மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே முறையில் நடத்துவதற்கு ஏற்ற வகையில் 20ஆவது திருத்தத்திற்கு பதி லாக புதியதொரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தில் தீர்மானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பாராளுமன்றத்தில் சபநாயகர் இன்று அறிவிக்கவுள்ளார். ஆனாலும் 20ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகின்றது.
இதனையடுத்தே 20ஆவது திருத்தத்தை கைவிட்டு அதற்கு பதிலாக புதியதொரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நாளை 20ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது 20ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பை உயர் நீதிமன்றம் கோரியுள்ளமையினால் அதற்கு பதிலாக புதியதொரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இம்மாதம் இறுதியில் முடிவடைகின்றது. எனவே இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமானால் அரசியமைப்பில் திருத்தத்தை கொண்டு வருவது அவசியமாகின்றது. 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயன்ற போதிலும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பான தீர்மானத்தை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த நிலையிலேயே புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே தடவையில் நடத்துவதற்கு தற்போது அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்படாவிடின் பதவிக் காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை டிசம்பர் மாதம் 09ஆம் திகதி நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே 20ஆவது திருத்தத்திற்கு பதிலாக புதிய சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கேட்டபோது,
மாகாண சபை தேர்தல்களை ஒரே முறையில் நடத்தும் வகையில் 20ஆவது திருத்தத்திற்கு பதிலாக புதிய சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வீ