காத்தான்குடியில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி..!

எம்.ரீ.ஹைதர் அலி-
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் நாட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மிலேச்சத்தனமான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு காத்தான்குடி முஸ்லிம் மக்கள் சார்பாக தமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதோடு இப்பிரச்சினை தொடர்பாக சர்வதேசம் உடனடி கவனமெடுத்து மியன்மார் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். 

மியன்மார் நாட்டிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு மற்றும் இனவெறித் தீவிரவாத அமைப்புகளினால் தொடர்ச்சியாக வன்கொடுமைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையினை கண்டித்து இன்று காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்கள், அரசியல் குழுக்கள் இணைந்து மாபெரும் அமைதிக் கண்டனப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. 

இக்கண்டனப் பேரணியின் போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சமூகம் இனவாத குழுக்களினால் அநியாயமான முறையில் துன்புறுத்தப்படுவதும், மக்களை பாதுகாக்கவேண்டிய அரசே தன்னாட்டு மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கி செயற்படுவதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். 

மியன்மார் நாட்டு அரசினால் அந்நாட்டு அப்பாவி முஸ்லிம் மக்கள் இவ்வாறு நசுக்கப்படும் வேளையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் என்பன உடனடியாக தலையிட்டு அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு உள்ளது. 

ஆனால் துரதிஸ்டவசமாக மியன்மார் நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொன்று குவிக்கப்படுகின்ற போதிலும் சர்வதேசத்தின் அழுத்தம் போதியளவு வழங்கப்படவில்லை என்பதனை எம்மால் உணர முடிகின்றது. 

ஆகவே உலகம் பூராகவும் உள்ள நாடுகளில் இருக்கக்கூடிய முஸ்லிம் மக்கள் தமது பூரண எதிர்ப்பினை வெளிக்காட்டுவதனூடாக சர்வதேசத்தின் முழுமையான கவனத்தினை மியன்மார் நாட்டின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற ஒரு அடிப்படையில் இடம்பெறும் கண்டன பேரணிகளின் ஒரு அங்கமாக இன்று காத்தான்குடி பிரதேச ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த கண்டனப் பேரணியினை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார். 

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்கள், அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த கண்டன பேரணியின் போது அதிகளவான மக்கள் ஒன்றிணைந்து மியன்மார் அரசுக்கு எதிரான தமது பூரண எதிர்ப்பினை வெளியிட்டியிருந்தனர்.

அத்துடன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவங்களின் சம்மேளனம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் காத்தான்குடி மக்கள் சார்பாக மியன்மார் நாட்டு அரசுக்கெதிராக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இதன்போது மகஜர்கள் கையளித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -