சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விடயத்தில் சாத்தியப்படுத்துவதற்கு எய்தவன் நான் இருக்க சிலர் வெறும் நாமம் பதிப்பதற்காக மக்களுக்கு மத்தியில் நாடகமாடுகின்றார்கள்.
எனக்கு மீண்டும் ஒரு அதிகார சந்தர்ப்பம் கிடைத்தால் இரண்டு வருடத்திற்குள் இந்த கல்முனை மாநகர சபைக்கான கட்டிடத்தை கட்டி முடித்துக் காட்டுவேன் என்ற சவாலை பகிரங்கமாக விடுகின்றேன்.
கேள்வி - குருகியகால அரசியல் பிரவேசத்திற்குள் பல்வேறு அரசியல் சாதனைகளை நிலைநாட்டிய நீங்கள் தங்களின் ஆரம்ப அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடுவீர்களா ?
பதில் - கல்முனை மாநகரத்தின் மதல்வராக 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை மக்களினுடைய அமோக ஆதரவைப் பெற்று சடுதியாக வெறும் 45 நாட்களுக்குள் அரசியலில் பிரவேசித்து வெற்றி பெற்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூலம் களமிறக்கப்பட்டு பாரிய சாவால்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்சிக்குள் 30 வருடங்களாக இருந்தவர்கள் என்னோடு போட்டியிட்டாலும் அவர்களையும் தாண்டி; மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக புதிய சிந்தனை நோக்கிய பயணத்திற்காக ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை வழங்கினார்கள். அதனுாடான என்னுடைய வரவுக்குப் பின்னர் ஒரு ஆசனத்தை கல்முனை மாநகரத்தில் பெற்றது. 12 ஆசனங்களை பெற்று கல்முனை மாநகர சபை கைப்பற்றியது. இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
தெளிவான புதிய யுக்திகளை கையாண்டு; மக்களின் மனங்களை வென்று; அவர்களுக்கான சேவையை இரவு பகல் பாராது நாம் அப்போது செய்திருந்தோம். ஒரு வித்தியாசமாக அரசியல் புரட்சியை நாங்கள் அப்போது செய்திருந்தோம். நாம் எமது பயணத்தின் தெளிவான பாதையை மக்களின் மனங்களில் உட்புகுத்துவதற்காக வீடு வீடாகச் சென்று விளக்கினோம். அதன் பிரதிபலிப்பு சாய்ந்தமருது மக்களின் மிகக் கூடுதலான ஆதரவுடன் கல்முனை மாநகர மக்களின் அமோக வாக்குப்பலத்துடன் நான் வெற்றிபெற்று என்னாலான சகல சேவைகளையும் நான் பதவி துறக்கும் வரை இன, மத, பிரதேச, வேறுபாடுகளுக்கு அப்பால் செய்து காட்டினேன். இந்த வரலாற்றுச் சாதனையை இன்றும் என்னால் மறக்க முடியாது.
நான் பொறுப்பெடுக்கின்றபோது கல்முனை மாநகர சபையினால் செய்யப்பட வேண்டிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்ற முடியாத நிலை காணப்பட்டது. இதனை இல்லாதொழித்து உட்சாகமாக இயங்கவைத்து சபையின் ஊழியர்கள் மட்டுமல்லாது உயர் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பித்து உயிரோட்டமுள்ள சபையாக கல்முனை மாநகர சபையை மாற்றிக் காட்டினேன். அதன் பிறகு எனக்கு அதிகாரம் இல்லாமல் போனது. நான் முதல்வர் ஆசனத்தில் இருந்து விடைபெறும் தருணத்தில்
கேள்வி - சமகால பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்ற சாய்ந்தமருது தனிப்பிரதேச சபைக் கோரிக்கை தொடர்பாக உங்களின் கருத்தென்ன ?
பதில் - இது தொடர்பாக மக்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றது. சரியான தெளிவில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதே எனது கருத்து. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, மருதமுனை, பாண்டிருப்பு போன்ற ஊர்களை உள்ளடக்கியதாக இந்த மாநகர சபை காணப்படுகின்றது. இதில் சாய்ந்தமருது பிரதேசம் என்பது தனி முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். ஒரு பிரதேச செயலாளர் பிரிவாக இருந்தும் பிரதேச சபை ஒன்று இல்லாத ஒரு ஊராக இருக்கின்றது. நான் சாய்ந்தமருதில் பிறந்தாலும் எனது முதல்வர் பதவிக்காலத்தில் எல்லா ஊர் மக்களையும் அரவணைத்தே சென்றிருக்கின்றேன். எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் கல்முனை மாநகரத்தின் சகல பிரதேசங்களுக்கு பகிர்ந்து வழங்கியிருக்கின்றேன். என்னால் கல்முனை சந்தைக்கு போடப்பட்ட பாதையை அப்போது போடவிடாமல் தடுத்தார்கள். ஆனால் நான் விடவில்லை. விமானம் மூலம் வந்திறங்கி பொலிசாரின் உதவியோடு அந்த பாதையை மக்களின் உதவியோடு செய்து காட்டினேன். கல்முனை மாநகர சபை என்பது பாரிய ஊர்களை உள்ளடக்கிய சபை. எனவே அபிவிருத்தியை எல்லா ஊர்களுக்கும் பங்கீடு செய்கின்ற பொறுப்பு இருக்கின்றது. அது மாகாண மத்திய அரசாங்கத்தில் இருந்து வருகின்ற நிதியாக இருந்தாலும் சரியே; என்றாலும் இதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது அப்போது கல்முனை முதல்வராக இருந்த எனக்கு நன்றாகத் தெரியும். குருகிய நிதியோ அபிவிருத்தியோ வருகின்றபொழுது அதனை சமமாக பங்கிடுவதென்பது பாரிய சவாலாகும். எனவேதான் கல்முனை மாநகர எல்லைக்குள் இன்னுமொரு அதிகாரம் வருகின்றபொழுது அங்கு அங்கும் மேலதிக நிதியும் அபிவிருத்திகளும் சேவைகளும் வரும்.
அக்கரைப்பற்றை நாம் பார்த்தால் அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, என இரண்டிற்கும் வெவ்வேறு நிதிகள் மற்றும் அபிவிருத்திகளும் அங்கு ஒதுக்கப்படுகின்றது. என்ன விடயமாக இருந்தாலும் ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளுக்கும் தனித்தனியாக நிதிகளும் சேவைகளும் வழங்கப்படும். இதனால் அப்பிரதேச மக்களை திருப்திப்படுத்தி சேவைகளை வழங்க முடியும். அதுபோல் சாய்ந்தமருதிற்கும் அவ்வாறான தனி அதிகாரம் வந்தால் மக்கள் பலனடைவார்கள். எனவே கல்முனை பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகைக்கு ஏற்ப வங்களை பங்கீடு செய்து சேவை செய்வதை விடவும் இங்கு இன்னுமொரு அதிகாரம் கிடைக்கின்றபொழுது மேலும் கல்முனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பது எனது கருத்து. இதனுாடாக ஏனைய ஊர்களை பலமிழக்கச் செய்ய வேண்டுமென்றோ, பாதகம் விளைவிக்க வேண்டுமென்றோ யாரும் தப்பாக நினைத்து விட வேண்டாம். இன்னுமொரு தனி அதிகாரம் வந்தால் இம்மாநகர மக்கள் நன்மையடைவார்கள் என்ற ஒரே நோக்கத்தில்தான் முதன் முதலில் நான் இந்த சாய்ந்தமருதிற்கான தனி அதிகாரக் கோரிக்கையை முன்வைத்தேன்.
கேள்வி- நீங்கள் அடிக்கடி கட்சி மாறுபவர் என்ற ஒரு விமர்சனம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதற்கு உங்கள் பதிலென்ன ?
பதில்- அவ்வாறு நடந்தது உண்மையென்றாலும் எனது எந்த தனிப்பட்ட தேவைகளுக்காகவும் கட்சி மாறவில்லை. எவரிடமும் தொழில் பதவி பட்டங்கள் கேட்டு நான் கட்சி மாறவில்லை. நான் முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறினேன். அப்போது எனது பல்கலைக் கழக நண்பர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுடன் பேசியபோது அமைச்சர் றிஷாட் அவர்களின் ஆலோசனைப்படி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அப்போது இருந்த ஏ.எல்.எம். அதாஉள்ளாவை சந்தித்து எனக்கு எந்த பதவி பட்டமும் தேவையில்லை. சாய்ந்மருதிற்கு ஒரு உள்ளுராட்சி சபை ஒன்றை தரவேண்டும். கல்முனை மாநகரத்தை நான்காக பிரிக்க வேண்டும். அதனால் எந்த ஊரும், மக்களும் பாதிப்படையக் கூடாது என்றும்; அப்படியானால் உங்களோடு இணைந்து பயணிக்கிறேன் என்றும் கூறினேன். அது சாத்தியமாக வர இருந்த வேளையில்தான் அது கைகூடாமல் போனது.
அதனால் மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை என்னை அழைத்தது. அவரிடமும் அதே சாய்ந்தமருது தனி அதிகார கோரிக்கையை முன்வைத்தே நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்தேன். ஆனால் எய்தவன் எங்கோ இருக்க, இன்று சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம் என்பது ஒரு வேடிக்கையான கூத்தாக போய்விட்டது. நினைத்தவர்களெல்லாம் பெயரை பதித்துக் கொள்வதற்காக நாங்கள்தான் தியாகம் செய்தவர்கள். இங்கு நாம் பல சேவைகளைச் செய்திருக்கின்றோம். என்று வெறுமனே நாமம் பதிப்பதற்காக நாடகம் நடிக்கிறார்கள். நான் மிகவும் அமைதியாக மௌனமாக எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். எனக்கும் களத்தில் இறங்கத் தெரியும். ஆனால் நான் பொறுமையாக இருக்கின்றேன். நான் ஊர் மீதும், இந்த மாநகரத்தின் மீதும் பற்றுள்ளவன். நான் முதல்வராக இருந்தபோது இரவு பகல் பாராது கோடிக்கணக்கில் எனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியிருக்கின்றேன். எனக்கு எந்த வமர்சனமும் இல்லாமல் முதல்வர் பதவி என்ற அமானிதத்தை சிறப்பாக பயன்படுத்திவிட்டுத்தான் நான் பதவி துறந்தேன். இந்த இடத்திலே நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். இளைஞர்களை ஆக்ரோசப்படுத்தி துாண்டிவிட்டு அரசியல் செய்வது நிறுத்தப்பட வேண்டும். சாய்ந்தமருதின் தனிப்பிரதேச சபை என்பது எதிரே வருகின்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கு பின்னர் கிடைக்கும் சாத்தியம் இருக்கின்றது. அதற்காக பிரதமர் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் இலங்கையிலுள்ள பல பிரதேசங்களுக்கும் புதிய உள்ளுராட்சி சபைகளை நிறுவுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே சாய்ந்தமருது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
இந்த நியாயமான மக்கள் தேவைக்காகவே நான் அதாவுள்ளா மற்றும் றிஷாட் பதியுதீனோடு ஒன்று சேர்ந்து பயணித்தேன். சாத்தியமாக இருந்த விடயத்தை குருகிய அரசியல் நோக்கங்களுக்காக ஒரு பெரும் சலசலப்பை இப்பிரதேசத்தில் ஏற்படுத்திவிட்டார்கள். தடுத்து நிறுத்திவிட்டார்கள் என்றுதான் நான் பார்க்கின்றேன்.
கேள்வி- கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடம் ஒன்று இல்லாத நிலையில் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதனை புதிதாக நிர்மாணிக்க நீங்கள் முதல்வராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கவிலையா ?
பதில்- நான் பதவி துறக்கும்போது இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய்களை நிலையான வைப்பிலிட்டுவிட்டுத்தான் வந்தேன். ஆனால் அதற்கான முயற்சிகள் இன்றுவரை இடம்பெறவில்லை என்பது துரதிஷ்டமே.
கல்முனை மாநகர சபைக்கு திறைசேரியிலிருந்து வரவேண்டிய கோடிக்கணக்கான பணத்தினை பெற்றுக்கொள்ளத் தெரியாத மாநகர சபையாகத்தான் நான் முதல்வராக பதவியேற்றபோது கல்முனை மாநகர சபை இருந்தது. நான் திறைசேரியின் பணிப்பாளர் நாயகத்தை அடிக்கடி சந்தித்து எத்தனையோ வருடங்கள் பெற முடியாமல் இருந்த பணத்தினை மாநகர சபைக்கு பெற்றுக் கொடுத்தேன். இதற்காக திறைசேரியின் பணிப்பாளர் நாயகத்திடம் நான் முரண்பட்டுமிருக்கின்றேன்.
அமைச்சர் அதாவுள்ளாவிடம் கல்முனை மாநகர சபைக்கு ஒரு வாகனத்தை அப்போது கேட்டேன் அதனை உடனடியாக பெற்றுத்தந்தார். அதன்பிறகு மாகர சபைக்கு கட்டிடத்தை வேண்டினேன். கட்டிடம் கட்டுவதற்கு நிலத்தை காட்டுமாறு அப்போது அமைச்சர் அதாவுள்ளாஹ் கூறினார். அது மட்டுமல்லாது அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்விடம் அப்போது கூறியபோது அவரும் அப்போது அமைச்சர் பெஷீல் ராஜபக்ஷவிடம் பேசி 4 கோடி ரூபாய்களை பெற்றுத்தருவதாக கூறிய நிலையில் நான் தற்போதைய இடத்திலே ஒரு கப்பல் வடிவம் போன்று இந்த கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தை கட்டுவதற்காக வரைபடத்தையும் தயார் செய்தேன். முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பரோ வேறு யாருமோ இதற்காக முயற்சிக்கவில்லை. நானே முயற்சி்த்து இலவசமாக வரைபடத்தையும் தயார் செய்தேன். இது கப்பல் வடிவம் போன்று அமைய வேண்டுமென்ற தீர்மானத்தின் படி அந்த வரைபடத்தை நான் தயார் செய்து முடித்தேன்.
இக்கட்டிடத்திற்காக முதல் கட்ட வேலைக்கு நான்கு கோடி ரூபாய்களும், என்ற அடிப்படையில் திட்டங்களை வகுத்தேன். அதற்கான சகல விடயங்களும் பூர்த்தியான நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை என்னை அழைத்து பதவியை இராஜினாமாச் செய்யும்படி வேண்டினார். பின்னர் எனது முயற்சி கானல் நீராகிப்போனது. அதனை பின்வந்த எவருமே செயற்படுத்தவில்லை என்பது கல்முனை மாநகர மக்களுக்கு பாரிய அநியாயமாகும்.
நான் இங்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனக்கு மீண்டும் ஒரு அதிகார சந்தர்ப்பம் கிடைத்தால் இரண்டு வருடத்திற்குள் இந்த கல்முனை மாநகர சபைக்கான கட்டிடத்தை கட்டி முடித்துக் காட்டுவேன் என்ற சவாலை பகிரங்கமாக விடுகின்றேன்.
கேள்வி- முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படுகின்ற அம்பாரை மாவட்டத்தில் உங்களது அரசியல் முன்னெடுப்பு சவாலாக அமையாதா ?
நான் கடந்த அரசியல் காலத்தில் மக்களின் தேவையறிந்து அவர்களது காலடிக்குச் சென்று சேவையாற்றியவன் என்ற அடிப்படையில் எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் தேவையறிந்து சேவையாற்றுகின்ற ஒருவரை மக்கள் ஒருபோதும் புறந்தள்ளமாட்டார்கள். அந்த வகையில் யார் அவர்களது அரசியல் இலாபத்திற்காக என்ன சூழ்ச்சிகளைச் செய்தாலும் எனக்கு எதிராக செயற்பட்டாலும் எமது துாய்மையான அரசில் பயணத்திற்கு அது சவாலாக அமையாது. மக்களே சிறந்த தீர்ப்பாளர்கள்.
கேள்வி – விரைவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கும் எண்ணமுண்டா ?
பதில் – இதனை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் நாம் மக்களுக்கு புதிய பாதையை நோக்கிய பயணத்தில் சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்னின்று உழைப்போம்.