வாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு கடதாசி ஆலை பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
வாழைச்சேனை கடதாசி ஆலை அமைக்கப்படுவதற்கு நானூறு ஏக்கர் காணி பொதுமக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம். இந்தக் காணிகள் முழுவதும் இப்பகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியாகும்.
இந்தக் காணியை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கும், அரசாங்கம் சுவீகரிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கும் காரணம் இங்கு தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதுடன், அமைக்கப்பட்டதால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற படியால் காணியை விட்டுக் கொடுத்தாலும் பரிகாரமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் காணியை சுவீகரிக்க சம்மதம் தெரிவித்தனர்.
யுத்தம் மற்றும் ஏனைய பிரச்சனைகள் காரணமாக தொழிற்சாலை சிலகால கட்டத்தில் மூடப்பட்டது. ஆனால் ஓரளவுக்கு தொழிற்சாலை இயங்கி வந்ததாகவும், சிலர் வேலை செய்ததாகவும் நான் அறிகின்றேன்.
தற்போது தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எவ்வித பங்களிப்பையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டிய முழு பங்களிப்பை கொரியா நிறுவனம் செய்வதற்கு தயாராக உள்ளது.
கொரியா நிறுவனம் சுதந்திரமாக செய்வதற்கு சந்தப்பம் வழங்கப்பட்டால் 2018ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பதாக ஆலையை புனரமைப்பு செய்து இயங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது.
அபிவிருத்தியைப் பற்றி, தொழில் வாய்ப்பை பற்றிப் பேசிக் கொண்டு, பத்து இலட்சம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பேசுகின்ற அரசாங்கம் பல நூற்றுக்காணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்த தொழிற்சாலை மூடப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலில் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பில்லாமல் தனியார் பங்களிப்பின் மூலமாக ஆரம்பிக்கக்கூடிய வழிவகை இருக்கின்றது. ஆனால் ஆரம்பிக்காமல் இருப்பதற்கு எவ்விதமான காரணமும் கிடையாது.
மறைமுகமாக ஏதும் காரணங்கள் இருந்தாலும், வெளிப்படையாக எங்களுக்கு தெரியக் காரணங்கள் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. ஆலை புனரமைப்பு விடயமாக தனிப்பட்ட முறையில் பிரதமருடன் கலந்துரையாடி கொரியா நிறுவனம் இங்கு முதலீடு செய்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
எங்களது மக்களை நாங்கள் கைவிட முடியாது. எங்களது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுமாக இருந்தால் காணியை வேலை வாய்ப்பு கிடைக்கு என்ற காரணத்துக்காக கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்.
பல்வேறு காரணங்களுக்கான யுத்த காலத்தில் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கலாம். தற்போது தனியார் முதலீட்டின் மூலமாக ஆரம்பிக்கக் கூடிய சூழல் இருக்கின்றது. இதனை யாரும் மறுப்பதற்கு நியாயமான நிலைப்பாடாக இருக்காது. எனவே பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் இறைவனின் அருளுடன் ஒரு சாதகமான முடிவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை கடதாசி ஆலை பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டதுடன், அங்கு ஆலையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாட மேற்கொண்டதுடன், பின்னர் வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிலைமைகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்.