்ள சீதனம் கொடுக்கப்பட்டதா என்ற சரத்து நீக்கப்படாமல் இருப்பதே திருமண விலக்கலின் போது பெண்ணுக்கு அநியாயம் நடப்பதை தவிர்க்க முடியும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி.
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி