அ.அஹமட்-
இலங்கை இனவாதிகள் இவ்விடயத்தை பயன்படுத்தி இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் மியன்மார் அரசின் மீதான கண்டிப்பு அவைகளை குறைக்கவல்லது.
மாகாண சபை தேர்தல் முறை மாற்றம் உட்பட பல விடயங்களில் இலங்கை முஸ்லிம்கள் இவ்வரசின் மீது அதிக வெறுப்புற்றிருப்பதால் இப்படி ஏதேனும் கதைத்து முஸ்லிம்களின் நண்பனாய் இவ்வரசு நாடகமாட முயல்கிறார்களா என்ற சந்தேகமுமில்லாமலில்லை.
பிரச்சினை பூதாகரமாக சென்று கொண்டிருக்கும் போதெல்லாம் வாய் மூடி இருந்த இவ்வரசுக்கு திடீரென ஞானம் பிறந்ததன் மர்மமென்ன? முஸ்லிம் அரசியல் வாதிகள், தற்போது இவ்வாட்சி முஸ்லிம்களின் நண்பன் என கூற இவ்வரசு ஏதாவது செய்ய வேண்டும். அக் கோணத்தில் ஒன்றாகவும் இதனை நோக்கலாம்.
மியன்மார் அரசை பாராளுமன்றத்தில் வைத்து கண்டிப்பதால் அச் செய்தி மியன்மார் அரசை சென்றடையப்போவதில்லை. அது உத்தியோக பூர்வமாக மியன்மார் அரசுக்கு அறிக்கை வடிவில் அனுப்ப வேண்டும்.
வட கொரியாவை கண்டித்து அனுப்பு முடியும் என்றால், ஏன் மியன்மாரை கண்டித்து அனுப்ப முடியாது? அதனை இலங்கை அரசு செய்யுமா? மனிதாபிமான உதவிகளை இலங்கை அரசு முன்னெடுக்க தயாராக உள்ளதென்றால், அது எவ்வளவு, எப்போது முடிவெடுக்கப்பட்டது, எப்போது அனுப்பப்படும், என கூற முடியுமா? வாயாலே ,மனிதாபிமான உதவி செய்து முடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
தனது நாட்டில் இடம்பெற்ற அளுத்கமை கலவரத்துக்கே இன்னும் நிவாரணம் பெற்றுக் கொடுக்காத அரசு, மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலா கரிசனை கொள்ளப் போகிறது? இதுவெல்லாம் இலங்கை முஸ்லிம்களின் வாக்குக்களை பெற அரங்கேற்றப்பட்ட வார்த்தை ஜாலங்களாகும்.