ஒரு சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்றால், அந்த சட்டமூலத்தில் உள்ளடங்கப்பட்ட விடயங்களை வாசித்து அறிந்து கொள்வதற்காக அதன் பிரதியினை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கால அவகாசம் இருக்கத்தக்கதாக வழங்கப்படுதல் வேண்டும்.
அப்போதுதான் பாராளுமன்றத்தில் விவாதித்து அதனை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது திருத்தம் செய்வதா? என்று ஒவ்வொரு கட்சிகளும் தீர்மானிக்கும். இதுதான் கடந்தகால நடைமுறையாகும்.
ஆனால் இந்த நடைமுறைகளுக்கு மாற்றமாக கடந்த இருபதாம் திகதி காலையில் 31 பக்கங்கள் அடங்கிய மாகாணசபை திருத்தச்சட்டத்தின் பிரதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனை வாசித்து விளங்கிக்கொள்வதற்கு கால அவகாசம் வழங்காமல் அன்று மாலையிலேயே வாக்கெடுப்புக்கு விடப்படுவதாகவும், அதுவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின்றி சாதாரண பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் இதனை திருத்தம் செய்யவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்த திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம் மக்களுக்கு இருந்த ஆபத்தினை அறிந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் உடனடியாக செயலில் இறங்கினார். இதன் திருத்தங்கள் பற்றி ரணிலுக்கு எடுத்துக்கூறியபோது அவர் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன் இந்த சட்டமூலம் திருத்தம் செய்யப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்படுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்ற அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்யப் வேண்டுமென்று மு.கா பாராளுமன்ற குழு கூடி தீர்மானித்ததுடன், இதனை ரணில் விக்ரமசிங்கவுக்கும் ரவுப் ஹக்கீம் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பின்பு உடனடியாக மனோ கணேசன், தீகாம்பரம், இராதாகிருஸ்ணன் உட்பட ஆறு உறுப்பினர்களையும் அழைத்து பேசியதுடன், இதன் ஆபத்துக்கள் பற்றி அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கும் விளங்கப்படுத்தப்பட்டது.
முன்னாள் நீதி அமைச்சரான ரவுப் ஹக்கீம் அவர்கள் சட்டமா அதிபருடன் பாராளுமன்ற கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடாத்தி சாதாரண பெரும்பான்மையின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்தான் இதனை சட்டமாக்க வேண்டும் என்ற சம்மதத்தினை பெற்றுக்கொண்டார். இந்த பேச்சுவார்த்தையின்போது ஏனைய சில கட்சி தலைவர்களும் இருந்தார்கள்.
இந்த சட்டமூலத்தினை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ரவுப் ஹக்கீம் அவர்கள் செயல்பட்ட விதத்தினை பார்த்த முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு சட்டமுதுமாநியாக இருப்பதனையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அன்றைய தினம் இந்த சட்டமூலத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் ரவுப் ஹக்கீம் அவர்கள் மிகவும் காரசாரமாக உரையாற்றி இருந்தார். அதில் நிலையியல் கட்டளை, உரிய விதிகள், அரசியலமைப்பு சட்டம் ஆகியவைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அன்று பாராளுமன்றத்தில் ஒரு பதட்டமான நிலைமை காணப்பட்டது. அதன் பின்புதான் ஹிஸ்புல்லாஹ், மஸ்தான், மிஜிபுர்ரஹ்மான், ஹலீம், கபீர் காசிம் போன்ற இரு தேசிய கட்சிகளின் முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான சிறுபான்மை உறுப்பினர்கள் ரவுப் ஹக்கீம் அவர்களின் பாராளுமன்ற காரியாலயத்தில் ஒன்று கூடினார்கள்.
இந்த ஒன்றுகூடலை அறிந்த பிரதமர் ரணில் அதிர்ச்சி அடைந்ததுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்தான் இந்த சட்டத்தினை நிறைவேற்ற முடியும் என்ற சட்டமா அதிபரின் வேண்டுதலை அடுத்து தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்ததுடன், அமெரிக்காவில் இருந்த ஜனாதிபதுயுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ரணில் உடன்பட்டார்.
அந்தவகையில் கலப்பு முறை தேர்தல் மூலம் 60:40 என்றதனை 50:50 ஆக மாற்றம் செய்யப்பட்டதுடன், எல்லை நிர்ணயம் எவ்வாறு அமைக்கப்படல் வேண்டும் என்ற விடயமும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த விடயத்தில் தொகுதி பிரிப்பது விடயத்தில் தொகுதி எல்லை நிர்ணய குழு ஒரு மாதத்துக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதில் பிரதமர் தலைமையில் ஐந்து பேர்கள் கொண்ட குழு சபாநாயகரினால் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் இதில் இன்னும் மாற்றங்கள் செய்யப்படுவதாக இருந்தால் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனே மாற்றம் செய்யப்படல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எனவே விடயம் இவ்வாறு இருக்கும்போது அன்று ரவுப் ஹக்கீமுக்கு பின்னால் சேர், சேர் என்று கூறிக்கொண்டு இருந்த சிலர் தாங்களே அனைத்தையும் செய்ததாக ஊடகங்களில் உரிமை கொண்டாடும் விதமாக அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது.