ஊழல்களுக்கு துணை போகாமை சில அரசியல்வாதிகளுக்கு அநாகரிகமாக தெரிகின்றது –கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு,

சிலரின் ஊழல் செயற்பாடுகளை மக்கள் முன் கொண்டுவருவதனாலும் அவற்றுக்கு துணை போகாமையினாலும் எம்மிடம் அரசியல் நாகரிகம் இல்லையென சில அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

ஊழல் செய்யாது மக்கள் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடாமல் நாம் முன்னெடுக்கும் அரசியல் கலாசாரம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்களுக்கு புதிததாக தெரிவதாலேயே அவர்கள் இன்று குழம்பிப் போயுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடி தெற்கு எல்லை வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,

எமக்கு மற்றவர்களுடைய வேலைத்திட்டங்களுக்கு பெயர் வைத்துக் கொள்ள வேண்டிய எந்தத் தேவையுமில்லை,நாம் அரைகுறையாக விடப்பட்டிருந்த மக்களின் சொத்துக்களை பூரணப்படுத்தி மக்களிடம் கையளிக்கின்றோம்.

ஒருவர் தமது சேவையென அடையாளங்காட்ட வேண்டுமானால் தாம் அதற்கான நிதியை அமைச்சுக்களுக்கூடாக பெற்று மக்களின் அபிவிருத்திகளை முன்னெடுத்தால் அதனைப் பெற்றுக் கொடுக்க பட்ட துன்பத்துக்காக தாம் கொண்டு வந்த அபிவிருத்தி எனச் சொல்வதில் நியாயம் இருந்த போதிலும் பொதுவாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வருகின்றன நிதியில் நிர்மாணிக்கப்படுகின்றவற்றுக்கு தமது பெயரை இட நினைப்பது மிகவும் கீழ்த்தரமான அரசியலாகும் .

அரசியல் எனது தொழில் அல்ல என்பதை நான் மிகத் தௌிவாக கூறியுள்ளேன்,ஆனால் சிலர் தாம் அரசியலை தொழிலாக செய்வதாக ஏற்றுக் கொள்கின்றனர்,அவ்வாறானால் தொழில் என்பது பண ரீதியான இலாபத்தை எதிர்பார்த்து தமது தனது சொந்த முன்னேற்றத்திற்காக செய்யப்படுவதாகும்,

ஆகவே அவர்களே தாம் வருமானம் பெற்று சொந்த இலாபத்தை எதிர்பார்த்து அரசியல் செய்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

ஆனால் நாம் இதனை சமூகத்துக்கான கடமையாக எண்ணியே முன்னெடுக்கின்றோம்.அதனால் தான் இலாபத்தை எதிர்பார்த்து அரசியல் செய்பவர்களுக்கு எமது பணி விசித்திரமாக உள்ளது,

ஆகவே இறைவனை பயந்து அரசியல் செய்யுங்கள் பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்றி செய்ய முனைந்து நீங்களே ஏமாறாதீர்கள்,

இறுதியில் இதனால் ஏமாற்றப்படப் போவது நீங்கள் தான்,எமக்கு எந்த அதிகார மோகமுமில்லை,யாரும் இங்கு நிரந்தரமாக பதவியில் இருப்பதற்காய் பிறந்திடவில்லை,

ஆனால் நாம் செய்கின்ற கடமையை யாரையும் ஏமாற்றாமல் உளத்தூயமையுடன் செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -