அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு தொடர்பில் தெளிவு படுத்தும் செயலமர்வு எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார. ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காக பொதுமக்களை விழிப்பூட்டல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான தகவல்களை கிராம மட்டம் வரையில் பிரச்சாரம் செய்தலானது அனர்த்த அபாயத்தை குறைப்பதற்கும் அனர்த்தத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் விளைவுகளை குறைப்பது அத்தியாவசிய தேவையாக காணப்படுகின்றது.
மாவட்ட மட்டத்தில் மக்களை விழிப்புணர்வு செய்தல் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டமாகும்.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாகவும் சரியான தகவல்களை கிராம மட்டம் வரை கொண்டு செல்வதில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு தொடர்பில் தெளிவு படுத்தலும் அச்செயற்பாட்டை வலுப்படுத்தலும் மிகவும் முக்கியமான காரணமாக இணங்கானப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கும் மக்களுக்கு சரியான தகவல்களை சேர்ந்தடைவதற்கான பொறிமுறையை வலுப்படுத்துவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு திருகோணமலை.உப்புவெளி ஜெய்கப் ஹோட்டலில் காலை 9.00மணிக்கு இடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அமைச்சின் செயலாளர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார குறிப்பிட்டார்.