கலப்புத் தேர்தல் முறையும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களும் - பாகம்-1

வை எல் எஸ் ஹமீட்-

ற்போது சட்டமாக்கப்பட்டுள்ள கலப்பு முறைத்தேர்தல் என்றால் என்ன?
அது முஸ்லிம்களுக்கு சாதகமானதா? பாதகமானதா?
60:40 இற்கு எதிராக போராடி 50: 50 ஆக ஆக்கி விட்டதாக ஏதேதோ சொல்கிறார்களே! இந்த 60:40, 50:50 என்பது என்ன? போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் தேவை.

எனவே இந்த கலப்புத் தேர்தல் முறை தொடர்பாக நாம் விரிவாக ஆராயவேண்டி இருக்கின்றது.
அதற்குள் செல்ல முன்,
சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன் .

1) இந்த சட்டமூல விவாதத்தின்போது ஒரு முஸ்லிம் கட்சித் தலைவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை கேட்கக் கிடைத்தது. அவ்வுரையில் அவர் இச்சட்ட மூல திருத்த விடயத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை,
நிலையியல் கட்டளை பின்பற்றப்படவில்லை,
அரசியலமைப்புச்சட்டம் பின்பற்றப்படவில்லை என்று எத்தனையோ ' பின்பற்றப்படவில்லை' களைப்பற்றிப் பேசியதோடு, இது " சிறுபான்மைகளுக்கு பாதகமானது" என்றும் கூறிவிட்டு, அந்த சட்டமூலத்திற்கு அவரும் அவரது கட்சியும் ஏன்/ ஏன்/ ஏன் வாக்களித்தது?

மேற்கூறப்பட்ட எதையும் பின்பற்றாமல் பிழையான நடமுறையைப் பின்பற்றியதற்காக வாக்களித்தார்களா?
அவர்களே பிழை என்று கூறிவிட்டு ஏன் ஆதரித்து வாக்களித்தார்கள்.


சரி அவை பிழைதானே, பிழையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். பிழைக்கு வாக்களித்ததும் பிழையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

சமூகத்திற்கு 'பாதிப்பு' என்று பேசிவிட்டு, அந்தப் பாதிப்புக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தார்கள்? ஏன், அது முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்பதனாலா?
முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக போராட உருவான கட்சி, முஸ்லிம்களின் பாதிப்பை, பாதிப்பென்று ஏற்றுக்கொண்டு, அதைப் பகிரங்கமாக சபையில் பேசிவிட்டு, அந்தப் பாதிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததேன்?

ஏனைய பெருந்தலைவர்கள்

---------------------------

ஏனைய பெருந்தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கிடைக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் உலவுகின்றதா? என்றும் தெரியவில்லை.

அவர்கள் எதற்காக வாக்களித்தார்கள்? அவர்களும், இத்தேர்தல்முறை பிழை!, சமூகத்திற்கு பாதிப்பு என்பதனாலா வாக்களித்தார்கள்? அவ்வாறாயின் ஏன் ? அல்லது எல்லாம் சரி, அது சமூகத்திற்கு நல்லது; அதனால்தான் வாக்களித்தோம்; என்கிறார்களா? அவ்வாறாயின் அதனை விளக்குவார்களா?

மொத்தத் தலைவர்களும்

------------------------
மொத்தத் தலைவர்களும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்து செய்த போராட்டம் பிரதமரை அடிபணியவைத்து 60:40 ஐ 50: 50 ஆக மாற்றி சாதனை படைத்ததாக சமூகவலைத்தளங்களில் உங்கள் ஆதரவாளர்கள் சிலர் கொண்டாடுகின்றார்கள். அவ்வாறாயின் இப்பொழுது இந்த சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லையா? அவ்வாறாயின் அதனை விளக்குவீர்களா?

அல்லது

பாதிப்பைக் குறைத்தீர்களா? ( அவ்வாறும் சில செய்திகள் கூறுகின்றன) அவ்வாறாயின் எந்தளவு குறைக்கப்பட்டிருக்கின்றது? எஞ்சியிருக்கின்ற பாதிப்பு புறக்கணிகக் கூடியதா? பாரதூரமானதா? விளக்குவீர்களா? பாரதூரமானால் அதற்கு ஏன் வாக்களித்தீர்கள்?

154 ஆதரவு வாக்குகள்

----------------------
நாங்கள் வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் சட்டமூலத்தை நிறைவேற்றியிருப்பார்கள்; என்கிறீர்களா? ( அப்படியும் சில வாதங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன). அப்படியானால் உங்களுடன் இருக்கின்ற ஒருவரை இன்னொருவன் கொல்ல வருகின்றான், உங்களுக்கு தடுக்க சக்தியில்லை. எனவே நானும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டேன்; என்பீர்களா?

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதில் பேரினவாதிகள் ஒன்றுபடுவதில் ஆச்சரீயம் இல்லையே! எனவே அவர்கள் ஒன்றுபட்டு வாக்களித்தார்கள். ஆனாலும் அவர்கள் எல்லோரும் ரணிலின் ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இல்லையே! நீங்கள்தானே ரணிலின் ஆட்சிக்கு நம்பிக்கையான முட்டுக்கள். முஸ்லிம்களுக்கு இந்த அநியாயத்தைச் செய்யாதீர்கள். இரட்டை வாக்கைத் தாருங்கள்; இல்லையெனில் ' முட்டைக் கழட்டுவோம்' என்று சொல்ல ஏன் உங்களுக்கு முதுகெலும்பில்லாமல் போனது?

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, இதே அடிப்படையிலான தேர்தல்முறை பொதுத்தேர்தலுக்கு முன்வைக்கப்பட்டபோது இரட்டை வாக்கு கேட்டுப் போராடினீர்களே! இப்பொழுது ஏன் விட்டுக் கொடுத்தீர்கள்? அது உங்களது மடியில் நேரடியாக கைவைக்கும் என்பதாலா? இப்பொழுதே மாகாணசபைகளில் முஸ்லிம்களுக்கு பெரிதாக பிரதிநிதித்துவம் இல்லை, ( கிழக்கைத் தவிர). இந்நிலையில் புதிய யாப்பில் அதிகாரத்தைக் கூட்டிக்கொடுத்து முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையும் குறைத்துவிட்டால் முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன? சிந்தித்தீர்களா?
ரணிலைத் திருப்திப்படுத்துவதற்காக சமூகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டீர்களே? இது நியாயமா?

போராளிகளே! ( சகல கட்சிப் போராளிகளும் உள்ளடக்கம்)

நீங்கள் சார்ந்துள்ள கட்சிகளை வாழவைப்பதற்காக, முகநூல்களில் மூச்சிறைக்கப் போராடுவது சமூகத்திற்கு உங்களது கட்சிகள் நன்மை செய்கின்றது; என்ற நம்பிக்கையினாலா? அல்லது சமூகம் எக்கேடு கெட்டாலென்ன, கட்சி வாழ்ந்தால் சரி என்பதனாலா? சமூகத்திற்காகத்தான் கட்சி என்றால், ' சமூகத்திற்கு ஏன் இந்த அநியாயத்தை செய்தீர்கள்? என்று அவர்களைக் கேள்விக்குட்படுத்த மாட்டீர்களா? நீங்களும் அவர்கள் செய்த அநியாயத்திற்கு துணைபோகப் போகின்றீர்களா?


இப்பொழுது தேர்தல் முறைக்கு வருவோம்.

கலப்புத் தேர்தல் முறை

----------------------
இதனை இரண்டு வகைப்படுத்தலாம்
1) விகிதாசாரமும் தொகுதி முறையும் ( அதாவது விகிதாசாரம் + தொகுதிமுறை)
2) விகிதாசாரத்தினுள் தொகுதிமுறை

2015ம் ஆண்டு முதலில் முன்வைக்கப்பட்டது விகிதாசாரமும் தொகுதிமுறையும் என்பதாகும். அதனை நாம் கடுமையாக எதிர்த்தோம். அதன்பின் இரண்டாவதை முன்வைத்தார்கள். இரட்டை வாக்கைத் தந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம்; என்றோம். அங்குதான் வாதப்பிரதிவாதங்கள பலநாட்களாக தொடர்ந்து இறுதியில் அரசு அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது. அதனைத்தான் இன்று மாகாணசபைக்கு ஏற்றுக் கொண்டு கை உயர்தியிருக்கிறார்கள் மனச்சாட்சியை அடகுவைத்துவிட்டு.

விகிதாசாரத்தினுள் தொகுதிமுறை
--------------------------------

இந்த இரண்டு முறைகளையும் நீங்கள் புரிந்துகொண்டால்தான் இந்த 60:40, 50:50 இல் உள்ள சாதக பாதகங்கள் புரியும். ஆனாலும் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ' விகிதாசாரத்தினுள் தொகுதிமுறை என்பதால் முதலில் அதனைப் பார்ப்போம். இவற்றை சற்று ஊன்றிப்படியுங்கள்; ஏனெனில் பொதுத்தேர்தலுக்கும் இதனைத்தான் கொண்டுவர எத்தனிக்கின்றார்கள்.

இந்த விகிதாசாரத்தினுள் தொகுதி முறை என்பதை குறிப்பாக ஜேர்மனி மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இரண்டு நாடுகளிலும் இரட்டை வாக்கு உட்பட அடிப்படை விடயங்கள் ஒன்றானபோதும் சிறிய சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

பிரதமர் நியூசிலாந்து முறைபற்றிக் குறிப்பிட்டிருப்பதால் அதனைப் பார்ப்போம்.

(தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -