எஸ்.அஷ்ரப்கான்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் செயற்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்ற ஊடக மாநாட்டு அறிவித்தல் முழுப்பொய்யாகும் என வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
கடந்த ஆண்டு குருநாகலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு என்ற பெயரில் போலியாக நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியாகாது என்றும் அக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களின் தெரிவு செல்லுபடியாகாது என்றும் உத்தரவிடக் கோரி கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கொழும்பு மாவட்ட நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அவர்களால் போலியாக செயலாளர் நாயகம் பதவிக்கு பெயர் குறிக்கப்பட்ட நபர் அப்பதவியில் செயற்படுவதற்கு இடைக்ககாலத் தடை உத்தரவு கோரியிருந்தார். கடந்த 24ஆம் திகதி இத்தடை உத்தரவுக் கோரிக்கை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்படுவதை மறுத்து வழக்கை தொடர்ந்து நடாத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதேநேரம் இவ்வுத்தரவில் செயலாளராக யார் செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் எதனையும் குறிப்பிடவில்லை. அது வழக்கு விசாரணை முடிவிலேயே தீர்மானிக்கப்படும். எனவே, குறித்த நபரை செயலாளர் நாயகமாக செயற்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்பது முழுக்க முழுக்க பொய்யான ஒரு கூற்றாகும்.
இவ்வுத்தரவு கடந்த 24 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தும் இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து இந்தச் செய்தியை ஏன் இவர்கள் உடனடியாகச் சொல்லவில்லை. இங்கு தடையுத்தரவு மறுக்கப்பட்டது மாத்திரம் உண்மையாகும். அதற்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் நீங்கலாக 14 நாட்கள் அவகாசம் உண்டு. இதன் அடிப்படையில் மேன் முறையீடு செய்வதற்கான இறுதித் தினம் கடந்த வெள்ளிக்கிழமையாகும். எனவே இவர்கள் மேன் முறையீடு செய்வார்களா ? என்பதைப் பார்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வரை காத்திருந்து விட்டு அதற்குப் பின்னான 1வது வேலை தினமான திங்கட்கிழமை இந்தத் தடையுத்தரவு மறுப்பு சம்மந்தமான செய்தியை ஊடகவியலாளர் மாநாடு வைத்து வெளியிட்டிருக்கின்றார்கள். அதேநேரம் குறித்த நபரை செயலாளர் நாயகமாக செயற்படுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியையும் சேர்த்திருக்கின்றார்கள்.
இதில் சிறுபிள்ளைத்தனம் என்னவென்றால் ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை என்பதுபோல மேன்முறையீட்டுக்கான 14 நாட்கள் கால அவகாசம் முடிவடைந்ததும், மேன்முறையீடு செய்யப்படவில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி இந்தச் செய்தியை விடுத்திருக்கின்றார்கள். ஆனால் மேன் முறையீட்டிற்கான இறுதித் தினம் கடந்த வெள்ளிக்கிழமையானால் அதே தினத்திலோ அல்லது அதற்கு முதல் நாளோ கூட மேன்முறையீடு செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்தால் அம்மேன்முறையீடு தொடர்பான அறிவித்தல் பிரதிவாதிகளை வந்தடைய ஒரு சில தினங்கள் எடுக்கும் என்பதை இவர்கள் சிந்திக்கத்தவறிவிட்டார்கள். மேன்முறையீடு செய்வதற்கு முன்பு பிரதிவாதிகளுக்கு அம்மேன்முறையீடு தொடர்பாக அறிவித்தல் அனுப்புவதில்லையே, பாவம் அவசரப்பட்டுவிட்டார்கள்.
மறுபுறத்தில் தேர்தல் ஆணையாளர் இன்றுவரை குறித்த நபரை செயலாளர் நாயகமாக அங்கீகரிக்கவில்லை. அதேநேரம் வை.எல்.எஸ். ஹமீடை செயலாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கியதாகவும் அறிவிக்கவில்லை. தேர்தல் ஆணையாளரிடத்தில் இன்றும் ஏற்கனவே அமுலில் இருந்த உயர்பீட உறுப்பினர் பட்டியலே அமுலில் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் றிஷாட் பதியுதீன் கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றாரே தவிர புதிய பட்டியலின் அடிப்படையில் அல்ல.
தேர்தல் ஆணையாளர் செய்திருக்கின்ற ஒரேயோரு விடயம் நீதிமன்றில் வழக்கு இருப்பதன் காரணமாக அவரது இணையத்தளத்தில் செயலாளரின் பெயர் குறிப்பிடாமல் வெற்றிடமாக வைத்திருக்கின்றார். அதேநேரம் தேர்தல் ஆணையாளரின் பொதுவான அறிவித்தல்கள் மற்றும் கூட்ட அழைப்பிதழ்கள் கட்சியின் தலைவரான றிஷாட் பதியுதீனுக்கும் அதன் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ் ஹமீடிக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். நேற்றும் கூட தேர்தல் ஆணையகத்திலிருந்து வழமையான அறிவித்தல் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
கட்சி நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதால் றிஷாடிற்கும், வை.எல்.எஸ் ஹமீடிற்கும் தேர்தல் ஆணையகத்தின் சகல அறிவித்தல்களும் அனுப்பிவைக்கப்படும் என்று ஏற்கனவே எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார்.
எனவே குறித்த நபரோ அல்லது போலி மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற பட்டியலோ இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இன்றும் றிஷாட் பதியுதீன் வை.எல்.எஸ். ஹமீடினால் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட உயர்பீட உறுப்பினர் பட்டியலின் அடிப்படையிலேயே தலைவர் என்ற அங்கீகாரத்தைக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுவது இவர்களுக்கு நாகரீகமான ஒரு செயலல்ல. என்றும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதோடு தடையுத்தரவு விடயம் மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையிலும் போலி மாநாடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. என்ற அடிப்படையிலும் தேர்தல் ஆணையாளர் இனிமேலும் புதிய மாற்றங்கள் எதனையும் சட்டப்படி செய்ய முடியாது. அதேநேரம் மேன் முறையீடு தொடர்பான அறிவித்தலும் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.