தமது முதல் மாமா பலமுறை தம்மை வல்லுறவு செய்ததாக அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவரது மரபணு மாதிரி குழந்தையின் மரபணு மாதிரியோடு ஒத்துப் போகாததை அடுத்து அவர் கர்ப்பத்துக்குக் காரணமில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அப்பெண்ணை வல்லுறவு செய்த இரண்டாவது நபர் யார் என்று போலீஸ் தேடத்தொடங்கியது. கைது செய்யப்பட்ட முதல் நபரின் தம்பியை சந்தேகித்த போலீஸ், அவரது மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது.
இதுபற்றி பிபிசி பஞ்சாபி சேவையின் அரவிந்த் சாப்ராவுடன் பேசிய சண்டிகர் நகரின் முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் நீலாம்பரி விஜய், இரண்டாவது மாமாவின் மரபணு மாதிரிகள் குழந்தையின் மரபணு மாதிரியோடு ஒத்துப் போவதாகத் தெரிவித்தார்.
விரைவில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
எனினும் முதலில் கைது செய்யப்பட்ட முதல் மாமாவும் தம்மைப் பலமுறை வல்லுறவுக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ள நிலையில், அவரும் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
நெஞ்சை உலுக்கும் இந்தப் பத்து வயது சிறுமியின் கதை, இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் தலைப்புச் செய்தியானது.
கடந்த ஜூலை மாதம் அப்பெண் தமக்கு வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் கருவுற்றிருப்பது அப்போதுதான் தெரிந்தது. அந்நிலையில் அவரது கருவைக் கலைப்பது அவரது உயிருக்கே ஆபத்தாகலாம் என்று டாக்டர்கள் கூறிய பிறகு, அவருக்கு கருக்கலைப்பு செய்ய சண்டிகரில் உள்ள ஒரு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
அவர் கர்ப்பம் முதிர்ச்சி அடைந்துள்ளதால் அதைக் கலைக்க முடியாது என்று அந்நீதிமன்றம் கூறியது. பிறகு இதே காரணத்தைக் கூறி கருக் கலைப்புக்கு அனுமதி மறுத்தது உச்சநீதிமன்றம்.
அந்தப் பெண்ணுக்கு அவர் கருவுற்றிருப்பதே தெரிவிக்கப்படவில்லை. வயிற்றில் கல் இருப்பதால் அவரது வயிறு பெருத்திருப்பதாக அவருக்கு கூறப்பட்டது.
குழந்தை நல அமைப்பு ஒன்றிடம் அவருக்கு பிறந்த சிசு தத்து கொடுக்கப்பட்டது.
முதல் குற்றவாளி தம்மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்றது போலீஸ்.
எனினும் மரபணு பரிசோதனை முடிவுகளில் அவரது மரபணு குழந்தையின் மரபணுவோடு ஒத்துப்போகவில்லை என்பதால் கர்ப்பத்துக்கு யார் உண்மையான காரணம் என்று தேடத் தொடங்கியது போலீஸ். உறுதி செய்துகொள்வதற்காக, இரண்டாவது முறையாக மரபணுப் பரிசோதனையும் செய்யப்பட்டது.
கர்ப்பத்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் சான்று அளித்தால் தவிர, 20 வாரங்களுக்கு மேல் ஆன கருவைக் கலைப்பதற்கு இந்தியச் சட்டம் அனுமதிப்பதில்லை.
வல்லுறவுக்கு இலக்கான பல சிறுமிகள் தங்கள் கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.
அவர்களில் பல பெண்களுக்கு தங்கள் நிலைமையே தெரியாமல் இருப்பதால், அவர்கள் கருவுற்றிருப்பது காலம் கடந்தே கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் இதுபோலவே, ஹரியாணாவில் தமது வளர்ப்புத் தந்தையால் வல்லுறவுக்கு ஆளான 10 வயதுப் பெண் ஒருவர் கருக் கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதித்தது. அவர் சுமார் 20 வாரக் கருவை சுமந்துகொண்டிருதார்.(நன்றி அனுப்புனர்)