எம்.வை.அமீர்,யூ.கே.காலிதீன்-
செஸ்டோ எனப்படும் சஹிரியன்ஸ், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2017-10-01 முதல் ஆரம்பமாகவுள்ள தேசிய மரநடுகை வாரத்தை முன்னிட்டும் அவ்அமைப்பு ஏற்பாடு செய்திருந்த “இன்றைய மற்றும் நாளைய சமூகத்துக்காய், சுத்தம் பேணி மரங்களை நடும்” திட்டத்துக்கு ஒப்பான நிகழ்வு, 2017-09-30 ஆம் திகதி செஸ்டோ அமைப்பின் தலைவர் கல்முனைப்பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் சாய்ந்தமருது கடற்கரை வீதி, தோணாவின் அருகில் இடம்பெற்றது.
சஹிரியன்ஸ் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் எம்.சி. எம்.சி. றிழா மற்றும் பொருளாளர் ஏ.எச்.எம்.நழிம் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவும் கௌரவ அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீமும் கலந்து கொண்டிருந்தனர்.
சாய்ந்தமருதுக்கும் மருத மரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளதால் மரநடுகையின்போது மருத மரங்கள் நடப்பட்டதுடன் இங்கு இது தொடர்பில் ஞாபக பலகை ஒன்றும் திரைநீக்கள் செய்து வைக்கப்பட்டது.
ஓய்வை நாடுபவர்களுக்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்துக்காக, குறித்த பிரதேசம் சுத்தப்படுத்தப்பட்டு, இருக்கைகள் இடப்பட்டு மரங்களும் நடப்பட்ட அதேவேளை, எதிர்காலத்தில் இன்னும் பல செயற்திட்டன்களின் ஊடாக குறித்த இடம் மெருகூட்டப்படவுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இரவு நேரங்களில் இருள் நிறைந்து, துஷ்பிரயோகங்களுக்கு பொருத்தமான இடமாக காணப்பட்ட இப்பிரதேசத்துக்கு,மின் கம்பங்கள் இடப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டிருப்பதால் துஷ்பிரயோகங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, இரவு நேரங்களிலும் குறித்த பிரதேசம் பொழுதைக் கழிக்கக்கூடிய இடமாக மாறும் என்றும் எதிர்காலத்தில் செஸ்டோவினூடாக இன்னும்பல செயற்திட்டங்களை இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் எதிர்காலத்தில் குறித்த பிரதேசம் மேலும் அழகுபடுத்தப்படுவதுடன் செஸ்டோ பூங்காவாக மாறும் என்றும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்தகாலங்களில் செஸ்டோ அமைப்பு ஜனாஸாக்களை ஏற்றும் அம்புலன்ஸ் வாகனம் வழங்கியமை பாடசாலையில் மாணவர்கள் முறையாக நீர் அருந்தும் வசதி செய்து கொடுத்தமை மையவாடி ஒன்றுக்கு சில வசதிகளை செய்து கொடுத்தமை மற்றும் இரத்ததானம் போன்ற பல்வேறு சமூக நல திட்டங்களை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.