ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி நடமாடும் சேவை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (03.09.2017) ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் தலைமையில் இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் இதனை ஒழுங்கு செய்திருந்தார். இதன்போது இறப்பு, பிறப்பு, விவாகச்சான்றிதழ்கள் விடயம், அரச காணி, கமநல சேவை, சட்ட உதவி ஆணைக்குழு, அடிப்படை மனித உரிமைகள், ஓய்வூதியம், நீர், மின்சாரம், உள்ளிட்ட 25 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில் 17 அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றின.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.எம்.ஈ. விக்கிரமசிங்ஹ, உதவிச் செயலாளர் சந்திரிகா ரூபசிங்ஹ, கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரெத்தின தேரர், உதவிப் பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் உட்பட பயனாளிகளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.