பெண்களுக்கு துஸ்பிரயோகம் செய்யும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வித்தியாவின் வழக்கில் மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக்கட்;டட ஆரம்ப வேலை பூர்த்தியை திறந்து வைத்தலும், கணனி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
இந்நாட்டில் சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் என்ற பல விடயங்கள் இன்று அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதிலே சிறுவர்கள் மற்றும் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்கின்றார்கள்.
வடக்கிலே இரண்டு வருடத்திற்கு முன் வித்தியா என்ற மாணவியை மிகவும் கொடுரமான முறையில் நாங்கள் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிகழ்வாக பெண் குலத்தை கேவலமாக மதித்த அயோக்கியர்களின் வரலாற்றுக்கு நீதியான முறையில் பெண்களுக்கு துஸ்பிரயோகம் செய்யும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏழு பேருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலே நல்லாட்சிக்கு முன்னுதாரணமாக இவ்வாறான தீர்ப்புகள் மாத்திரமல்ல, பெண்மணிகள் கொடூரமாக துஸ்பிரயோகம் செய்யப்படுகின்ற போது அவற்றுக்கு பாரிய தண்டணை கொடுக்கின்ற போது மாத்திரம் தான் கொடூரமான பாவிகளில் இருந்து நாங்கள் பெண்களை, சிறுவர்களை மீட்க முடியும். நாட்டை நல்ல முறையிலே முன்னுதாரணமான நாடாக வழி நடத்த முடியும்.
மாணவர்களுடைய கல்வி மேம்படுத்துவதற்காக ஆளனி மற்றும் கட்டட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமனங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது. 1700 ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள். இவர்களுக்கான நியமனம் ஒக்டோபர் மாதமளவில் வழங்கப்படும்.
இன்னும் 3200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குமாறு அனுமதி கேட்டோம். அது தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வருட இறுதிக்குள் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரி என்ற விடயம் காணப்படாது என்பதை தெரிவிக்கின்றேன்.
எங்களுக்கு ஆட்சிகள் தரப்படுகின்ற போது அவற்றை நாங்கள் நியாயமான முறையிலே எந்தவித பாகுபாடுமின்றி, இனவேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான ஒரு நல்லாட்சியை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தினோம். அதனை தொடர்ச்சியாக ஏற்படுத்துவதற்கு இன்று பல வழிகளை ஏற்படுத்தியுள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆட்சியில் இருக்கும் போது மாத்திரம் இணைந்திருக்க வேண்டும். அது ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து சிறுபான்மை சமூகத்தினுடைய அரசியல் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து முன்னுதாரணமான நல்லாட்சியை நடாத்திக் காட்டியிருக்கின்றோம். அது மக்கள் மத்தியில் சென்று பலன்கள் சேர்கின்ற வேளையிலே, சேர்ந்து கொண்டு வருகின்ற வேளையிலே, மக்கள் மத்தியில் இனநல்லுறவு ஏற்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில் இவை தொடர்ந்தும் நிலைக்க வேண்டும்.
ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒற்றுமையாக சிறுபான்மை சமூகத்தின் குரலாக, இரண்டு சமூகத்தின் உரிமைகளும் பெற்று இரண்டு சமூகமும் கௌரவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவர் கே.பி.எஸ்.ஹமீட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எஸ்.இஸ்மாயில், பிரதேச பாடசாலை அதிபர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஒதுக்கப்பட்ட 13 மில்லியன் ரூபாய் நிதியில் கட்டப்பட்ட மூன்று மாடிக் கட்டட ஆரம்ப வேலை பூர்த்தி செய்யப்பட்டதை திறந்து வைத்ததுடன்;, அதனை முற்றுமுழுதாக முடிப்பதற்கு இன்னும் எட்டு மில்லியன் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தார்.
அத்தோடு பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கணனி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், கிழக்கு முதலமைச்சர் மற்றும் பாடசாலை அதிபர் வாழைச்சேனை ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.