க.கிஷாந்தன்-
பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் பட்டிப்பொல 24ம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர். பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து 05.09.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட நால்வர் பயணித்துள்ளனர். அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதியோடு மேலும் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் கேகாலை அரநாயக்க பகுதியை சேர்ந்த யூ.எல். சம்பத் சோமரத்ன (வயது - 20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு முச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்தியுள்ளதாகவும், முச்சக்கரவண்டி சாரதியையும், கார் சாரதியையும் கைது செய்துள்ளதாகவும் அவர்களை 06.09.2017 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பட்டிப்பொல போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.