தூய தலைவர் அஷ்ரப்பின் கொள்கை, பாதை, கட்டளை ஆகியவற்றை தீய முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி வீசியது! - ஹசன் அலி

ரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆதரித்து கிழக்கு மாகாண சபையில் வாக்களித்ததன் மூலம் பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் கொள்கைக்கு விரோதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருவது அப்பட்டமாக மீண்டும் வெளிப்பட்டு நிற்கின்றது என்று இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

இக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் 17 ஆவது வருட நினைவு ஒன்றுகூடல் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் ஏற்பாட்டில் இவரின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் பங்கேற்றதுடன் பேராளர்களாக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், தொழிலதிபர் நஸார் ஹாஜியார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்தவர் தலைவர் அஷ்ரப். எமதும், எமது வருங்கால சந்ததியினரதும் தனித்துவம், இருப்பு, அடையாளம், பாதுகாப்பு, உரிமை, சுயநிர்ணயம், அதிகாரம், அரசியல் தீர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் ஆவார்.

இவரின் 17 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு மாத்திரம் இங்கு இன்று இடம்பெறவில்லை. இவரின் கொள்கை, இவர் வகுத்த பாதை, இவர் அமைத்து கொடுத்த யாப்பு, எமது சமூகம் முன்னெடுக்க வேண்டும் என்று இவர் பிறப்பித்த கட்டளைகள் ஆகியன தூக்கி வீசப்பட்டு விட்டதையும் இந்த 17 ஆவது வருடத்தில் நினைவு கூருகின்றோம்.

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் வாக்களித்ததன் மூலம் பெருந்தலைவர் அஷ்ரப்பின் கொள்கைக்கு விரோதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு உள்ளது. ஏனென்றால் மாகாண சபை அதிகாரத்தை பெற்று கொடுக்க அஷ்ரப் தலைமையில் இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நெடும்பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதே போல சிறுபான்மை மக்களின் அபிலாஷைக்கு எதிரான திவிநெகும சட்டமூலம் வாக்கெடுப்புக்கு இதே மாகாண சபைக்கு முன்பு வந்தபோதும் கட்சி உயர்பீடத்தின் விருப்பத்துக்கு மாறாக இச்சட்டமூலத்தை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்து இருந்தனர் என்பதையும் இவ்விடத்தில் நினைத்து பார்க்கின்றேன். திவிநெகும சட்டமூலம் பிழையானது என்று அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்ப்பு வழங்கினார். இதற்காக இவரை பதவியில் இருந்து தூக்கி எறிய பாராளுமன்றத்தில் தெரிவு குழு நியமிக்கப்பட்டு இவரை பதவி நீக்குகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்விடயம் பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்கு வந்தபோது ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று நான் ரவூப் ஹக்கீமை கேட்டு கொண்டபோது முதல் நாள் ஓம் ஓம் என்று கூறிய அவர் மறுநாள் வாக்களித்து விட்டார். நான் கேட்டதற்கு தினேஸ் குணவர்த்தன அழைத்து வந்து விட்டார் என்று காரணம் சொன்னார். ஆனால் சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தலைவர் அஷ்ரப்பால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்து கொண்டே ஹக்கீம் இம்மாபெரும் வரலாற்று தவறை செய்து விட்டார்.

சிறுபான்மை சமூகங்கள் அவற்றின் உரிமைகளை இந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன. குறிப்பாக எமது அம்பாறை மாவட்டத்தில் பெருந்தேசியவாதிகளின் ஊடுருவில் மிக கச்சிதமாக இடம்பெற்று வருகின்றது. ஆனால் நில தொடர்பற்ற மாகாணம், கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு என்று தலைவர் அஷ்ரப்பால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு தீர்வு திட்ட யோசனையை நோக்கியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 17 வருடங்களாக பயணிக்கவே இல்லை. தலைவர் அஷ்ரப்பின் தீர்வு திட்ட யோசனைகளில் உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும் கரையோர மாவட்ட கோரிக்கை உள்ளது. ஆனால் இவற்றை நோக்கி பயணிப்பதை விடுத்து அபிவிருத்தி விழா கொண்டாடுகின்றனர். வட மாகாணத்தில் அபரமிதமான அளவில் அபிவிருத்திகள் நடந்துதான் உள்ளன. ஆனால் அவை அமைதியாக நடந்தேறின. அமைச்சர்கள், எம். பிகள் போன்றோர் அபிவிருத்தி வேலைகளை கண்காணிக்க வேண்டுமே ஒழிய அதில் அவர்கள் குளிர் காய்கின்ற கலாசாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும். நாம் ரோஹிங்யா முஸ்லிம்களை போல நாடற்றவர்களாக மாற்றப்பட கூடிய அபாயம் கண் முன் தெரிகின்றது. கிழக்கில் எமக்கு அரசியல் ஸ்திரத்தன்மை, அரசமைப்பு மூலமான பாதுகாப்பு போன்றன இல்லாதபோது அபிவிருத்திகளால் எந்தவொரு பயனுமே இல்லை. தலைவர் அஷ்ரப் கிழக்கு முஸ்லிம்களின் கலாசாரத்தை வளர்ப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழகத்தை கட்டி அமைத்து கொடுத்தார். ஆனால் இன்று இப்பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களில் 60 சதவீதமானோர் சிங்கள மாணவர்கள் ஆவர். எமது மாவட்டத்தில் சிங்கள இனத்தவர்களின் சனத்தொகை பல்கி பெருகி அதிகரித்து காணப்படுகிறது. ஆகவேதான் நாம் தனியான மாவட்டத்தை கேட்கின்றோம். கரையோர மாவட்ட கோரிக்கையில் நான் உறுதியாக நின்று பற்றுறுதியுடன் செயற்பட்டு வருவதாலேயே ஹக்கீம் என்னை வெளியில் போட்டார். நான் கட்சியை விட்டு வெளியே வந்தேன்.

பெருந்தேசிய கட்சிகளை திருப்திப்படுத்துகின்ற, இவர்களின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றுகின்ற கொத்தடிமை அரசியல்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இடம்பெற்று வருகின்றது. நான் அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை வகித்து தலைவரின் கொத்தடிமை அரசியல் சேவகத்துக்கு மூக்கணான் கயிறு போட்டு, அவரை தடுத்து நிறுத்தி வந்திருக்கின்றேன். இதனால்தான் அவர் எனக்கு மிக மோசமான நம்பிக்கை மோசடிகளை செய்ததும் மாத்திரம் அல்லாமல் என்னை மிக கேவலமாக மலினப்படுத்தவும் செய்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றில் உரையாற்றிய அவர் ஹசன் அலி தேசிய பட்டியலை கேட்டு இருந்தால் கொடுத்து இருந்திருப்பார் என்று தெரிவித்து, அதிகாரம் மிக்க செயலாளர் நாயகம் பதவியை கேட்டு கொண்டு இருந்ததாலேயே கொடுக்க முடியாமல் போய் விட்டது என்று வழக்கத்துக்கு மாறாக உண்மையை சொல்லி உள்ளார்.

தலைவர் அஷ்ரப்பை அமிர்தலிங்கம் அழைத்து பேசிய அந்த நாளை நினைத்து பார்க்கின்றேன், நானும் உடன் சென்று இருந்தேன். இரு சமூகங்களும் ஒன்றாக சேர்ந்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும் என்று சொல்லி தமிழர் விடுதலை கூட்டணியுடன் ஒன்றாக முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும் என்று அமிர்தலிங்கம் வற்புறுத்தினார். ஆனால் தமிழரின் போராட்டத்தை முஸ்லிம்கள் மதிக்கின்றனர், இருப்பினும் முஸ்லிம்கள் தனி சமூகம், அவர்களுக்கு என்று ஒரு தனித்துவ அடையாளம் உள்ளது, அதை இழக்க முடியாது என்று சொல்லி தலைவர் அஷ்ரப் வாதாடினார். இவ்வாதப் பிரதிவாதம் வெகுவாகவே நீண்டது. தமிழ் தேசியம், சிங்கள தேசியம் ஆகியவற்றை போலவே முஸ்லிம் தேசியமும் உருவாக வேண்டும் என்கிற தலைவரின் கனவு அன்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சியாக பரிணமித்தது. அது வரைக்கும் ஒரு இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தலைவர் அஷ்ரப்புடன் சேர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி வளர்த்து எடுத்ததாலேயே எனக்கு சமூக உணர்வு மிக அதிகமாக உள்ளது. இதனால்தான் இப்போது மட்டும் அல்ல நான் மரணிக்கின்ற வரையிலும் கரையோர மாவட்ட கோரிக்கையை தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பேன்.

நாட்டின் 04 முஸ்லிம் தேர்தல் தொகுதிகளும் கிழக்கில்தான் உள்ளன. இந்நாட்டில் அம்பாறை மாவட்டத்தில்தான் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். இதனால்தான் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கென அதிகார அலகு ஒன்றை பெற தலைவர் அஷ்ரப் பகீரத முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இவை எல்லாம் ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள மற்றும் முஸ்லிம் வாக்குகளில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகின்ற ரவூப் ஹக்கீமுக்கு விளங்காது. அம்பாறை மாவட்டத்துக்கு கடந்த 17 வருடங்களாக அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதை இனியும் கொடுக்கின்ற நினைப்பு ரவூப் ஹக்கீமுக்கு கிடையவே கிடையாது. அதிகாரம் உள்ள செயலாளர் நாயகம் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படுவதன் மூலமாக அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்க வழி உண்டு என்று நான் கடந்த பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டத்தில் நிறைவாக சொன்னபோது அவ்வாறு நடந்தால் கட்சிக்குள் இரு அதிகார மையங்கள் உருவாகி விடும் என்று சொல்லி கோபத்தில் துள்ளி எழுந்தார். எனவே அவர் தலைவராகின்ற இருக்கின்ற வரை அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்க போவதே இல்லை. மொத்தத்தில் இன்று இருப்பது தலைவர் அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் அல்ல. எனவே தலைவர் அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸை மீட்டு வாழ வைக்க வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல் கேட்க போகின்றோம். எனவே எமது இந்த சமூக விடுதலை போராட்டத்துக்கு ஒட்டுமொத்த பேராதரவை தாருங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -