ஒற்றையாட்சி- சமஷ்டி
பிரதான அதிகாரப்பகிர்வு/ பிரிப்பு மூன்று வகைப்படும்.
Unitary Structure- ஒற்றையாட்சி கட்டமைப்பு
Federal Structure- ( federation)சமஷ்டி கட்டமைப்பு
Confederal Structure ( confederation)
இவற்றின் பிரதான வித்தியாசங்கள்
ஒற்றையாட்சி- மத்திய அரசாங்கம் பலமானது. பிராந்தியஅரசாங்கம் பலவீனமானது.
சமஷ்டி- மத்தியும் பிராந்தியமும் சமமான பலத்தைக் கொண்டது.
Confederation- மத்தி பலவீனமானது. பிராந்தியம் பலமானது.
நமது நாட்டைப் பொறுத்தவரை முதல் இரண்டுமே முக்கியமானது.எனவே பொது அறிவுக்காக மூன்றாவதை மேலோட்டமாகபார்த்துவிட்டு ஏனையவற்றிற்குள் விரிவாகச் செல்வோம்.
Confederation
இது தனித்தனி நாடுகளாக இருந்தவை சிலபொதுத்தேவைகளுக்காக அல்லது சில அடிப்படைக்காரணங்களுக்காக ஒன்றிணைந்து ஒரே நாடாக மாறுவது.பிரதானமாக, பாதுகாப்பு, சமாதானம் போன்றவை. இன்றுபெரும்பாலும் confederation எங்கும் இல்லை.
எனவே confederation என்பது ஒரு நாடு என்பதை விடவும் ஒரு allianceஎன்பது பொருத்தமானது.
இங்கு பிராந்தியங்கள் விரும்பிய நேரத்தில் பிரிந்து செல்கின்றஉரிமை உள்ளது.
ஒரு confederation ஒரு Nation State அல்ல. அதற்கு ஒரு நாட்டிற்குரிய 'இறைமையும்' - sovereignty கிடையாது. மக்களுக்காக நேரடியாகசட்டங்களை இயற்றவும் முடியாது.
குறிப்பு- nation state என்ற சொற்றொடரை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சுயநிர்ணய உரிமை தொடர்பாக ஆராயும்போதுஇச்சொல்லின் முக்கியத்துவம் புரியும்.
Confederation இற்கான சில உதாரணங்கள்
ஐக்கிய அமெரிக்கா ( 1781-1789)
ஜேர்மனி ( 1815-1866)
இன்றைய நவீன சமஷ்டி தத்துவம் அமெரிக்க அரசியல் யாப்பைவரைந்தவர்களால் அறிமுகப்படுத்தப்படும்வரை ( 1787- 88) confederation மற்றும் federation என்ற சொற்கள் கிட்டத்தட்ட ஒரேகருத்தில் பாவிக்கப்பட்டன. இன்றும்கூட சுவிற்சர்லாந்தின் அரசியலமைப்பு, The Federal Constitution of the Helvetic ( or Swiss) Confederation என்று அழைக்கப்படுகிறது.
இவை தொடர்பான தகவல்களுக்கு,
Sage Library of Political Science
FEDERALISM
Volume 1
Historical and Theoretical Foundations of Federalism
Edited by
John Kincaid
Editor's Introduction ஐப் பார்க்கவும்
ஒற்றையாட்சி- சமஷ்டி
இதனைப் பார்க்க முன், பாராளுமன்ற அதிகாரத்தைக்கட்டுப்படுத்தல் தொடர்பாக பார்ப்பது அவசியம். ஏனெனில்ஒற்றையாட்சியும் சமஷ்டியும் இந்த பாராளுமன்ற அதிகாரத்தைக்கட்டுப்படுத்தலோடு நேரடியாக தொடர்பு பட்டுள்ளது.
பாராளுமன்ற அதிகாரத்தைக் கட்டுப்படுத்தல் ( Limitations on Powers of Parliament)
இது இரண்டு வகைப்படும்
ஒன்று)procedural limitation ( விதி முறையிலான கட்டுப்பாடு)
இரண்டு) Substantive limitation ( உள்ளடக்க கட்டுப்பாடு) ( இவைஉத்தியோகபூர்வ தமிழ்ப் பதங்கள் அல்ல, புரிந்து கொள்வதற்காகமட்டும்).
Procedural Limitation
இது ஒரு சட்டமூலம் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும்; என்ற கட்டுப்பாடுகள் தொடர்பானவை.
உதாரணமாக, சட்டமூலங்களை ஆக்குவதற்கு சாதாரண பெரும்பான்மை. ( சமூகமளித்திருப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ) simple majority.
உயர்/ மேல் நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் விடயத்தில் 113 அல்லது அதற்கு மேல். (absolute majority ) ( Article 107 (2) )
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு 2/3 பெரும்பான்மை போன்ற விதிகள் இருக்கின்றன.
இந்தக் கட்டுப்பாட்டை பாராளுமன்றம் மீற முடியாது. ஆனால் இந்தப் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு சிலவேளை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது அரசியலோடு தொடர்பு பட்டது. ஆனால் பாராளுமன்றத்திற்கு இது ஒரு பிரச்சினை அல்ல, ஏனெனில் இருக்கின்ற இலக்கத்திற்குட்பட்ட இலக்கம்தான் எல்லாப் பெரும்பான்மையும்.
எனவே பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தை இது கட்டுப்படுத்த வில்லை. மாறாக சட்டத்தை ஆக்குகின்ற விதி முறைகள் தொடர்பாக ( பாராளுமன்றத்தின் சக்திக்குட்பட்ட) சில விதிகளை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவேதான் இது procedural limitation என அழைக்கப் படுகிறது
Substantive Limitation
இது பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தை நேரடியாக கட்டுப்படுத்துவதாகும். அதாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் சில சரத்துக்களை நீக்குவதற்கு, அல்லது மாற்றுவதற்கு 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்பது நமக்குத் தெரியும். இதன் பொருள் மொத்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தாலும் மக்களின் ஆணை பெறாவிட்டால் அது செல்லுபடியாகாது; என்பதாகும். இங்கு பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் ஒரு பகுதி மக்களுடன் பகிரப்பட்டிருக்கின்றது. எனவே நமது பாராளுமன்றம் முழுமையான சட்டவாக்க அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் அல்ல. நமது பாராளுமன்றத்திற்கு procedural limitation இற்கு மேலதிகமாக substantive limitation உம் விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்டுப்பாட்டை விதித்திருப்பது அரசியலமைப்புச் சட்டமாகும். எனவேதான் பாராளுமன்றத்தைவிட அரசியலமைப்புச் சட்டம் மீயுயர்வானது; எனப்படுகிறது. Constitution is Supreme.
அதேநேரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில பலவீனங்கள் காரணமாக அரசியலமைப்புச் சட்டம் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தினால் மீறப்படுகின்றது; இதற்கு சிறந்த உதாரணம் குழு நிலை விவாதத்தில் அரசியலமைப்புக்கு முரணான திருத்தங்களைக்கூட சட்டமாக்குவதாகும். அதேபோன்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானததாக இருந்தபோதும் " The National Transport Commission Act" போன்ற சில சட்டங்கள் சட்டமாக்கப்பட்டதும் இவ்வாறான அரசியலமைப்பின் பலவீனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தக் காரணங்களால் அரசியலமைப்புச் சட்டத்தைவிட பாராளுமன்றமே உயர்வானது; என்று வாதாடுவோரும் உளர். இருந்தபோதும் அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது; என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். அரசியலமைப்புச் சட்டம் உயர்வானதால்தான் இருபதாவது திருத்தம் இன்று நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. ஆனால் 1972ம் ஆண்டைய அரசியல் யாப்பில் பாராளுமன்றமே உயர்ந்ததாக இருந்தது.
மறுபுறத்தில் சோல்பரி அரசியல் யாப்பு சரத்து 29(2) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு சேர்ந்தாலும் மாற்ற முடியாததாக இருந்தது. ஏனெனில் அதில் சர்வஜன வாக்கெடுப்பிற்குரிய ஏற்பாடு இருக்கவில்லை. எனவே சிறுபான்மைக்கு பாதுகாப்பான 29(2)ஐ ஒருபோதுமே மாற்றமுடியாத அதிகார முடக்கம் அன்றைய பாராளுமன்றத்திற்கு இருந்தது. ( பாராளுமன்றத்திற்கு வெவ்வேறு காலங்களில் பாவிக்கப்பட்ட வெவ்வேறு பெயர்கள் இலகுத்தன்மைக்காக இங்கு பாவிக்கப்படவில்லை) எனவேதான் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசியல் நிர்ணய சபை ( Constituent Assembly) என்கின்ற ஒரு புரட்சிகர முறையைப் பின்பற்ற வேண்டி இருந்தது. ( இன்று அமைக்கப்பட்டிருப்பது ' அரசியலைப்புச்சபையாகும் ( Constitutional Assembly) இதற்கு எதுவித சட்டவாக்க அதிகாரமும் இல்லை. இதில் புரட்சியுமில்லை. சிலர் இச்சொற்பதங்களை தவறுதலாக மாற்றிப் பாவிக்கின்றார்கள், எனவே இதனைக் கவனத்தில் கொள்ளவும்)
பிரித்தானிய பாராளுமன்றம் மீயுயர்தன்மைக்கப்பால் இறைமையுடையது. ( Sovereign). அதற்கு கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. ( இது தொடர்பாக எனது முன்னைய ஒரு தொடரில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.) அதேநேரம் இலங்கைப் பாராளுமன்றம் இறைமையுடையதுமல்ல, மீயுயர் தன்மை கொண்டதுமல்ல. இலங்கைப்பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தின் ஒரு பகுதி பாராளுமன்றத்தின் சக்திக்கு அப்பால் எடுத்து இன்று மக்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. மாறாக, இவ்வாறு ஒரு பகுதியை எடுத்து பிராந்தியத்திடம் வழங்கினால் அது " சமஷ்டியாகும்".
அதாவது இன்று எவ்வாறு பாராளுமன்றத்தின் ஒரு தொகுதி அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட்டதால் மக்களின் அங்கீகாரமின்றி அவ்விடயங்களில் பாராளுமன்றம் எதுவும் செய்ய முடியாத, சக்தி இழந்த நிலையில் இருக்கின்றதோ அதேபோன்று பிராந்தியத்தின் அங்கீகாரமில்லாமல் அவ்வாறு வழங்கப்பட்ட விடயங்களில் எதுவும் செய்யமுடியாமல் சக்தி இழந்த நிலையில் பாராளுமன்றம் இருப்பது சமஷ்டியாகும்.
இதனால்தான் தமிழ்த்தரப்பு சமஷ்டி கேட்கின்றது. அவ்வாறு வழங்கிவிட்டால் அதன்பின் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிடவும் முடியாது. மாகாணத்தின் சம்மதமின்றி மாற்றவும் முடியாது. எனவே மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுங்கு பாதுகாப்பு இருக்கின்றது.
சமஷ்டி ஏன் முஸ்லிம்களுக்கு ஆபத்தானது?
முஸ்லிம்கள் எந்தவொரு மாகாணத்திலும் ஆளும் சமூகமல்ல மாறாக ஆளப்படுகின்ற சமுகம், கிழக்கு மாகாணத்தில் சிறிய ஒரு ஆறுதல் இருக்கின்றபோதிலும்கூட. தமிழர்கள் ஒரு அரசாங்கத்தால் ஆளப்பட ஆயத்தமில்லாமல்தான் தங்களைத் தாங்களே ஆள அதிகாரம் கேட்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டில் விகிதாசாரத்தில் அண்ணளவாக சமமாக இருக்கின்றார்கள். ( தமிழர்ரகள் 11.6 என்று கூறப்பட்டாலும்
உண்மையில் 9 விகிதத்திற்கும் குறைவானவர்களே நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. யுத்த உயிரிழப்பு மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றம் காரணமாக. மலையகத்திற்கு வெளியே வாழுகின்ற மலையகத்தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களாக கணக்கிட்டே மேற்படி கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகின்றது). எது எவ்வாறு இருந்தபோதும் முஸ்லிம்களும் அண்ணளவாக 10 விகிதமாக இருக்கின்றார்கள்.
இந்நிலையில் ஒரு அரசாங்கத்தால் ஆளப்பட அவர்கள் தயாரில்லை; என்று சுயாட்சி கோரும்போது நம்மை பத்து அரசாங்கங்களால் ஆளப்படுகின்ற ஒருநிலைமையை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுவும் பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரமும் வழங்கி மாகாணத்திடம் கேட்காமல் எதுவித மாற்றமும் செய்யமுடியாத, மத்திய அரசாங்கம் தலையீடு செய்யமுடியாத சமஷ்டி முறையில் அந்த அதிகாரம் வழங்கப்பட்டால் நமது நிலையென்ன? இதனை எத்தனை பேர் சிந்தித்திருக்கின்றோம்.
இன்று இனவாதிகளிடமிருந்து பாதுகாப்புப் பிரச்சினை வரும்போதும் மத்திய அரசிடம் அழுதோ, சண்டை பிடித்தோ எப்படியோ எதையாவது செய்கின்றோம். நமது 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் இந்த அரசு தங்கியிருக்கின்றபோதே இந்த திண்டாட்டம்.
நாளை பொலிஸ் அதிகாரமெல்லாம் சமஷ்டி முறையில் மாகாணசபைகளுக்குச் சென்றதன்பின் இனவாதிகள் அடித்தால் மத்திய அரசிடம் செல்ல முடியாது. மாறாக ஒன்பது மாகாண அரசிடம்தான் செல்ல வேண்டும். அதுவும் மத்திய அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்ரகளோ பேசுவதை மாகாணம் கேட்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களில் ஒரு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் கூட இல்லை. ஏனைய மாகாணங்களில் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்களே உள்ளனர், கிழக்கைத் தவிர.
இந்நிலையில் நமது நிலை என்ன? நமது பாதுகாப்புக்கு என்ன வழி? மியன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் என்று ஏற்கனவே ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள். எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியுமா?
இவற்றைப் பற்றி யார் சிந்திக்கின்றார்? எந்த அரசியல்வாதி பேசியிருக்கின்றார்? இருபதில் இவ்வளவு அரசியல் செய்யத்தெரிந்த அரசியல் வாதிகள் இந்த விடயங்களில் ஏன் மௌனிகளாக இருக்கின்றார்கள்?
போதாக்குறைக்கு சில சோனக அரசியல்வாதிகள் சமஷ்டிக்கும் பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரத்திற்கும் ஆதரவாக குரல்கொடுக்கின்றார்களே! இது அவர்களின் அறியாமையா? அல்லது அடுத்தவர்களுக்கு சோரம் போன தன்மையா?
ஒரு சமூகத்தின் அபிலாஷைகளுக்காக இன்னொரு சமுதாயம் அடிமைகளாக வாழவேண்டுமா? ரோகிங்கியர்களுக்காவது அருகே பங்களாதேசம் இருந்தது. நமக்கு கடல்தான் இருக்கின்றது. சரி, அரசியல்வாதிகள்தான் சிந்திக்க மாட்டார்கள். உங்களின் கெட்டித்தனத்தால் நீங்கள் தெரிவு செய்தவர்கள் அப்படி, நீங்களாவது சிந்திக்கமாட்டீர்களா?
நீங்கள் போகின்ற பாதையில் குழி தோண்டப்பட்டு மேலால் மூடப்பட்டிருங்கின்றது; என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்காமல்போய் அந்தக் குழியில் விழுந்தபின்புதான் ஏற்றுக்கொள்வீர்களா? குழியிருந்தது உண்மைதான் என்னு. ஆனால் அது சமஷ்டி எனும் குழியானால் மீண்டுவர முடியுமா?
நாங்களெல்லாம் கொக்கா? 'காக்கா நோக்கறியும் கொக்கு டப்பறியும்' என்று கிராமங்களில் கூறுவார்கள். அதாவது காகம் தன்னைச் சுட துப்பாக்கியை நீட்டும்போதே புரிந்துகொண்டு பறந்து சென்றுவிடுமாம். கொக்கிற்கு ' டப்' என்று சத்தம் கேட்டபின்தான் தெரியுமாம்,நம்மைச் சுட்டுவிட்டார்களே! என்று.
உண்மையில் மிகவும் விரக்தியில் இதனை எழுதிக்கொண்டிருக்கின்றேன். கடந்த இரண்டு வருடங்களாக இந்த விடயத்தில் இந்த சமுதாயத்தை சற்று விழிப்பூட்டிவிட முடியாதா? என்று போராடிக் கொண்டிருக்கின்றேன்.
இந்த சமுதாயம் எங்கே இருக்கின்றது; என்பதை இந்த ' இருபது' விடயத்தில் கண்டோம். இருபது தொடர்பான வர்த்தமானி வெளியாகி ஒன்றரை மாதங்கள். எந்த சோனக அரசியல் வாதியும் அதில் நன்மை இருக்கின்றதா? தீமை இருக்கின்றதா? என்று எழுதவுமில்லை, பேசவுமில்லை. இரண்டு மூன்று தடவைகள் கிழக்கு மாகாண சபையில் அது ஒத்திவைக்கப்பட்டது. அப்பொழுதும் அது நல்லதா? கெட்டதா? என்று யாரும் பேசவில்லை.
கிழக்கில் அதற்கு ஆதரவாக கை உயர்தியதுதான் தாமதம், சமூகப்பற்றும் அரசியல் மற்றும் சட்ட ஞானமெல்லாம் பொங்கிக்கொண்டு வந்துவிட்டன.
ஆர்ப்பாட்ட அழைப்புகள் எங்கே, ஹர்த்தால் கோசங்கள் எங்கே? மக்களை விழிப்பூட்டும் கூட்டங்கள் எங்கே? போராளிகளெல்லாம் ' இருபதைக் கரைத்துக்குடித்து சாதகமாகவும் பாதகமாகவும் சாறு பிழிந்து விட்டார்கள். எவ்வளவு கவலையான, வேதனையான நிலைமை.
இன்று இந்த புதிய அரசியலமைப்பு, அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஆதரவளிப்பவர்களும் நிம்மதியாய்த் தூங்குபவர்களும் சமூகப்பற்றும் ஞானமும் பொங்கிவர ( வாக்கு வேட்டைக்காக சமூகத்தை ஏமாற்றும்) போராட்டகளத்தில் குதிப்பார்கள் எல்லாம் முடிந்தன்பின்.
முஸ்லிம் சமூகமே! அப்பொழுது நீ குழியில் விழுந்து கிடப்பாய். எனவே, இப்பொழுதே விழுத்துக்கொள்.
போராளியே! இந்த அதிகாரப்பகிர்வு தொடர்பாக சரியோ? பிழையோ? எதையாவது இப்பொழுதிலிருந்தாவது எழுதத்தொடங்கு. அந்த எழுத்துக்கள் பலரும் எழுதும்போது சமூகத்தின் அவதானத்தைப் பெறும். சந்திகளில் கூடும்போதும் வட்ஸ்அப்பில் அரட்டை அடிக்கும்போதும் இந்த அதிகாரப்பகிர்வை உனது பிரதான கருப்பொருளாக்கு. தெளிவு தானக வரும்.
( தொடரும்)
குறிப்பு: இங்கு பாவிக்கப்பட்டுள்ள பல ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ்ப் பதம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தந்துதவவும். You may mention them in comments or forward them to my inbox,thanks.