காத்தான்குடி சம்மேளனத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இலஞ்சக் குற்றச்சாட்டினை விசாரிக்க கோரல் எனும் தலைப்பிட்டு 17.09.2017ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கையொப்பமிட்டு 23.09.2017ஆந்திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...
தலைவர் / செயலாளர்,
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
23.09.201
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு
இலஞ்சக் குற்றச்சாட்டினை விசாரிக்க கோரல் தொடர்பாக.
மேற்படி விடயம் சம்பந்தமாக 17.09.2017 திகதி இடப்பட்ட தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றது.
கடந்த 18.08.2017ம் திகதி கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லா அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின்போது நான் இலஞ்சம் பெற்றதாக மிகப்பெரும் பொய்யான அபாண்டத்தினை என்மீது சுமத்தியிருந்தார், அதன் பிரகாரம் முதன் முதலாக நான் தங்களுக்கு இக்குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு கடந்த 24.08.2017 அன்று கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தேன், எனவே கௌரவ இராஜாங்க அமைச்சர் என்மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டினை தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அத்துடன் கௌரவ இராஜாங்க அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள முரண்பாடான மேலதிக குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான ஆதாரங்களுடன் அதனை நிரூபிக்க தயாராகவுள்ளேன்.
இருப்பினும் நான் உங்களிடம் கேட்டு கொண்டதற்கிணங்க என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருப்பதனால் கீழ்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
1. இரு தரப்பிலிருந்தும் தலா மூன்று நபர்கள் மட்டுமே விசாரணையில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
2. விசாரணை ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை முழுமையான ஒலி, ஒளிப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
3. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுக்கொண்டிருப்பதனால் இந்த விசாரணை முகநூலினூடாக நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
4. இவ்விசாரணையின் முடிவுகளை எழுத்து மூலம் எனக்கும், உங்கள் நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரதிகள் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடி பிராதன ஜூம்ஆ பள்ளிவாயல்கள், முக்கிய நிறுவனங்கள் என்பனவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.