நியூசிலாந்து தேர்தல்முறை
விகிதாசாரத்தினுள் தொகுதிமுறையே நியூசிலாந்தில் 1996ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது. எனவே இந்த முறையைப் புரிந்துகொள்ள அதன் பாராளுமன்றத் தேர்தல்முறையைப் பார்ப்போம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 120
தேர்தல்முறை: கலப்புத் தேர்தல்முறை ( Mixed Member Proportional Representation- MMP) 60:40 அதாவது தொகுதி 60%, விகிதாசாரம் 40%
அதாவது மொத்த 120 ஆசனங்களில் 'தொகுதி' 72 உம் 'பட்டியல்' ஆசனங்கள் 48 உம் ஆகும்.
ஒருவருக்கு இருவாக்குகள். முதலாவது வாக்கு தாம் விரும்பும் கட்சிக்கு. இரண்டாவது வாக்கு தனது தொகுதியில் தாம் விரும்பும் வேட்பாளருக்கு. ஒருவர் தனது கட்சிவாக்கை ( first vote or party vote) ஒருகட்சிக்கும் வேட்பாளருக்குரிய வாக்கை ( second vote or electorate vote)இன்னுமொரு கட்சி வேட்பாளருக்கும் அளிக்க முடியும் ( cross voting) அல்லது அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கும் அளிக்க முடியும்.
கட்சிகளுக்குரிய ஆசனங்களைப் பங்கிடுதல்
-----------------------------------------
நாடுபூராகவும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 120 ஆல் பிரிக்கப்பட்டு ஒரு ஆசனத்திற்கு எத்தனை வாக்குகள் என்பது கணக்கிடப்படும். அதன்பின் ஒவ்வொரு கட்சியும் பெற்ற முதலாவது வாக்கு ( கட்சிவாக்குகள் ) கணக்கிடப்பட்டு மொத்த 120 ஆசனங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் உரித்தான ஆசனங்கள் எத்தனை என்பது கணக்கிடப்படும்.
பின்னர் ஒவ்வொரு கட்சியும் தொகுதிவாக்கிலிருந்து ( இரண்டாவது வாக்கு) எத்தனை ஆசனங்களைக் கைப்பற்றியதோ அவற்றை அந்தக்கட்சிக்கு முதலாவது வாக்கிலிருந்து உரித்தான ஆசன எண்ணிக்கையிலிருந்து கழித்துவிட்டு மிகுதி ஆசனங்கள் பட்டியலில் இருந்து வழங்கப்படும்.
(இங்கு overhang மற்றும் threshold என்ற விடயங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு பின்னர் வருவோம்)
எடுகோள் ரீதியான உதாரணம் (A Hypothetical Illustration )
---------------------------------------------
இலங்கைப் பாராளுமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 200 என வைத்துக்கொள்வோம். 60:40 விகிதாரப்படி தொகுதிகள் 120 மற்றும் பட்டியல் ஆசனம் 80 உம் ஆகும். இந்த 120 தொகுதிகளும் மாவட்ட சனத்தொகைக்கேற்ப பங்கிடப்படும்.
(இங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்களது இனவிகிதாசாரத்திற்கேற்ப தொகுதிகள் பங்கிடுவதுதான் நியாயம் ஆனால் சமூகங்கள் ( குறிப்பாக முஸ்லிம் சமூகம்) சிதறிவாழ்கின்ற சூழலில் சாத்தியமா? என்பது இலங்கையின் சூழலில் ஒரு பிரதான கேள்வி.)
ஒருவருக்கு இருவாக்குகள் எனப்பார்த்தோம். ஒவ்வொருவரும் தனது முதலாவது வாக்கைத் தாம் விரும்பும் கட்சிக்கு அளிப்பார்கள். இதனடிப்படையில் எடுகோள் ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்கு விகிதங்கள் பின்வருமாறு :
கட்சி- A 45%
கட்சி- B 30%
கட்சி- C 15%
கட்சி- D 4%
கட்சி -E 3%
கட்சி -F 1%
கட்சி - G 1%
கட்சி - H 1%
இலகுவாக கணக்கிடுவதற்காகவும் புரிந்துகொள்வதற்காகவும் முழுஎண்கள் தரப்படுகின்றன, நடைமுறையில் அவ்வாறு இருக்காது என்ற போதும்.
ஆசனப்பங்கீடு
--------------
மொத்த 200 ஆசனங்களில்
கட்சி- A- 90ஆசனங்கள்
கட்சி- B- 60 ஆசனங்கள்
கட்சி- C- 30 ஆசனங்கள்
கட்சி- D- 8 ஆசனங்கள்
கட்சி- E- 6 ஆசனங்கள்
கட்சி- F- 2ஆசனங்கள்
கட்சி- G - 2 ஆசனங்கள்
கட்சி- H- 2 ஆசனங்கள் உரித்துடையவையாகும்.
தொகுதிரீதியாக வெற்றிபெற்ற ஆசனங்கள்
----------------------------------------
ஒவ்வொரு கட்சியும் இரண்டாவது வாக்கின்மூலம் தொகுதி ரீதியாக பெற்ற ஆசனங்களை எடுகோள் ரீதியாகப் பார்ப்போம்.
கட்சி- A- 70ஆசனங்கள்
கட்சி- B- 20 ஆசனங்கள்
கட்சி- C- 12 ஆசனங்கள்
கட்சி- D- 7ஆசனங்கள்
கட்சி- E- 5 ஆசனங்கள்
கட்சி- F- 4 ஆசனங்கள்
கட்சி- G- 2 ஆசனங்கள்
கட்சி- H - 0 ஆசனங்கள்
மொத்தம்- 120 ஆசனங்கள்
கட்சி A 70+20= 90
கட்சி B 20+40=60
கட்சி C 12 +18=30
கட்சி D 7+ 1 = 8
கட்சி E 5+1 =6
கட்சி F 4+0 =4
கட்சி G 2+0 =2
கட்சி H 0+2 = 2
மொத்தம் = 202
இங்கு முதல் நிரையில் கட்சிகள் தொகுதிகளில் பெற்ற ஆசனங்கள் காணப்படுகின்றன. சக அடையாளத்திற்கு அடுத்த நிரையில் அவர்களுக்கு உரித்துடைய ஆசனத்தில் தொகுதிகளில் பெற்ற எண்ணிக்கை கழிக்கப்பட்டு பட்டியலில் (80) வழங்கப்பட்ட ஆசனங்கள் காணப்படுகின்றன. சமன் (=) அடையாளத்திற்கு அடுத்துள்ள நிரையில் ஒவ்வொரு கட்சியும் மொத்தமாக பெற்ற ஆசனங்கள் காணப்படுகின்றன.
இதனடிப்படையில் தொகுதி ஆசனங்கள் 120, பட்டியல் ஆசனங்கள் 80, இரண்டையும் கூட்டிய மொத்தம் 200.
இங்கு ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றீர்கள். அதாவது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 200. அதே நேரம் கட்சிகள் மொத்தமாக பெற்ற எண்ணிக்கை 202. இதன் தாற்பரியமென்ன?
இதற்கு காரணம் கட்சி F இரண்டு ஆசனங்களை அதிகமாக பெற்றதாகும். இது overhang எனப்படும். இதன் எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் வித்தியாசப்படலாம். நியூசிலாந்தில் 5 இற்கு மேல் இதுவரை overhang வரவில்லை என நினைக்கின்றேன். ஆனால் ஜேர்மனியில் ஒருமுறை 11 overhang வந்திருக்கின்றது.
இந்த overhang ஐக் குறைப்பதற்காக threshold or cut off point எனப்படுகின்ற வெட்டுப்புள்ளி பயன்படுத்தப் படுகின்றது.
உதாரணமாக நியூசிலாந்தில் ஆசனங்களப் பெறுவதானால் ஒரு கட்சி 5% வீத cut off point ஐத் தாண்ட வேண்டும் அல்லது ஒரு தொகுதியையாவது வென்றிருக்க வேண்டும். அதே நேரம் ஜேர்மனியில் சில சிறுபான்மை சமூகங்களுக்கு இந்த threshold அல்லது cut off point இல் இருந்து முழுக்க முழுக்க விதிவிலக்களிக்கப் பட்டிருக்கின்றது.
குறிப்பு: 1 இலகுவான புரிதலுக்காக கட்சி F இன் ஆசனங்கள் இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டு எஞ்சிய இரண்டும் கட்சி H இற்கு வழங்கப்படும். பெறப்பட்ட மொத்த ஆசனங்கள் சரியாக 200 என்ற அடிப்படையில் அடுத்த பதிவுகளில் உதாரணங்கள் வழங்கப்படும். பின்னர் உரிய தருணத்தில் தேவைப்பட்டால் மீண்டும் overhang பற்றி அலசப்படும். தற்போதைக்கு overhang என்ற ஒரு பிரச்சினை இல்லை என்ற அடிப்படையில் விளக்கங்கள் வழங்கப்படும்.
குறிப்பு: 2 - இப்பொழுது இரட்டை வாக்குப்பற்றிப் பார்த்தோம். கட்சிகளின் ஆசனங்களைக் கணக்கிடுவதில் தற்போது நடைமுறையில் உள்ள அதே விகிதாசாரமுறையே, கட்சிக்காகப் பெறப்பட்ட முதலாவது வாக்கு விடயத்தில் பாவிக்கப்படுகின்றது; என்பதைக் கவனிக்குக.
அதாவது, முதலாவதான கட்சிவாக்கைப் பொறுத்தவரை தற்போதைய விகிதாதாசார முறைக்கும் இதற்கும் எதுவித வித்தியாசமுமில்லை. எனவே இங்கு 50:50 ஆ, அல்லது 60:40 ஆ என்றே கேள்வி முக்கியமானதல்ல, விகிதாசாரத்தைக் கணக்கிடுவதற்கு. ஏனெனில் 50: 50 எனும் போது தொகுதி 100 ஆகவும் பட்டியல் 100 ஆகவும் இருக்கும். அதாவது தொகுதி குறைய பட்டியல்
எண்ணிக்கை அதிகரிக்கும். ( மேல் தரப்பட்ட ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு விகிதங்களை 50:50 என்ற வகையில் மாற்றிப் போட்டுப் பாராளுங்கள். ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த ஆசன எண்ணிக்கையில் மாற்றம் வராது). ஒவ்வொரு கட்சிக்குமுரிய ஆசன எண்ணிக்கையைத் தீர்மானிப்பது கட்சிக்குரிய முதலாவது வாக்கே தவிர தொகுதி வாக்கல்ல. எனவே இரட்டை வாக்கினால் சிறுபான்மைகளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க பிரச்சினையில்லை, ஏனெனில் அதுவும் இன்றைய விகிதாசாரமும் ஒன்றே. ஆனாலும் நடைமுறை ரீதிய சிலசில நுணுக்கங்கள் இருக்கின்றன. அவை தொடர்பாக பின்னர் பார்க்கலாம்.
அடுத்த பாகத்தில் இந்த இரட்டை வாக்கு ஒற்றை வாக்காகும்போது ( இன்று இவர்கள் கைஉயர்த்திய தேர்தல்முறை) என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அது மாகாணசபைத் தேர்தலில் செலுத்தக் கூடிய தாக்கம் என்ன? என்பவை தொடர்பாக ஆராயலாம், இன்ஷாஅல்லாஹ்
( தொடரும்)