வடக்கு, கிழக்கை இணைக்கக் கூடாது என்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினதும் சுதந்திர கட்சியினதும் நிலைப்பாடே தங்களுக்கு நம்பிக்கை தருவதாக குறிப்பிட்ட அவர், கல்முனை தனி மாவட்ட யோசனையை இறுதி அரசியலமைப்பு அறிக்கையில் உள் வாங்காவிட்டால் அதற்கு எதிராக வாக்களிப்பதோடு பிரதி அமைச்சர் பதவியையும் தூக்கி எறியப்போவதாகவும் தெரிவித்தார்.
மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அனுமதிப்பது அடங்கலான 5 சட்டமூலங்கள் மீதான சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
வடக்கு, கிழக்கு தனி மாகாணமாக இருக்கலாமென்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையாக வடக்கு, கிழக்கு இணைப்பு இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய மாகாணம் தனியாக இருக்க வேண்டும் என்பதே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் விருப்பமாகும். மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுக்கட்டாயமாக பாராளுமன்றத்தினூடாக வடக்குடன் கிழக்கை இணைக்க முயற்சிக்கிறது. 60 வருட போராட்டத்தில் அதிகாரப் பகிர்வு கோரிய இவர்கள் இன்று தடம் புரண்டு வேறு திசையில் செல்கின்றனர்.
தந்தை செல்வா கூட இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்கள் இருக்க வேண்டுமென்று கூறியிருந்தார். 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் நகலில் தென்கிழக்கு மாகாணம் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ் முஸ்லிம் தலைவர்கள் இந்த தீர்வை ஏற்றிருந்தார்கள். ஆனால் கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு மாற்றமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்க முயற்சி செய்யப்படுகின்றது.
இந்த துரோகத்திற்கு கிழக்கில் மட்டுமன்றி நாடுபூராகவுமுள்ள எந்த முஸ்லிம்களும் துணைபோக மாட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண ஆட்சியில் பங்காளிகளாக உள்ளன. தமிழ் முஸ்லிம்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று சம்பந்தன் பல வருடங்களாக கூறிவந்தார்.
இன்று அந்த வாக்குறுதி சிதைக்கப்பட்டுள்ளது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினதும் சுதந்திர கட்சியினதும் நிலைப்பாடு எமக்கு நம்பிக்கையை தருகிறது. வடக்கு கிழக்கை இணைக்க நாம் இடமளிக்க மாட்டோம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் யோசனையை ஏற்க முடியுமென்றால் ஏன் அம்பாறை தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடான கல்முனை தனிமாவட்டக் கோரிக்கையை ஏற்க முடியாது.
அரசியலமைப்பு தொடர்பான இறுதி அறிக்கையில் கல்முனை தனி மாவட்ட யோசனை உள்வாங்கப்பட வேண்டும். இதனை உள்ளடக்காவிட்டால் அதற்கு எதிராக வாக்களிப்பேன். அதுமட்டுமன்றி பிரதி அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன்.
ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மக்களின் வாக்கினால் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.