அண்மை நாட்களாக பர்மாவின் ரொஹிங்கியா பிரதேசத்தில் இடம்பெற்று வரும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான படுகொலைகள், இனச்சுத்திகரிப்புத் தாக்குதல்களை ஊடகங்கள் வாயிலாகவும், சமூகவலைத்தளங்கள் வாயிலாகவும் அறியக்கூடியதாக இருந்தது, இவை அனைத்தும் சாதாரண மனிதர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் அல்ல, மிகவும் கொடூரமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் சட்டரீதியாக தண்டிக்கப்படவேண்டிய பாரிய மனித உரிமை மீறல்கள் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கின்றார்கள், மேற்படி தாக்குதல்கள் இலங்கையின் பொதுவாக் மனிதத்தை நேசிக்கும் பலராலும் கண்டிக்கப்படுகின்ற அதேசந்தர்ப்பத்தில் குறிப்பாக முஸ்லிம் மக்களால் அதிகம் கண்டிக்கப்படுகின்ற ஒரு விடயமாகவும் மாறியிருக்கின்றது. இவ்விடத்தில்தான் பர்மிய தாக்குதல்களுக்கு எதிரான இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைப்பாடானது பௌத்தத்திற்கு எதிரான நிலைப்பாடாக மொழிப்யெர்ப்புச் செய்யக்கூடிய அபாயம் இருப்பதை இலங்கை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
தற்போதைய சமூகவலைத்தள உலகில் புறச்சூழ்நிலைகள் குறித்து எவ்வித கரிசனையும் இன்றியவர்களாக பலர் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக திட்டமிட்ட சதிகாரர்களும் இச்சமூகவலைத் தளங்களை தமது நிகழ்ச்சிநிரல்களை அரங்கேற்ற அதிகம் பயன்படுத்துகின்றார்கள் என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்தல் அவசியமாகு. அதேபோன்று இத்தகைய சமூகவலைத்தளங்களில் விசிலடித்தான் குஞ்சுகளாக பலர் இருப்பதையும் நாம் காணுகின்றோம்; ஒரு சில சில்லறை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் இதுவிடயத்தில் தமது நிலைப்பாட்டை முன்வைக்கின்றோம் என்றபோக்கில் அறிக்கைகள் வெளியிடுவதும், அதற்கான வரவேற்பை சமூகவலைத்தளங்களில் எதிர்பார்ப்பதும் பர்மிய விடயத்தில் மலிந்துபோயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இதுவிடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் சரியாக நெறிப்படுத்தப்படுதல் அவசியமாகும், இதன் அடிப்படையில் ஒரு சில கருத்துக்களை இங்கு முன்வைப்பது பொறுத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
பர்மாவின் ரொஹிங்கியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் மனிதகுலத்திற்கு எதிரானவை, அவை உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, குறித்த மனிதப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள், வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரும் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்படுதல் அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தரப்படுதல் வேண்டும்; இதிலே மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் என்ற அடையாளத்தோடு மேற்படி நீதிக்கான முயற்சிகளில் எமது வகிபாகம் எத்தகையது என்பதை நாம் மிகவும் தெளிவாக வரையறுத்துக் கொள்தல் மிகவுமே அவசியமாகின்றது. இதற்கான மிகப்பிரதானமான காரணம் “இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைப்பாடுகள் பௌத்தத்திற்கு எதிரான நிலைப்பாடாக” மொழிப்யெர்ப்புச் செய்யக்கூடிய அபாயம் இருக்கின்றமையாகும்.
பொதுவாக இலங்கை முஸ்லிம் மக்கள் தாம் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கம் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள்; எனவே உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகள் இடம்பெறுகின்றபோது அதற்கு எதிராக குரல்கொடுக்கின்ற போக்கு இலங்கை முஸ்லிம்களிடத்திலே நீண்டகாலமாகக் காணப்படுகின்றது. பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புகளின்போதும், ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புகள், காஷ்மீர் தாக்குதல்கள், ஈராக் மீதான தாக்குதல்கள், சிரியாவில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக என பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை முஸ்லிம்கள் தங்களுடைய குரல்களை முன்னிறுத்தியிருக்கின்றார்கள். அதேபோன்று ஒரு செயலாக மாத்திரம் பர்மியத் தாக்குதல்கள் மீதான எதிர்ப்புகளை இலங்கை அரசாங்கமும், இலங்கையின் பௌத்த சிங்கள மக்களும் நோக்குவார்கள் என்று எண்ணிவிடலாகாது, அது பௌத்தத்தின் மீதான எதிர்ப்பாகவே அர்த்தம் கொள்ளப்படும். இப்போது ஒரு சில முஸ்லிம்கள் பெயர்களோடு இயங்கும் சமூகவலைத்தளங்களில் இத்தகைய “பௌத்த எதிர்ப்புவாதம்” இளையோடத் தொடங்கியிருக்கின்றது. இதனையும் இலங்கை முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்துக்கொள்தல் அவசியமாகும்.
பர்மாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றார்கள், குறிப்பாக அராக்கான் மாநிலத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள், இங்கு இரண்டு சமூகங்களுக்குமிடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவிவருகின்றன. இதுவிடயத்தில் துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன, இன்னும் பர்மா நீண்டகாலமாக இராணுவ ஆட்சியில் இருந்த காரணத்தினால் பல நாடுகள் பர்மாவுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தே வந்துள்ளன, இப்போது ஆன் சான் சூஹி தலைமையிலான கட்சி ஜனநாயக வழியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றது, இருந்தபோதிலும் ஜன்நாயாக ஆட்சிமுறைமையில் இன்னும் பல்வேறு முன்னேற்றங்கள் அங்கு இடம்பெறவேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே அங்கு வன்முறைகள் வெடித்திருக்கின்றன, இவற்றை உலகின் ஏனைய முஸ்லிம் நாடுகளும், ஏனைய முஸ்லிமல்லாத நாடுகளும் கவனித்துக்கொண்டேயிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்தல் அவசியமாகும்.
பர்மிய வன்முறைகளை புரிந்துகொள்வதிலும், அதனை பரப்புரை செய்வதிலும் இலங்கை முஸ்லிம் மக்கள் மிகவும் அடிப்படையான நிலைப்பாடுகளை முதலில் மேற்கொள்தல் அவசியமாகும். அத்தகைய நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கை முஸ்லிம்கள் இதுவிடயத்தில் தமது கரிசணைகளையும் முயற்சிகளையும் முன்வைத்தல் சிறப்பானதாக அமையும்;
முதன்மையாக “பர்மிய ரொஹிங்கியாவின் வன்முறைத் தாக்குதல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களாகும்”; இதனால் ரொஹிங்கியா பிரஜைகள் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயது முதிர்ந்தோர், ஆண்கள், பெண்கள் என எவ்விதமான வித்தியாசமும் இன்றி கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகின்றார்கள், காயப்படுத்தப்படுகின்றார்கள், பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள், உடமைகளை இழக்கின்றார்கள், இருப்பிடத்தை இழந்து வெளியேற்றப்படுகின்றார்கள், அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உலகில் வாழும் உரிமை பறிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றார்கள். எனவே இது உலகின் அனைத்து மனிதர்களுக்கும் அச்சுறுத்தலான செயற்பாடாகும். இதனை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதை விடவும் பொதுவாக பர்மிய மக்கள் என்று அடையாளப்படுத்துவதே சிறப்பானது. இதனடிப்படையில் இலங்கை முஸ்லிம்களும் ரொஹிங்கியாவில் இடம்பெறும் அனைத்து வன்முறைத் தாக்குதல்களையும் “மனித உரிமை மீறல்கள்” என்றே நோக்குகின்றார்கள்.
பர்மிய வன்முறைகள் மனிதத்திற்கு எதிரான வன்முறைகளேயாகும்; இவை குறித்த ஒரு மதக்குழுவை சார்ந்ததாக அடையாளப்படுத்தப்படுவதை நாம் விரும்பவில்லை, மதங்களிற்கும் வன்முறைத் தாக்குதல்களுக்கு தொடர்புகள் இருக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
அடுத்து மேற்படி வன்முறைத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களிடமிருந்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் பிரகாரம், அவர்களுடைய பிரச்சினைகளின் மீது சர்வதேச சமூகத்தின் உடனடியான கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதாகும். எனவே இலங்கை முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மேற்படி விடயம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு ஒத்துழைப்புகள் வழங்கப்படுதல் அவசியமானது; என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்துகின்றார்கள்.
இலங்கை இறைமையுள்ள ஒரு அரசு என்ற ரீதியில் மற்றுமொரு இறைமையுள்ள பர்மிய அரசின் மீது பிரத்தியேகமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கும். அந்தவகையில் பர்மிய அரசின் மனித உரிமைகள் மீறப்படும் வகையிலான செயற்பாடுகள் விடயத்தைக் கையாள்வதில் இலங்கை அரசுக்கு மிகவும் தெளிவான நிலைப்பாடுகள் காணப்படும் என்பதை எம்மால் ஊகித்துக்கொள்ளமுடியும், எனவே இலங்கை அரசின் இறைமையின் பங்காளிகள் என்றவகையில் அதன் பிரஜைகள் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்கள் தம்முடைய கவலையையும், கரிசணையினையும் இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்தல் அவசியம் என்ற கருத்தை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும்.
இலங்கை முஸ்லிம்கள் என்ற ரீதியில்; பர்மாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், உலகின் ஏனைய நாடுகளை பொதுவாகவும், குறிப்பாக முஸ்லிம் நாடுகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவையும் இதுவிடயத்தில் போதுமான கவனத்தை செலுத்தும்படி கோருவதற்கு எமக்கு முழுமையான உரித்து இருக்கின்றது, இவ்வுரித்தினை நாம் இவ்விடயத்தில் பயன்படுத்த முடியும்.
இவ்வாறான விடயங்களை இலங்கை மக்கள் என்ற பொது அடையாளத்தோடு அனைத்து இலங்கை மக்களையும் ஒன்றிணைத்து, ஜனநாயகரீதியாகவும், இலங்கை அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்தாமலும், நாகரீகமான வழிமுறைகளினூடாக முன்னெடுத்தல் சிறப்பானதாகும். பர்மிய வன்முறைத் தாக்குதல்கள் விடயத்தில் மேற்படி அடிப்படைகளை இலங்கை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்வது காலத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது.