--------------------------------
மேற்படி இடைக்கால அறிக்கை தொடர்பாக விரிவான ஒரு ஆக்கம் வெளியிட இருக்கின்றேன், இன்ஷாஅல்லா. வடகிழக்கு இணைப்பு விவகாரம் ஒரு பிரதான பேசுபொருளாக இருப்பதால் இப்பதிவு இடப்படுகிறது.
இந்த இடைக்கால அறிக்கையை வாசிக்கின்றபோது இரண்டு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
1) இடைக்கால அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்பட்டிருப்பவை
2) அவற்றிற்கு பின்னால் உள்ள அரசியல் யதார்த்தங்கள்
இந்த அறிக்கை மிகவும் சூட்சுமமாக எழுதப்பட்டிருக்கின்றது. பல விடயங்கள் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கின்றன. பூதம் உண்மையான சட்டவரைபு நேரத்திலேயே கிழம்புவதற்கு வாய்ப்பிருக்கிற்றது.
அதேநேரம் இந்த இடைக்கால அறிக்கை உபகுழுக்களின் அறிக்கையுடனும் கட்சிகளுக்கு 08/08/2017 இல் வழங்கப்பட்ட இடைக்கால அறிக்கையுடனும் சேர்த்து வாசிக்கப்பட்டால்தான் ஓரளவு தெளிவு கிடைக்கும். ஆனால் அந்த அறிக்கை பகிரங்கப் படுத்தப் படவில்லை. எனவே இவை எல்லாவற்றையும் அடிப்படையாகவைத்து எனது விரிவான அறிக்கையை எழுத எதிர்பார்க்கின்றேன் இன்ஷாஅல்லாஹ்.
மறுபுறத்தில் இவ்வாறு நேரம் செலவழித்து எழுதுகின்ற எழுத்துக்களால் சமூகம் எவ்வளவு தூரம் பிரயோசனமடைகின்றது? என்ற கேள்வியும் எனக்குள் இருக்கின்றது. ஏனெனில் நமது சமூகம் உப்புச்சப்பு இல்லாத, அல்லது 'ஹலாய் பலாய்' என்ற சொல்லக் கூடிய விடயங்களில் வரிந்துகட்டிக்கொண்டு காட்டுகின்ற ஆர்வம் அறிவுபூர்வமான விடயங்களில் இல்லை, அது சமூகத்திற்கு முக்கியமான அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தபோதும்.
மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு கைஉயர்த்தியவர்கள் 60:40 ஐ 50:50 ஆக குறைக்கப் போராடியதை இன்னும் விபரித்து முடியவில்லை. இவ்வாறு குறைத்ததனால் சமூகத்திற்கு என்ன லாபம் என்று கைஉயர்த்திய எந்தவொரு அரசியல்வாதியும் கூறியிருக்கின்றாரா? முடிந்தால் கூறுங்கள். போராடினோம்! அடிக்க வந்தார்கள்!! உதைக்க வந்தார்கள்!!! என்று விளம்பரம் தேடுகின்றார்கள்.
அன்று ( 2015) நாங்கள் " விகிதாரமும் தொகுதிமுறையும்' என்ற தேர்தல்முறை ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டபோது இவ்வாறு குறைக்கவேண்டுமென்ற கோரிக்கை சிறிய கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. எவ்வாறு குறைத்தாலும் இதன்ஆபத்தை முழுமையாக நீக்கிவிட முடியாது; என்பதனால்தான் அதன்பின் விகிதாசாரத்தினுள் தொகுதிமுறை முன்வைக்கப்பட்டிருக்கப்பட்டது. இன்றும் முன்வைக்கப்பட்டிருப்பது " அதே விகிதாசாரத்தினுள் தொகுதிமுறை என்றுதான் இதுவரை எமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன ( சட்டம் வெளியானதும் தெரியும், மாறாக இருந்தால் அதையாவது கூறுங்கள்" இதில் 60:40 என்றால் என்ன, 50:50 என்றால் என்ன? பாரிய வித்தியாசம் எதுவுமில்லை. இங்கு தேவைப்படுவது " இரட்டை வாக்கு". இதனைக் கேட்டீர்களா? போராடினீர்களா? என்ன போராட்டம் செய்தீர்கள். அதற்கு கேட்டதைப்போய் புரியாமல் இதற்கு கேட்டிருக்கின்றீர்கள். இதுதொடர்பாக நீங்கள் ஆயத்தம் என்றால் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் சந்திக்கலாம்.
இதுதொடர்பாக முதலாம் பகுதி நேற்று வெளியிட்டிருக்கின்றேன். எத்தனைபேர் வாசித்தார்களோ தெரியவில்லை. இது அறிவோடு சம்மந்தப்பட்டது. எனவே பொதுவாக நம்மவர்களுக்கு அதனை வாசிப்பதில் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசியுங்கள். அதன்பின் நீங்களே தீர்மானியுங்கள் இவர்களின் போராட்டத்தில் ஏதும் பிரயோசனம் உண்டா? என்று.
மறைந்த தலைவர் மக்களை உணர்ச்சியூட்டித்தான் ஒன்றுபடுத்தினார். அதற்காக மார்க்கத்தையும் பயன்படுத்தினார்; என்ற ஒரு குற்றச்சாட்டு அவரது எதிரிகளால் முன்வைக்கப்படுவதுண்டு. மறைந்த தலைவர் நிலைப்பாடு சரி என்பது எனது கருத்தாகும். ஏனெனில் அறிவுரீதியாக சமூகத்திற்கு எது நன்மை, எது தீமை என்ற அடிப்படையில் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதானால் இன்னும் பல தசாப்தங்கள் எடுக்கலாம். அன்று தலைவர் சமூகத்தின் நன்மைக்காக அந்த உணர்ச்சியைப் பயன்படுத்தினார். இன்று சுயநலத்திற்காக அந்த உணர்ச்சி பயன்படுத்தப் படுகின்றது. இந்நிலையில் சரியையும் பிழையையும் அடையாளம்கண்டு என்று இந்த சமூகம் அர்த்தமற்ற உணர்ச்சிகளுக்கப்பால் நிலைப்பாடுகளை எடுக்கின்றதோ அன்றுதான் இந்த சமூகத்திற்கு விடிவு.
இடைக்கால அறிக்கைக்கு வருவோம்.
இங்கு கவனிக்கவேண்டியது, ஏனையவிடயங்களில் முன்மொழிவுகளைச் செய்ததுபோன்று இந்த விடயத்தில் வழிகாட்டல்குழு எந்தவொரு முன்மொழிவையும் செய்யவில்லை, மாறாக இந்த விடயம் மேலும் ஆராயப்பட வேண்டும் அல்லது பரிசீலிக்கப்பட வேண்டும்; என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் வழிகாட்டல் குழுவில் கலந்தாலோசிக்கப்பட்ட மூன்று நிலைப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
1) தற்போதைய அரசியல் யாப்பிலுள்ள இணப்புத்தொடர்பான சரத்து 154A (3) தொடர்ந்தும் இடம்பெற வேண்டும். மேலதிகமாக ஒவ்வொரு மாகாணத்திலும் சர்வஜனவாக்கெடுப்பைக் கோருவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
2) மாகாண இணைப்புகளுக்கு அரசியலமைப்பில் இடம் வழங்கப்படவே கூடாது.
3) வடக்கும் கிழக்கும் ஒரு தனிமாகாணமாக அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
எனவே, எந்தவொரு திட்டவட்டமான நிலைப்பாடும் பிரேரிக்கப்படவில்லை. கலந்தாலோசிக்ககப்பட்ட விடயங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை நேரடியாக குறிப்பிடப்பட்டவை:
அரசியல் யதார்த்தம்:
இணைப்பிற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாக த தே கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
மு கா இணைப்புத் தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் தனி அலகு தொடர்பாக எந்த வாசகமும் இடம்பெறவில்லை.
வெளிசக்தி அழுத்தங்கள், இந்திய நிலைப்பாடு கணிசமான தாக்கத்தைச் செலுத்தும்.
பிரதமருக்கு இணைப்பிற்கு சாதாகமான நிலைப்பாடு இருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ( பல கடந்தகால, நிகழ்கால நிகழ்வுகள் அல்லது நிலைப்பாடுகளை அவதானிக்கும்போது இவ்வாறு ஊகிக்க வாய்ப்பு இருங்கின்றது)
மறுபுறத்தில்
சதந்திரக்கட்சி எதிர்க்கின்றது
கூட்டு எதிரணி எதிர்க்கின்றது
கடும்போக்கு சிங்களக் கட்சிகள் எதிர்க்கின்றன.
ஜனாதிபதியும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்க வாய்ப்பிருக்கின்றது.
இந்நிலையில்
வடகிழக்கை ஒரு தனிமாகாணமாக நேரடியாக அரசியலமைப்பில் அங்கீகரித்தல் சாத்தியப்படுவது கடினம். ( மூன்றாவது நிலைப்பாடு)
அதேநேரம் இணைப்பிற்கு அரசியலமைப்பில் இடம் வழங்கவே கூடாது; ( இரண்டாவது நிலைப்பாடு) என்ற நிலைப்பாட்டை எடுப்பதும் சிரமமாகலாம். எனவே,
முதலாவதான, தற்போதைய சரத்து அப்படியே, அல்லது சிறிய திருத்தங்களுடன் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது.a
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பாக பலருக்கு குழப்பம் இருக்கின்றது. ஆனால் அது பெரும்பாலும் தனித்தனி மாகாணங்களாகத்தான் இருக்கும். மாறாக இணைத்துவிட்டு இணைந்த மாகாணங்களை ஒருமாகாணமாக கருதி வாக்கெடுப்பு நடத்தக் கோரும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதற்கு பல சட்டரீதியான மற்றும் அரசியல்ரீதியான காரணங்களைக் கூறலாம். ஆனாலும் இந்நாட்டில் எதுவும் நடக்கலாம் என்ற அடிப்படையில் கவனமாகவும் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிக்குமேலாக, நாம் கவனமாக இருக்க வேண்டியது , இணைத்ததன்பின் சர்வஜனவாக்கெடுப்பா? சர்வஜனவாக்கெடுப்பின் இணைப்பா? என்பதில்? முதலாவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது
அதேநேரம் முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டிய நிலைப்பாடு இரண்டாவதான ' அரசியலமைப்பு இணைப்பிற்கு இடம்கொடுக்கவே கூடாது, என்பதாகும். அதுதான் நமக்கு பாதுகாப்பானதாகும்.
கவனமாக இருங்கள். இந்த இடைக்கால அறிக்கையில் வெளிப்படையாக இருப்பது சொற்பம்; அதற்குப்பின்னால் மறைந்துகிடப்பது அதிகம்; என்றே தோன்றுகிறது .
வை எல் எஸ் ஹமீட்-