வாமி நிறுவனத்தின் அனுசரணையுடன் 'நற்பிரஜைத்துவமும் சமாதான சகவாழ்வும்' எனும் தலைப்பிலான மூன்று நாள் கல்வி முகாம் கடந்த வாரம் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் இடம்பெற்றது.
இந்த கல்வி முகாமின் ஆரம்ப நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யாவின்பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி பிரதம அதிதியாகவும் வாமி நிறுவனத்தின் இலங்கைக் கிளைப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம். நஜ்மான் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷெய்க் எம்.மிஹ்ழார், கலாநிதி பி.எம்.எம்.இர்பான், ருகுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக லியனகே ஆகியோர் சமாதானம் மற்றும் சகவாழ்வு தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் இந்த முகாமில் விரிவுரை நிகழ்த்தினர்.
'நற்பிரஜைகளாக வாழ்வது மற்றும் சமாதான சகவாழ்வு என்பன தொடர்பான
விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தல்', 'நற்பிரஜைத்துவம் மற்றும் சமாதான சகவாழ்வு தொடர்பாகக் காணப்படுகின்ற தப்பபிப்பிராயங்களை சீர்செய்தல்', 'இலங்கையில் சமாதான சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிதல்', 'சமாதான சகவாழ்வுக்கான தடைகளை இனங்காணல்' மற்றும் 'இத்துறை தொடர்பாக மென்மேலும் ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்குத் தூண்டுதல் ஆகிய இலக்குகளைக் குறிக்கோள்களாகக் கொண்டு இந்த முகாம் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.