தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்த 35 தற்காலிக ஊழியர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று வருடம் தொடக்கம் பத்து வருடங்களாக தற்காலிக அடிப்படையில் சிற்றூழியர்களாக கடமையாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
வழமை போன்று கடந்த திங்களன்று (25) காலை கடமைக்கு சமூகமளித்து வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டிருந்த இவ்வூழியர்கள் மாலை வேளையில் கடமை நிறைவுக்காக்கான கையொப்பமிடுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். அப்போதே தொழில்களில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதாக இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களது சம்பளத்திற்காக மாதமொன்றுக்கு ஐந்து தொடக்கம் ஆறு இலட்சம் ரூபா வரையிலான தொகையே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஏனைய செலவுகளுடன் ஒப்பிடுகையில் இவர்களது சம்பளத்திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியானது மிகவும் குறைந்தளவான தொகையாகும்.
நீண்ட காலமாக தமது குடும்பத்தினரின் ஜீவனோபாயத்திற்காக இவர்கள் இந்த வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துள்ளனர். தமது சேவையில் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் குறைந்த சம்பளத்தில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக கடமையாற்றி வந்த இவர்களுள் பலர் தற்போது 35 வயதை தாண்டியிருப்பதனால் வேறு தொழில்களை பெற்றுக்கொள்ள முடியாத துரதிஷ்டசாலிகளாக மாறியுள்ளனர்.
எவ்வித முன்னறிவித்தலுமின்றி மனிதாபிமானமற்ற முறையில் தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கண்மூடித்தனமாக மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது குறித்த 35 ஊழியர்களினதும் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும்.
ஆகையினால் இவர்கள் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டு, தமது தொழில்களை தொடர்வதற்கு ஆவண செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.