ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
மியன்மார் றோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு அந்நாட்டு அரசினால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக நேற்று நிந்தவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம் பெற்றது.
நிந்தவூர் உலமாக்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டப் பேரணி ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, நிந்தவூர் பெரிய ஜூம்ஆப் பள்ளியிலிருந்து ஆரம்பமாகி கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி வழியே நிந்தவூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.
இவ்வார்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக் கணக்கான பொது மக்களும், நூற்றுக்கு மேற்பட்ட உலமாக்களும் கலந்து கொண்டனர். ' மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தும், பர்மா அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கிய வண்ணம், கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிந்தவூர் பிரதேச செயலக முன்றலில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 'தமது ஆழ்ந்த அனுதாபங்களை மியன்மார் முஸ்லிம்களுக்குத் தெரிவிப்பதோடு, தமது பலமான எதிர்ப்பையும், கண்டனத்தையும் மியன்மார் அரசுக்குத் தெரிவிக்கும்' மஹஜர் ஒன்றையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலிடம் கையளித்து விட்டுக் கலைந்து சென்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.