++++++++++++++++++++++++++
அகதியாய்
அலைவதிலும்
சகதியில்
சாவது மேல் என
கண்ணை மூடிக் கொண்டாயா
கண் மணியே
ஆங்சாங் சூகி சொன்ன
ஆயுதந் தாங்கிய
அதி தீவிரவாதி மகனே
அந்த
அரக்கியிடம்-உன்
அப்பாவி முகம் காட்டு.
பச்சைப் புள்ளைங்க
பயங்கரவாதியாண்ணு -அந்தப்
பைத்தியம் பார்க்கட்டும்.
சோற்றைக் கூட
சொட்டுப் போல் நசித்து
ஊட்டுவார்களடா
உன்
சின்ன வாய்க்கு
சீவன் இல்லை என்று,
சேற்றில் போட்டு
சின்னப் பிஞ்சை
சிதைத்த கயவர்கள்
சின்னாபின்னமாகிப் போகட்டும்
பூக்கும் முன்னே
மொட்டைக் கருக்கிய
மொட்டைகள்
ஒரு நாள்
உணர்ந்து கொள்ளும்.
இந்த இறப்புக்களின் விலை
என்ன என்பதை
ஏந்திய கைகளுக்கு
என்றோ ஒரு நாள்
இறங்கும் தீர்ப்பு.
அந்தத் தீர்ப்பில்
இந்த
அரக்கர்கள்
அரைக்கப் படுவார்கள்
இந்தச்
சேறும் சின்ன மலர்களும்
சிலகாலத்துக்கே...
Mohamed Nizous