ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு இரண்டு வாரங்களில் அறிக்கையினை இணைத் தலைமைகளுக்கு வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை மாலை (25.09.2017) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மீன்சந்தை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையால் மண் அகழப்படும் வாகன கொள்வனவு தொடர்பாகவும், பொதுமக்களால் ஓட்டமாவடி பிரதேச சபையில் காணப்படும் ஊழல்கள் தொடர்பாகவும் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இவ்விடயம் தொடர்பில் ஓட்டமாவடி உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் உட்பட கணக்காளர் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இரண்டு வாரத்திற்குள் இணைத் தலைமைகளுக்கு இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய ஓட்டமாவடி கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கை நேரங்களில் ஸ்மார்ட் தொலைபேசி பாவனையை அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் விளையாட்டுக் கழகங்களில் பயன்பாட்டில் இல்லாத கழகத்தின் பதிவை இரத்து செய்யுமாறும், புதிய கழகங்களை அனுமதிக்க கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மஜ்மா நகர் சூடுபத்திசேனை பகுதியில் அரச காணியில் கட்டடம் கட்டியவருக்கு எதிராக பிரதேச செயலாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்காமல் நிருவாக செயற்பாடுகளின் தாமதம் இருப்பது இச்செயலகத்தால் மக்களுக்கு சேவை வழங்க முடியாமல் உள்ளதென கருத முடிகின்றது என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
ஓட்டாவடி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், சமுர்த்தி வங்கியில் அதிக பணம் காணப்படுவதால் மக்கள் சமுர்த்தி வங்கியில் கடன்களை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் தற்போது 236 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு காணப்படுவதாகவும், டெங்கு குடம்பிகள் பரவக் கூடிய சூழல் காணப்படுகின்ற நிலைமையில் கிணறுகளுக்கு வலை மூடி வைக்குமாறு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆனால் தற்போது பத்து வீதமான கிணறுகள் மாத்திரம் மூடப்பட்டு காணப்படுகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்ய பிரதேச அமைப்புக்கள் உதவி நல்குமாறு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் கேட்டுக் கொண்டார்.
பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாயல்கள், சமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழங்களை அழைத்து இந்நடவடிக்கையில் பங்குபற்றி டெங்கில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் போதை பாவனைகள் இடம்பெற்று வருவதாக சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் பிரதேச சபையினர் மைதானத்தில் விளையாடுபவர்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கினால் பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆகவே ஓட்டமாவடி பிரதேச சபை வீரர்களுக்கு விளையாடுவதற்கு குறித்த நேரத்தை வழங்கினால் அந்த நேரத்திற்கு மீறி விளையாடுபவர்களை எங்களால் துரத்த முடியும். ஆனால் விளையாடும் போது எங்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என வாழைச்சேனை பொலிஸ் நிலை சமூக சேவை பொறுப்பதிகாரி எஸ்.அஹமட் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பிரதேச திணைக்கள தலைவர்களும், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.