வட- கிழக்கைப் பொறுத்தவரை அதிகாரப்பகிர்வில் இதுதான் பிரதான பேசுபொருள். தமிழ்த்தரப்பு இணைக்கவே வேண்டும்; என்கிறது. முஸ்லிம்தரப்பு பெரும்பான்மையாக, இணைக்கவே கூடாதென்கிறது. இன்னும் சிலர் இணைந்த வட-கிழக்கில் தனியலகு என்கின்றனர். இந்நிலையில் இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்வோம்.
தமிழ்த்தரப்பு ஏன் இணைப்பைக் கோருகிறது
------------------------------------------
இதற்குரிய விடை வெளிப்படையானதாக இருந்த போதிலும் இந்தக்கேள்வி ஆங்காங்கே எழுப்பப் படுகிறது. அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் திரு சுமந்திரனிடம் இக்கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இதன்பின்னர்தான் இக்கேள்வி கூடுதலாக எழுப்பப் படுகிறது. சுமந்திரனின் மழுப்பலுக்குக் காரணம், ' ஆடம்பர பங்களாவை எதற்காக கேட்கின்றீர்கள்' என்று கேட்டால் ' சொகுசாக வாழ்வதற்குத்தான்' என்று பதில் சொல்வது சற்று தர்மசங்கடமானதுதான்' என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இணைப்பைக் கோருவதற்கான காரணம்
-------------------------------------------
இந்நாட்டில் அதிகாரம் பகிரப்படுவது யாருக்கு? தனி நபர்களுக்கோ, குழுக்களுக்கோ அல்லது சமூகங்களுக்கோ அல்ல. மாறாக பிராந்தியங்களுக்கு. இலங்கையில் ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரம் பகிரப்படுகிறது. இந்த அதிகாரத்தைக்கொண்டு அந்தப்பிராந்தியங்களை ஆட்சி செய்யப்போவது யார்? நிச்சயமாக அந்தந்ந பிராந்தியங்களில் பெரும்பான்மையாக வாழுகின்ற சமூகங்கள் அவற்றை ஆளப்போகின்றன. இலங்கையில் ஏழு மாகாணங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள். ஒரு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். இவர்கள்தான் அந்த மாகாணங்களின் ஆட்சியாளர்கள். மற்றைய சமூகங்கள் ஆளப்படுபவர்கள். முஸ்லிம்களும் ஆளப்படும் சமூகம்.
ஒன்பதாவது மாகாணமான கிழக்கில் ஆளும் சமூகம் இல்லை. ஆகக்குறைந்தது இரண்டு சமூகங்கள் சேர்ந்த்தால் மாத்திரமே ஆளலாம். எனவே கிழக்கிலும் தமிழர் ஆளும் சமூகமாக மாறவேண்டுமாயின் வட- கிழக்கை இணைக்க வேண்டும். எனவே, முஸ்லிம்கள் கிழக்கிலும் நிரந்தரமாக ஆளப்படும் சமூகமாக மாற்றப்படுவார்கள். முஸ்லிம்கள் எட்டு மாகாணங்களில் ஆளப்படும் சமூகமாக இருந்தால் போதாது. ஒன்பதாவது மாகாணத்திலும் ஆளப்படும் சமூகமாக இருங்கள். ஏழு சிங்களவருக்கு, இரண்டு தமிழருக்கு. இதுதான் வடகிழக்கு இணைப்பின் முதலாவது தாரக மந்திரம்.
இந்த வட- கிழக்கு இணைப்பைத்தான் நாம் அலட்டிக்கொள்ளத்தேவை இல்லையாம். தமிழரின் அபிலாஷைகளுக்கு நாம் குறுக்கே நிற்கக் கூடாதாம். ஒரு சமூகத்திற்கு ஒன்பது மாகாணங்களில் அடிமைகள் எனும் முத்திரையாம். இரண்டு சமூகங்களுக்கு ஆட்சியாளர்கள் என்ற முத்திரையாம்.
இந்நாட்டில் ஒரு அரசாங்கத்தின் கீழேயே வாழமுடியாது என்பது, தமிழ்த்தரப்பின் நிலைப்பாடாம். ஆனால் முஸ்லிம்களை ஒரு அரசாங்கம் ஆட்சி செய்தால் போதாதாம். ஒன்பது அரசாங்கங்கள் ஆளவேண்டுமாம். அதற்கு நமது தலைவர்களும் ஆதரவாம்.
தமிழ்த்தரப்பின் இணைப்புக் கோரிக்கை நியாயமா?
------------------------------------------------
கிழக்கில் தமிழர் 1/3 பங்கினர் தமிழர்கள். 2/3 பங்கினர் தமிழரல்லாதவர். 1/3 பங்கினருக்காக 2/3 பங்கினரை இணைப்பின்மூலம் சிறுபான்மையாகச் சொல்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். இந்த நியாயத்தை ஏன் நமது தலைவர்கள் என்பவர்களால் உரத்துச் சொல்லமுடியாமல் இருக்கின்றது.
நிதி அதிகாரமும் ( Financial Autonomy)சுரண்டல் நோக்கமும்
-------------------------------------
அரச நிதி என்பது ஒரு ரூபாயானாலும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். நிதி அதிகாரமென்பது பாராளுமன்றத்தின் இயற்கையான அதிகாரமாகும்.
பிரித்தானிய பாராளுமன்ற தோற்றுவாய் சட்டமாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக கி பி 410 அளவில் ரோமானியப் பேரரசு இங்கிலாந்தைவிட்டு வெளியேறியதன்பின் Anglo- Saxon அரசர்களால் Witenagamot என்று அழைக்கப்பட்ட பாராளுமன்றின் முதல் அடித்தளமாக கருதப்படுகின்ற சபை ஒவ்வொரு பிராந்தியங்களிலுமுள்ள சமூகத்தலைவர்களை உள்ளடக்கி இருந்தது. இதன் பிரதான நோக்கம் வரி அறவிடுவதில் பிராந்தியத் தலைவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வது. அப்பொழுதான் பிராந்தியங்களில் புதிய வரிகளுக்கு மக்களின் எதிர்ப்பு இருக்காது. அதனைத் தொடர்ந்து 1066 ம் ஆண்டில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட வில்லியம் ( வில்லியம் நோமாண்டி) Curia Regis ( The Great Council) என்றழைக்கப்பட்ட பாராளுமன்றின் வளர்ச்சிப்படியான அடுத்த கட்டமைப்பை நிறுவினார். அதனுடைய நோக்கமும் நிதி சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.
1215ம் ஆண்டைய Magna Carta விற்குப் பிறகுதான் சட்டவாக்க அதிகாரம் என்ற ஒன்றின் வரலாறே தோன்றியது. இவை தொடர்பான விரிவான விளக்கங்கள் " அரசியலமைப்புச் சட்ட மாற்றம்- பாகம் 11 மற்றும் 12 களில் விரிவாக இருக்கின்றது. தேவையானவர்கள் அதனை மீண்டும் வாசிக்கலாம். இந்த பாராளுமன்றத்தின் இயற்கையான அதிகாரத்தைத்தான் தமிழ்த்தரப்பு மாகாணசபைகளுக்கு கேட்கின்றது. இதனால் ஏற்படப்போகின்ற தாக்கம் என்ன?
இது தொடர்பாக பார்பதற்குமுன், இதோடு தொடர்புபட்ட இன்னுமொரு விடயத்தைப் பார்ப்போம். அதாவது அதிகாரப்பகிர்வு தொடர்பாக தமிழ்த்தரப்பு முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளை ஐந்து பிரிவாக பிரிக்கலாம்.
1) அதிகபட்ச அதிகாரம், ( விடயதானங்களில்) Extensive power in respect of subjects.
2) சமஷ்டி அதாவது வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு மீயுயர்தன்மை. Supremacy in respect of the powers so devolved.
3) நிதி சுதந்திரம் -Financial Autonomy
4) வட- கிழக்கு இணைப்பு
5) சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்
அதிகபட்ச அதிகாரம் ( விடயதானங்களில்)
----------------------------------------
கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ம் திகதி அரசியல் கட்சிகளுக்கு மாத்திரம் ஓர் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்ட நிறைய விடயங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை. ஆனால் அரசின் உண்மையான மனோநிலை அந்த அறிக்கையில்தான் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையை நமது கட்சிகள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் J H U அதில் உள்ள சிலவிடயங்களைப் போட்டுடைத்திருக்கின்றார்கள் அவர்கள் வழிகாட்டல்குழுவிற்கு வழங்கிய அறிக்கையில்.
அதில் ஒரு விடயம் மத்திய அரசின் அதிகாரம் சம்பந்தமானது. அதன்படி மத்திய அரசுக்கு, வெளிவிவகாரம், குடிவரவு- குடியகல்வு, பாதுகாப்பு ( சட்டம்- ஒழுங்கு வேறு, பாதுகாப்பு வேறு என்பதைப் புரிந்துகொள்க) மற்றும் பொருளாதார சீர்மை ( economic uniformity) போன்ற ஒரு சில விடயங்களைத்தவிர, மற்ற சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கே வழங்கப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது; என்று தெரிவித்திருக்கின்றார்கள். நமது கட்சிகள் இது தொடர்பாக மூச்சு விடவில்லை.
எனவே, எதிர்காலத்தில் அன்றாட வாழ்வில் அரசிடம் மக்கள் எதை எதையெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அவை அனைத்தையும் மாகாணசபையிடம்தான் எதிர்பார்க்க வேண்டும். இந்நிலையில் இவற்றை செயற்படுத்த நிதி வேண்டும். அது சுகாதாரமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம், வேலைவாய்ப்பாக இருக்கலாம், அனைத்தையும் மாகாணசபைகளே செய்ய வேண்டும்.( இதனால் அதிகாரமில்லாத ஆளப்படுகின்ற சமூகமான முஸ்லிம்கள் படப்போகின்ற அவஸ்தை வேறாக ஆராயப்பட வேண்டும்.) மத்திய அரசிடம் இருந்து பாரிய அளவில் நிதியை எதிர்பார்க்க முடியாது.
நிதி சுதந்திரம் வழங்கப்பட்டால் இவற்றிற்குரிய பெரும்பாலான நிதியை மாகாணசபைகளே தேடிக்கொள்ளவேண்டும். இந்நாட்டில் மிகவும் வளம்குறைந்த மாகாணங்களில் ஒன்று வடமாகாணம். வடக்குடன் ஒப்பிடுகையில் கிழக்கு வளம் கூடிய மாகாணம். எனவே, வடக்கையும் நிர்வகிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் கிழக்கைச் சுரண்டவேண்டிய தேவை இணைப்பைக் கோருவதற்கான மற்றுமொரு காரணமாகும். ( இதனால் கிழக்குத் தமிழர்களும் பாதிக்கப்படத்தான் போகிறார்கள். அவர்கள் இன்று புரியாவிட்டாலும் என்றோ ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.)
சுயநிர்ணய உரிமையும் நாடுபிரிதலும்
-----------------------------------
சுயநிர்ணய உரிமை தொடர்பாக விரிவாக இன்ஷாஅல்லாஹ் எழுவதாக கூறியிருக்கின்றேன். எனவே, தற்போது சுருக்கமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாடு பிரகடனப்படுத்தப்படும் சூழ்நிலை என்றாவது ஒருநாள் ஏற்பட்டால் அப்போதும் இணைந்த வட- கிழக்குத் தேவை. இவ்வாறு பல காரணங்களுக்காக இணைப்புத் தேவைப்படுகின்றது.
( தொடரும்)