யாருக்கும் அச்சமின்றி தயக்கமின்றி ஆளுமையுடன் எமக்கான நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டுமென கிழக்கு மாாகண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி அல் ஹிதாயா மகாவித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,
கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட 38 இலட்ச ரூபா மாகாண நிதியினால் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வௌியான கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வௌிமாகாணங்களுக்கும் தூர மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டனர்,
இந்த நியமனங்கள் மத்திய அமைச்சினாலேயே வழங்கப்பட்டிருந்தன,அந்த சந்தர்ப்பத்தில் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி போன்ற பகுதிகளில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால் மத்திய அரசில் பதவிகளை வகித்த அவர்களால் வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஒரு ஆசிரியரைக் கூட சொந்த மாகாணத்துக்கு எடுக்க முடியவில்லை,
ஆனால் மாகாண அரசிலுள்ள நாங்கள் மத்திய அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்,கல்வியமைச்சர் ஆகியோருடன் கதைத்து கடந்த இரண்டு வருடங்களும் வௌிமாகணங்களுக்கு நியமனம் பெற்ற எமது ஆசிரியர்களை சொந்த மாகாணத்திலேயே நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தோம்,
ஆனால் 2014 ,2013 ஆண்டுகளில் கூட மாகாண மற்றும் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் இருந்தார்கள்,அவர்களுக்கு அப்போது கூட அந்த ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமிப்பதற்கான ஆளுமை இருக்கவில்லையா என்ற கேள்வி சமூகத்தின் மத்தியில் உள்ளது,
அத்துடன் பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போது பலர் அறிக்கைகள் விட்டதுடன் பட்டதாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்,
ஆனால் நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கதைத்து முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்,
இதற்கு முன்னர் சிலருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்டோருக்கான நியமனங்களை வழங்குவதற்கான போட்டிப் பரீட்சைகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி நடத்தப்படவுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் வழங்கப்படவுள்ளன.
மேலும் மூவாயிரத்து 100க்கும் மேற்பட்டோருக்கான அனுமதிகள் விரைவில் கிழக்கு மாகாணத்துக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன,
இவையெல்லாம் தானாக கிடைத்து விடவில்லை,நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னரே சாத்தியப்பட்டுள்ளன.
எனவே எமது மக்களின் உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் அரசியல் தலைமைகளை உருவாகக் மக்கள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.