உள்ளூரட்சி தேர்தல் இந்த காலத்திலும் நடைபெறும் என்ற சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் கடந்த 31ம் திகதி நிறைவேற்றப்பட்ட போதும், இன்னும் சில திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தாலும், அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ளப்படவேண்டும்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 30ம் திகதி இந்த திருத்தச்சட்ட மூலத்திற்கு எதிராக நீல் சாந்த என்ற முன்னால் பிரதேசசபை உறுப்பினரொருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கள் செய்துள்ளார். அதன் காரணமாக, இந்த மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வரும்வரை உள்ளூராட்சி தேர்தலை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இந்தரசாங்கமே செயல்படுகின்றதா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. என்ன விலை கொடுத்தும் உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டிய தேர்தல்களை சாட்டுப்போக்கு சொல்லி இழுத்தடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றார்கள்.
அதே நேரத்தில் மாகாணசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து, அந்த தேர்தலையும் உரிய நேரத்தில் நடத்தாமல் இழுத்தடிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இது சம்பந்தமாக 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அனைத்து மாகாணசபைகளிலும் அங்கீகாரம் பெறவேண்டும். ஆனால் சில மாகாண சபைகளில் அந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட மாகாணசபைகளில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி வெற்றியடையவேண்டும் என்று மைத்திரி அரசாங்கம் உறுதியாகவுள்ள அதே நேரம், மாகாணசபை தேர்தலை 2019ல் நடத்துவதற்கே திட்டமிட்டு செயல்படுகின்றது. இப்படியான செயல்பாடுகள் மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குட்படுத்தும் செயல்பாடு என்று தெறிந்து கொண்டும், அரசாங்கம் உரிய காலத்தில் அந்தந்த தேர்தலை நடத்தாமல், பல காரணங்களை சொல்லி காலம் கடத்துவதன் நோக்கம் தெறியாத ஒன்றல்ல.
தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால், அடுத்த கணமே ஆட்சிக்கு ஆபத்துவரும் என்ற நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதே அதற்கு காரணமாகும். அவர்களுடைய இயலாமையை மறைப்பதற்கே மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைத்து விளையாடுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்,
கல்முனை.