அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ கிராமங்களில் உள்ள மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருவதினால் உடனடியாக நிறுத்துமாறு கோரி இன்று (06) மகஜரொன்றினை கையளித்தனர். ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி வாயல்- விவசாய சங்கம்-கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராம பொது அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள் கையொப்பமிட்டு இம்கஜரை கையளித்தனர்.
இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக விளங்கும் ரொட்டவெவ கிராமத்தில் நாம் பூர்வீகமாக குடியிருந்து வருகின்றோம்.எமது பிரதான வாழ்வாதார தொழிலாக வேளாண்மையும் -சேனைப்பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.இதே நிலைமைதான் எமது பக்கத்து ஊர் சகோதர இனத்தவர்களின் தொழிலாகவும் காணப்படுகின்றது.
எமது ஊர் உயர்நிலப்பிரதேசமாக இருப்பதினால் அநேகமானோர் மேட்டு நிலப்பயிர்ச்செய்கையையே பிரதானமாக செய்து வருகின்றனர்.இம்மேட்டு நிலக்காணியானது எமது மூதாதையர்களால் செய்து வந்த போதிலும் குறிப்பாக 1970ம் ஆண்டுக்குப்பிறகு நாம் தொடர்ச்சியாக குறிப்பிட்ட மேட்டு நிலக்காணியில் வாழ்வாதார தொழிலாக செய்து வந்த சேனைப்பயிர்ச்செய்கை 1990ம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சிறிது காலம் இடையூறு ஏற்பட்டாலும் தொடர்ந்தும் அக்காணியில் பயிர் செய்து வருகின்றோம்.
எனினும் அண்மைக்காலமாக வன இலாக்கா அதிகாரிகளின் கெடுபிடிகளினால் எமது பூர்வீக காணிகள் பறிபோய் கொண்டிருப்பதுடன் தொடர்ந்தும் அபகரிப்பதற்கான நடவடிக்கைகளும் அறிவித்தல்களும் இவ்வதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகளிடம் எழுத்து மூல அறிவித்தல்கள் வழங்கிய போதிலும் சாத்தியமான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
1979ம் ஆண்டின் 07ம் இலக்க அரச காணிகள் மீளப்பெறல் 03ம் பிரிவின் கீழ் வௌியேற்றும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2015ம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான ஜந்து ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினருக்கு வீடமைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும், ரொட்டவெவ மிரிஸ்வெவ பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிக்குள் பொலிஸ் நிலையத்தை நிறுவுவதற்காக மொறவெவ பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நடைபெறுவதை நிறுத்தி மிருக வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள அரச காணியில் பொலிஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை தேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் எனவும் அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ரொட்டவெவ கிராம மக்கள் பயங்கரவாத பிரச்சினை காரணமாக 1984ம் ஆண்டு முதல் 1994ம் ஆம் ஆண்டு வரையான காலப்பகுயில் இரண்டு முறை இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் எமது கிராமத்திற்கு உற்பட்ட மிரிஸ்வெவ பகுதியில் 1990ம் ஆண்டு இடம் பெயர்ந்து கடந்த 2005ம் 2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் மீள்குடியேறிய பிரதேசமாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்திலும் 2015ம் ஆண்டு 2016ம் ஆண்டுகளில் தொடர்ந்தும் பகுதி பகுதியாக எமது காணிகள் வன இலாக்கா அதிகாரிகளினால் அபகரிக்கப்பட்டு வந்தது. ஆகவே இதே தொடரில் தொடர்ந்தும் வன இலாக்கா அதிகாரிகளினால் எமது மேட்டு நிலக்காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
ஏற்கனவே பலமுறை காணிக்கச்சேரிகள் நடைபெற்றும் எமது மக்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.ஆனாலும் இக்காணிகள் சம்பந்தமாக நாங்கள் பிரதேச செயலகத்தில் வினவிய சந்தர்ப்பங்களில் காணிகள் சம்பந்தமாக 2012ம் ஆண்டுக்கு முன் எவ்வித ஆவணங்களும் இல்லையென அதிகாரிகள் கூறுகின்றனர்.மேற்படி 1979ம் ஆண்டின் 07ம் இலக்க எமது பூர்வீக காணிகள் திட்டமிட்டு அபகரிக்கும் செயற்பாடுகள் இதாடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
ஆகவே எமது ரொட்டவெவ-மிரிஸ்வெவ-புளியங்குளம் போன்ற பூர்வீக காணிகளை நல்லாட்சி அரசிலாவது விடுவித்து தருமாறு தயவாய் வேண்டிக்கொள்கின்றோம் எனவும் அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மகஜர் கையளிக்கும் நிகழ்வில் மொறவெவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர்.ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளி வாயல் தலைவர் மௌலவி அப்துல்சத்தார். பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.