பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
கடந்த இரண்டொரு தினங்களாக இணையத் தளங்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைப் பற்றிய தனிநபர் நடத்தை சம்பந்தமான பாரிய குற்றச்சாட்டுகள் பேசுபொருளாகியிருக்கின்றன. ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு சமூகத்தின், அந்த சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியின் தலைவர் என்பதனால் அவரைப் பற்றி முன்வைக்கப்பட்டிருக்கும் ஒழுக்க ரீதியான குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவுள்ளன.
ஒரு சாதாரண குடிமகன் செய்யும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் சமூக மற்றும் அரசியற் தலைவர்கள் புரிகின்ற ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக எழுகின்ற விமர்சனங்கள் வித்தியாசமானவையாகவே இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரும் வல்லரசுகளின் தலைவர்கள் மீது சாட்டப்பட்ட அல்லது எழுப்பப்பட்ட தனிநபர்க் குற்றச்சாட்டுகளினால் அந்தப் பெரும் வல்லரசுகளைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருந்தோர் தமது பதவிகளை இராஜினாமா செய்த வரலாறுகளும் இன்னும் சில நாடுகளில் குற்றம் புரிந்த தலைவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்த வரலாறுகளும் நமக்கொன்றும் புதியவை அல்ல.
ஆனால், நமது இலங்கை நாட்டில் அரசியல் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் அடிமை விலங்கொடிக்க அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து, அல்குர்ஆனையும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் யாப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான அரசியற் கட்சியாகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அக் கட்சியின் அரசியல் யாப்பைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானவையாகும். மதுவருந்துதல், விபசாரம் என்ற இஸ்லாம் கடுமையாக வெறுத்துத் தடைசெய்திருக்கும் செயல்களைச் செய்வதென்பது கட்சியின் யாப்பாகிய அல்குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் எள்ளி நகையாடுவதற்கு இணையானதாகும். அதுவும் அதனை அந்தக் கட்சியின் தலைவரே செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டானது மிக மிகப் பாரியதாகும்.
இங்கே சில விடயங்களை ஆராய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
1. தலைவர் மேற்படிக் குற்றங்களை உண்மையாகவே செய்தாரா?
2. அப்படி அவர் செய்திருந்தால் அதற்கான சாட்சிகள் யார், ஆதாரங்கள் எவை?
3. தலைவர் மீது குற்றம் சுமத்துபவர் யார்?
4.அவ்வாறு குற்றம் சுமத்துபவரின் மார்க்க ரீதியான, சமூக ரீதியான தகைமைகள் எவை?
5. இந்தக் குற்றங்கள் எக்காலத்தில் நிகழ்ந்தன?
6.முக்காலத்தில் அவை நடந்திருந்தால் ஏன் அவை அக்காலத்தில் வெளிப்படுத்தப்படவில்லை?
7.இந்தக் குற்றங்கள் பற்றித் தலைவர் தன்னிலை விளக்கம் அளிப்பாரா?
8.இந்தக் குற்றங்களைத் தான் செய்யவில்லையென்று தலைவர் கருதுவாராயின், தன்மீது அபாண்டங்களைச் சுமத்தியோருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுப்பாரா?
9. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதெனத் தலைவர் ஒப்புக் கொள்வாராயின், அதற்காக அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா?
10. இந்த விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த மார்க்கத் தலைமையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலையிட்டு, இரகசியமாகவோ, பரகசியமாகவோ விசாரணைகள் செய்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு ஒரு தெளிவான முடிவைத் தருமா...?
இனி இந்தக் கேள்விகளுக்கான சாத்தியமான பதில்களை ஆராய்வோம்:
1. தலைவர் மேற்படிக் குற்றங்களை உண்மையாகவே செய்தாரா? 2. அப்படி அவர் செய்திருந்தால் அதற்கான சாட்சிகள் யார், ஆதாரங்கள் எவை?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தலைவரையும் அல்லாஹ்வையும் தவிர வேறு யாருக்கும் உறுதியாகத் தெரியாது. தலைவர் மது அருந்தும் போது உடனிருந்தேன் என்று நம்பிக்கையான இரு சாட்சிகள் சொன்னால் ஒழிய, அல்லது தலைவரே ஒப்புக் கொண்டாலொழிய இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வழி கிடையாது. மேலும் தலைவர் விபசாரம் செய்தார் என்பதுவும் கிட்டத்தட்ட இது போலத்தான். தலைவர் விபசாரம் செய்ததை நேரடியாகக் கண்ட, உண்மை பேசுகின்ற, நம்பிக்கையான சாட்சிகள் அவசியம். அல்லது, இந்த நவீன கால வழக்கின்படி, விபசாரத்தில் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட, உண்மையானதென நிரூபிக்கப்படக் கூடிய காணொளி அவசியமாகும். அல்லது தான் விபசாரம் செய்ததாகத் தலைவர் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், இவற்றுக்கான சாத்தியங்கள் கிட்டத்தட்ட பூஜ்யமாகவே இருக்கின்றன.
3. தலைவர் மீது குற்றம் சுமத்துபவர் யார்? 4. அவ்வாறு குற்றம் சுமத்துபவரின் மார்க்க ரீதியான, சமூக ரீதியான தகைமைகள் எவை?
ஒருசில முஸ்லிம் சமூக வலைத்தள பதிவர்களினால் தலைவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டாலும், தலைவர் மீது தற்போது இந்தக் குற்றச்சாட்டை ஒரு மாற்று மதப் பெண்ணின் கடிதமென ஒரு கடிதத்தைத் தனது முகநூலில் பதிவேற்றி முன்வைத்திருப்பவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத். இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பலமுறை அனுபவித்தவர். இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராகவுமிருந்தவர்.
முன்னாள் ஈரோஸ் என்னும் தமிழ் தீவிரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் பஷீர் சேகு தாவூத் இருந்துள்ளார். இவர் ஒரு கவிஞரும் நூலாசிரியரும் ஆவார். வ.ஐ.ச. ஜெயபாலன் போன்ற பழைய தலைமுறைக் கவிஞர்களுடனும் ஷர்மிளா செய்யித் போன்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களோடும் நட்பில் இருப்பவர். குறிப்பாக ஷர்மிளா செய்யித் அவர்களினால் ''தங்கம்'' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு அலங்கரிக்கரிக்கப்பட்டிருப்பவர் பஷீர் சேகுதாவூத்.
பஷீர் சேகுதாவூத் ஒரு நூலாசிரியரும் கூட. தனது பாராளுமன்ற உரைகளைத் தொகுத்து '"சோர்விலாச் சொல் " என்னும் தலைப்பில் நூலாக அவர் வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 'அன்ரன் பாலசிங்கம்' என்றும் அவர் சிலரால் வர்ணிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் உற்ற நண்பராகவும் மதியூகியாகவும் முன்னாட்களில் செயற்பட்ட பஷீர் சேகு தாவூத், தன்னால்தான் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைப் பதவி சில தடவைகள் காப்பாற்றப்பட்டது என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறார். இவை பஷீர் சேகுதாவூதின் குறிப்பிடத்தக்க சமூக தகைமைகள்.
மார்க்கத் தகைமைகளைப் பொறுத்தவரையில் இவர் ஒரு கலிமாச் சொன்ன முஸ்லிம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஐவேளை தொழுவது, நோன்பு பிடிப்பது போன்றவற்றைச் செய்து வருபவர். ஹஜ் கடமையையும் நிறைவேற்றியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் சேர்ந்து ஸியாரமொன்றில் நின்றபடிக் கையேந்திப் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஸியார வழிபாடு என்பது இவரது மார்க்கத் தகைமையை வெளிப்படுத்துவதற்காகவன்றி, இவரது மார்க்கக் கொள்கையை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் என்பதனாலேயே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தளவுக்கு அல்லது இந்த அளவுக்குத்தான்-சமூகத் தகைமைகளையும் சமயத் தகைமைகளையும் கொண்டிருக்கின்ற ஒருவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எந்தளவு ஒப்புக் கொள்வது அல்லது நம்புவது என்பது பற்றி சாதாரண பொதுமக்கள் முடிவு செய்வதனை விட , அறிஞர்கள்-உலமாக்கள் கூடி ஒரு முடிவுக்கு வருவதே நல்லது.
5. இந்தக் குற்றங்கள் எக்காலத்தில் நிகழ்ந்தன? 6. முக்காலத்தில் அவை நடந்திருந்தால் ஏன் அவை அக்காலத்தில் வெளிப்படுத்தப்படவில்லை?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் இன்று, நேற்று நடந்ததல்ல. அவை 2004 ம் ஆண்டு நடைபெற்றவை. குறிப்பிட்ட பெண்ணின் பொலிசுக்கான வாக்குமூலமெனச் சொல்லப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு காலப்பகுதியிலேயே சம்பவங்கள் நடந்ததாக அந்த ஆவணம் அல்லது பஷீர் சேகுதாவூத் தனது முகநூலில் பதிவேற்றியுள்ள குமாரி என்ற பெண்ணின் வாக்குமூலமெனக் கூறப்படுவது விபரிக்கின்றது.
அந்த 2004ம் ஆண்டு காலப் பகுதியில் பஷீர் இந்த விடயத்தில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார் என்பதையும் அந்தப் பிரதி தெரிவிக்கின்றது. அவ்வேளையில் தனது நண்பரும் தலைவருமான ரவூப் ஹக்கீமைக் காப்பாற்றுவதற்கு, அல்லது அந்தச் சிக்கலிலிருந்து ஹக்கீமை விடுவிப்பதற்கான முனைப்புடன் பஷீர் சேகு தாவூத் இயங்கியிருக்கின்றார். ஆனால், ஏறத்தாழ பதின்மூன்று வருடங்களின் பின்னர் இப்போது பஷீர் சேகு தாவூத் அந்த விடயத்தைப் புதுப்பிக்க முனைகின்றார்.
பஷீர் சேகு தாவூத்தின் இந்தச் செயல் பற்றி- அதாவது- அக்காலத்தில் அவர் ஹக்கீமைக் காப்பாற்றுவதற்காக-அல்லது அந்த இக்கட்டிலிருந்து ஹக்கீமை விடுவிப்பதற்கு முன்னின்றுவிட்டு, இப்போது அந்த விடயத்தை மீண்டும் கிளறுகின்ற செயல் பற்றி-ஹக்கீமின் ஆதரவாளர்களும் சில நடுநிலையாளர்களும் கேள்விகளை எழுப்புகின்றனர். பஷீருக்குத் தேசிய பட்டியல் எம்.பி. பதவி கொடுக்கப்படாமல் விட்டதுதான் இதற்கான காரணம் என்று ஹக்கீமின் ஆதரவாளர்களும் ஒருசில நடுநிலைமையாளர்களும் கூறுகின்றனர். மேலும், மிக அண்மையில் தனது சொந்த ஊரான ஏறாவூரில் நடந்த கூட்டத்தில் தன்னை ரவூப் ஹக்கீம் விமர்சனம் செய்து பேசிய பேச்சுத்தான் குமாரி கூரே என்ற பெண் கொள்ளுப்பிட்டிப் போலீசுக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் பிரதியைத் தான் வெளியிடுவதற்கானகாரணம் என்பது போல பஷீர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ம் திகதி பஷீர் சேகு தாவூத் ' மாஷா அழ்ழாஹ்-அவன் நாடிவிட்டான்' என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகிறார்.
''ஹக்கீமின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட, அவர் எப்போது ஏறாவூர் சென்று என்னைப்பற்றி பேசுவார் என்று காத்திருந்தேன். இன்று றவூப் ஹக்கீம் எனது தாய் மண்ணான ஏறாவூருக்குச் சென்று நான் கடந்த காலத்தில் மஹிந்த அரசுக்கு நமது கட்சியைக் காட்டிக் கொடுத்ததாகப் பேசியுள்ளார்.
இல்லவே இல்லை.ஹக்கீம் செய்த அநாகரீகமானதும், இஸ்லாத்துக்கு புறம்பானதும், மனிதப் பண்பைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு சமனானதும், சட்டரீதியாக நாம் அனைவரும் அகப்பட்டுக் கொள்ளும் வகையிலானதுமான செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தையும், நமது கட்சியையும் காப்பாற்றுவதற்காகவே மஹிந்த அரசுடன் ஒட்டவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. புலிகளையே அழித்த மஹிந்தவுக்கு பலவீனமான முஸ்லிம் சமூகத்தை அழிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்?
கீழே உள்ள ஆதாரத்தைப் பாருங்கள், அவருக்குத் தூக்குத் தண்டனையும் நமது சமூகத்துக்கு அரசியல் சிறையும் கிடைத்திருக்கும் நான் அவதானமாக இல்லாதிருந்திருந்தால்.. மஹிந்தவிடம் மூன்று ஆவணங்கள் இருந்தன அதில் இது ஒன்று இரண்டாவது அவரின் அமைச்சுக் கொள்ளை பற்றியது மூன்றாவதை பிறகு சொல்கிறேன் ஆதாரத்தோடு..
சிங்களத்தில் இருக்கும் இவ்வாவணத்தை அவசரமாக தமிழ் மொழியில் பெயர்க்கவேண்டி ஏற்பட்டதால் விளைந்த தவறுகளை மனங்கொள்ள வேண்டுகிறேன். இது பற்றி ஹக்கீம் உட்பட எவருடனும் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன்.''
ஆக, 13 வருடங்களின் பின்னர் தனது சொந்த ஊரில் தன்னைப் பற்றி பேசிய ஹக்கீமைப் 'பழி' வாங்குவதற்காகவே பஷீர் சேகுதாவூத் குமாரி கூரே என்ற பெண் பொலிசுக்கு வழங்கிய வாக்குமூத்தின் பிரதியைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.
தனது தலைவருக்கும் சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படலாமென்ற காரணத்தினால் இதனை முற்காலத்தில் தான் வெளியிடவில்லை என்று பஷீர் கூறுவாராயின், அதனை எந்த விதத்திலும் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், இப்போது வெளியிடுவதன் மூலமும் சமூகம் பாதிப்படையத்தான் போகிறது. அந்நிய சமூகங்கள் ரவூப் ஹக்கீமின் மீதும் அவரைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீதும் அவற்றின் உயர்பீட, செயற்குழு அங்கத்தவர்கள் மீதும், தீவிர போராளிகள் மீதும் மற்றும் பொதுவான முஸ்லிம் மக்கள் மீதும் தமது அதிருப்திகளையும் எரிச்சல்களை கோபங்களையும் கொட்டித் தீர்க்க மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. ஆக, ஹக்கீம் தன்னைப் பற்றித் தனது ஊரில் பேசியதற்காக பஷீர் சேகு தாவூத் இப்போது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் சேர்த்து அவப்பெயரை வாங்கித் தரத் துணிந்து விட்டாரா என்ற கேள்வியை எழுப்பாது இருக்க முடியவில்லை.
7. இந்தக் குற்றங்கள் பற்றித் தலைவர் தன்னிலை விளக்கம் அளிப்பாரா? 8. இந்தக் குற்றங்களைத் தான் செய்யவில்லையென்று தலைவர் கருதுவாராயின், தன்மீது அபாண்டங்களைச் சுமத்தியோருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுப்பாரா? 9. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதெனத் தலைவர் ஒப்புக் கொள்வாராயின், அதற்காக அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா?
தலைவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பொதுவான மனிதர்கள் என்ற ரீதியில் பாரதூரமானவை. முஸ்லிம்கள் என்ற ரீதியில் மிகப் பாரதூரமானவை. அதிலும் ஒரு சமூகத் தலைவரென்ற வகையில் மிக மிகப் பாரதூரமானவை.
அந்நிய சமூகங்களில் மது, மாது என்பனவற்றில் இழைக்கப்படும் வன்முறையற்ற தனிநபர்க் குற்றங்கள் மிகப் பெரியதாக விமர்சிக்கப்படுவதில்லை. சுருங்கச் சொன்னால் அந்நிய மார்க்கத்தைப் பின்பற்றும் பல நாடுகளில் இவற்றுக்கான சட்டரீதியான அனுமதிகள் உள்ளன. ஆனால், ஒரு முஸ்லிம் சமூகத்தில் வாழும் தனிப்பட்ட நபர் ஒருவர் செய்யும் இவ்வாறான குற்றங்கள் இஸ்லாம் சட்டமாக இல்லாத நாடுகளிலும் கூட அந்தச் சமூகத்தில் அசிங்கமானவையாகவே கருதப்படும். பல சந்தர்ப்பங்களில் அவை அந்தத் தனிப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பாதிக்கும். ஆனால், ஒரு முஸ்லிம் சமூகத்தின் தலைவர் செய்யும் இத்தகு குற்றங்கள் அந்தச் சமூகத்துக்கே பெரும் இழிவையும் இழுக்கையும் தேடித் தந்துவிடும். எனவே தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுமானால், அந்தத் தலைவர் அவற்றைத் தான் செய்யாது இருப்பாராயின் அதற்கான தன்னிலை விளக்கமளித்தோ, மறுப்புக்கு கூறியோ தன்னையும் சமூகத்தையும் அவமானங்களிலிருந்தும் அசிங்கங்கங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, தான் குற்றம் செய்யாதவர் என்று தக்க இடத்தில், சாட்சிகள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தோ அல்லது சமூகம் ஏற்றுக் கொள்கின்ற வேறு வழிகளிலோ தன்னை நிரூபிப்பதோடு, தன்மீது அபாண்டம் சுமத்தியோருக்கு எதிராகத் தலைவர் தகுந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தலைவன் மறுக்காது மௌனம் காக்கையில், தனது தலைவன் குற்றமற்றவனெனத் தொண்டர்களும் போராளிகளும் வாதிட்டுக் கொண்டிருப்பது மிகவும் பரிதாபமானது. என்னதான் அவர்கள் தமது தலைவனுக்காக வக்காலத்து வாங்கினாலும், தலைவன் தான் குற்றம் செய்யவில்லை என்று பகிரங்கமாகச் சொல்லும் வரை, அவர்களின் அடிமனங்களில் ஒரு சந்தேகக் குறுகுறுப்பு இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதைத் தலைவர் உணர வேண்டும். ஆகவே, இப்போதாவது தலைவர் தான் குற்றமற்றவர் என்றால் அதனை வெளிப்படுத்திய ஆக வேண்டும்.
10. இந்த விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த மார்க்கத் தலைமையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலையிட்டு, இரகசியமாகவோ, பரகசியமாகவோ விசாரணைகள் செய்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு ஒரு தெளிவான முடிவைத் தருமா?
இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. இந்த விடயம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்திற்கும் மானத்திற்கும் மரியாதைக்குமுரிய பெரும் பிரச்சினையாதலால் அவர்கள் இந்த விடயத்தில் தலையிட்ட ஆக வேண்டும். 'ஒரு முஸ்லிமின் மானம் மற்றவருக்கு ஹராம்!' என்று இஸ்லாம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் கணிசமான முஸ்லிம்களின் அரசியற் தலைவரென்பதால், அந்த அத்தனை முஸ்லிம்களின் மானமும் இந்த விடயத்தில் தங்கியிருக்கிறது. எனவே, ஏனோதானோவென்ற நிலைப்பாட்டில் ஜம்மிய்யத்துல் உலமா சபை தொடர்ந்தும் இருக்க முடியாது.வெகு அவசரமாக ஜம்மியத்துல் உலமா சபை இந்த விடயத்தில் இலங்கை முஸ்லிம்களுக்குத் தெளிவையேற்படுத்தி, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி இடுதல் மிக மிக அவசியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சமூகத்தை என்றும் பாதுகாத்தருள்வானாக; ஆமீன்!