தோட்ட சுகாதாரத்துறையை தேசியமயமாக்கும் கோரிக்கை தொடர்பில் தோட்ட வைத்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

பெருந்தோட்டத் துறையில் நடைமுறையில் உள்ள சுகாதார முறைமை தனியார் வசமானது. பெருந்தோட்ட கம்பனிகளினால் பராமரிக்கப்படும் வைத்திய நிலையங்களே பெருந்தோட்ட சமூகத்திற்கு சேவையாற்றுகின்றன.

 இந்த வைத்திய நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை மாத்திரமே சுகாதார அமைச்சு வழங்கிவருகின்றது. ஏனைய அனைத்து விடயங்களும் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பிலேயே உள்ளது. தோட்ட மருத்துவ அதிகாரிகளுக்கான சம்பளமும் தோட்டக் கம்பனிகளினாலேயே வழங்கப்படுகின்றன. பெருந்தோட்டப் பகுதி சுகதாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லை. எனவே அரசாங்கம் கொள்கைத் தீர்மானம் ஒன்றை எடுத்து பெருந்தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். 

இதனால் தற்போது பணியில் உள்ள தோட்ட வைத்திய உத்தியோத்தர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட தோட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குமான சந்திப்பு ஒன்று 24.09.2017 டிக்கோயா பெருந்தோட்ட மனிதவள நிதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.தோட்ட மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு சங்கத்தின் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் சுரேஸ் ராஈஜந்திரன் வரவேற்புரையை ஆற்றியதுடன் சிரேஸ்ட தோட்ட வைத்திய அதிகாரி சிவபாலன் தமது அதிகாரிகளுக்கு நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தமது உறுப்பினர்கள் தோட்ட வைத்தியத் துறையில் பலவருட காலம் சேவையாற்றியபோதும் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை எனவும் இந்த நிலையில் தோட்ட சுகாதார சேவை தேசிய மயமாக்கப்படும் எனும் கதையாடல் நாடாளுமன்றில் இடம்பெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறியும் போது தங்களது தொழிலுக்கும் உத்தாரவாதம் இல்லை என உணர்வதாகவும் சுட்டிக்காட்டினார். 

தோட்ட வைத்திய அதிகாரிகளின் கருத்துக்களை செவிமடுத்த பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தோட்டச் சுழலில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு தோட்ட வைத்திய அதிகாரிகளின் வரலாறும் அவர்களின் செயற்பாட்டு முக்கியத்துவமும் நன்கு தெரியும். 

எனினும் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதை அரசியல் இலக்காகக் கொண்டு செயற்படும் எமது அரசியல் பயணத்தில் தோட்ட சுகாதார முறைமை தேசிய மயமாக்கப்படல் வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகவுள்ளது. மலையக மக்களின் பறிக்கப்பட்ட குடியுரிமை மீள வழங்கப்பட்டபோதும் அவர்கள் இன்னும் முழுமையாக தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படவில்லை. இலங்கையில் இலவசக்கல்வி அறிமுகமாகி சுமார் முப்பது வருடங்களின் பின்னரே மலையகப் பெருந்தோட்ட மக்கள் தேசிய அரசாங்க கல்வித்திட்டத்துக்குள்ளும் கல்வி நிர்வாகத்திற்குள்ளும் கொண்டுவரப்பட்டனர்.

 சுமார் 15 வருடங்களுக்கு முன்னரே அவர்களுக்கு மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இப்போதுதான் வீடமைப்புத்திட்டங்கள் தேசிய மயப்பட்ட ஒரு நிலையினை எட்டியுள்ளது. வீடமைப்புக் காணிகளுக்கு இப்போதுதான் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் தபால் சேவை கூட முழுமையாக அவர்களை சென்றடையவில்லை. இந்த காரணங்களினால்தான் மலையகம் இன்றும் குறை விருத்தியில் உள்ளது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோட்டப்பாடசாலை எவ்வாறு தோட்ட முகாமையாளருக்கு கீழாக இருந்ததோ எவ்வாறு தோட்டப்பாடசாலை ஆசிரியர்களுக்கு தோட்ட முகாமையாளர் சம்பளம் கொடுத்தாரோ அதுபோலத்தான் தோட்ட வைத்தியர்களாகிய நீங்கள் இன்னும் தோட்ட முகாமையாளரிடம் சம்பளம் வாங்கும் உத்தியோகத்தர்களாக இருக்கின்றீர்கள்.

 இதுவே தோட்ட சுகாதார முறைமை இன்னும் தேசிய மயமாக்கப்படவில்லை என்பதற்கான உதாரணம் ஆகும்.

தோட்ட சுகாதார முறைமையை அரசமயமாக்கும் பணிகள் 2008 ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் சுகாதார பிரதியமைச்சராக இருந்தகாலத்தில் ஆர்பிக்கப்பட்டபோதும் அது தொடர்ச்சியாக இடம்பெறவில்லை. அதற்கு காரணம் அரசாங்கத்திடம் அது தொடர்பான தேசிய கொள்கை ஒன்று இல்லை. 

எனவேதான் தோட்ட சுகாதாரம் தொடர்பில் அரசாங்கம் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படல் வேண்டும் என நான் தொடரச்சியாக நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகின்றேன். நாடாளுமன்றில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேற்பார்வைக் குழு உறுப்பினராக இருந்து அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள தோட்டப்பகுதி சுகாதார துறையை மேம்படுத்தும் உப குழுவின் தலைவராகவும் நான் செயற்படுகின்றேன். 

இந்தக்குழுவின் முன்னிலையில் தோட்டப்பகுதி சுகாதாரத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அதிகாரிகள், மாகாண சுகாதார அமைச்சுகளின் அதிகாரிகளை அழைத்து பல கலந்துரையாடல்களை நடாத்தி ஒரு வழிப்படுத்தல் குழுவை அமைத்துள்ளதுடன் அவர்கள் ஒரு அறிக்கையையும் என்னிடம் கையளித்துள்ளனர். அதில் தோட்ட வைத்திய அதிகாரிகளுடன் இணைந்த கொத்தணி முறையிலான சுகாதார சேவை ஒன்று தொடர்பில் அவர்களால் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. 

அந்த குழுவில் உங்களது ஆலோசனைகளையும் இணைத்துக்கொள்ள முடியும். விரைவில் நாடாளுமன்றத்துக்கு வந்து குழு அறையிலே உங்களது ஆலோசனைகளை பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றேன். நாம் எல்லோரும் சேர்ந்து தோட்ட சுகாதார சேவையை சரியான வழிக்கு கொண்டு வர உழைப்போம். நீங்கள் இந்த திட்டத்தின் பங்காளிகள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

சுமார் நூற்றி ஐம்பது வருட காலத்திற்க மேலாக தோட்ட சுகாதாரத் துறையில் கடமையாற்றி வரும் தோட்ட வைத்திய அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள நிறையவே ஆலோசனைகள் உண்டு. உங்களது தொழிலுக்கு உத்தரவாதம் உள்ள நிலையிலேயே நாம் முறைமை மாற்றத்தை செய்வோம். நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -