பாகம்-14 இல் மூன்று வகையான அதிகாரப்பங்கீட்டு முறை உள்ளன என்றும் அவற்றிற்கிடையே உள்ள வெளிப்படையான வித்தியாசத்தையும் பார்த்தோம். அதேநேரம் சமஷ்டியின் அடிப்படைத் தன்மை பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தில் ஒரு நிரந்தர கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து பிராந்தியங்களின் சம்மதமில்லாமல் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட விடயங்களில் பாராளுமன்றத்தால் சட்டமாக்க முடியாமலிருப்பதாகும்; என்பதையும் பார்த்தோம்.
சமஷ்டி என்ற சொல்லைப் பாவியாமல் எவ்வாறு சமஷ்டி உருவாக்குவது?
----------------------------------------------
பல விதங்களில் இதனைச் சாதிக்கலாம். இலங்கையில் இதனைச் சாதிப்பதற்கான சாத்தியமான முறைகள்
-------------------------------------------------
முதலாவது, அரசு மத்திய மாநில கட்டமைப்புகளின் கூட்டு எனக்குறிப்பிடுவது. ( இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல்)
இரண்டாவதும் முக்கியமானதும்:
Sharing of sovereignty- இறைமையைப் பகிர்ந்துகொள்ளல்
-----------------------------------------
இறைமை தொடர்பாக இத்தொடரில் ஏற்கனவே ஒரு தனிப்பாகம் எழுதப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மீண்டுமொருமுறை அதனை வாசித்துக்கொள்ளலாம்.
சுருக்கமாக, இறைமை என்பது " absolute power " முழுமையான, யாராலும் கேள்விக்குட்படுத்தமுடியாத அதிகாரமாகும். இந்த இறைமை பிரித்தானியாவில் பாராளுமன்றத்திடம் இருக்கின்றது. இலங்கை அரசியல் யாப்பு சரத்து 3 இன்படி அது மக்களிடம் இருக்கின்றது. இந்த இறைமை அரச அதிகாரத்தையும் உள்ளடக்குகின்றது. அரசின் அதிகாரம் பிரதானமாக மூன்று வகையாக பிரிக்கப்படும். 1) சட்டவாக்க அதிகாரம் 2) நிறைவேற்று அதிகாரம் 3) நீதித்துறை அதிகாரம்.
இதில் சட்டவாக்க அதிகாரத்தை சில நிபந்தனைகளுடன் ( சர்வஜன வாக்கெடுப்பு, 2/3 பெரும்பான்மை) பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பின் சரத்து 4( a)இனூடாக மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். இந்த அதிகாரத்தை பாராளுமன்றம் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு கட்டமைப்பிற்கும் வழங்க முடியாது.
13 வது திருத்தத்தின்கீழ் மாகாணசபைக்கு பாராளுமன்றம் வழங்கியது உபசட்டமாக்கும் அதிகாரத்தைத்தான். 13 வது திருத்தம் தொடர்பான தீர்ப்பில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேபோன்றுதான் நிறைவேற்று அதிகாரத்தை சரத்து 4( b) இனூடாக ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கிறார்கள். இதிலும் மக்கள் அங்கீகாரமில்லாமல் மாற்றம் செய்யமுடியாது. அதனால்தான் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுனரிடம் மாகாணசபைகளின் நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, முழுமையான சட்டவாக்க அதிகாரமுமில்லை; நிறைவேற்று அதிகாரமுமில்லை; கொடுத்த அதிகாரத்தையும் அரசு விரும்பிய நேரத்தில் மீளப்பெறலாம். எனவேதான் மத்திய அரசால் மீளப்பெற முடியாத, மத்திய அரசால் தலையிட முடியாத சமஷ்டி அடிப்படையிலான அதிகாரத்தைத் தமிழ்த்தரப்பு கோருகின்றது.
அரசு என்பது மத்தியினதும் மாகணங்களினதும் கட்டமைப்புகளை ( அரசாங்கங்களை) உள்ளடக்கியது என்றால் மத்தியும் மாகாணமும் சம அந்தஸ்த்திற்கு வந்துவிடும்.
இறைமையின் ஓர் அங்கமான அரச அதிகாரத்தைப் பங்கிடல்
-----------------------------------------------
இப்பொழுது அரச அதிகாரம் மத்திய, மாகாண அரசுகளுக்கிடையில் மக்களால் பங்கிடப்படப்படுகின்றது.
எனவே, சமஷ்டித் தத்துவத்தின்கீழான மாகாணஅரசுகளுக்கு இறைமையுள்ள மக்கள் அரசியலமைப்பினூடாக நேரடியாக அந்த அதிகாரத்தை வழங்கினால் பாராளுமன்றம் அந்த அதிகாரத்தில் கைவைக்க முடியாது. அதாவது மத்திய அரசு மாகாண அரசின் விடயங்களில் எதையும் தட்டிக்கேட்க முடியாது. ஏனெனில் மாகாண அரசுக்கு தற்போதுதைய 13 இன்கீழ் செய்ததுபோல் பாராளுமன்றம் அதிகாரத்தை வழங்காமல் மக்கள் நேரடியாக வழங்குவார்கள்.
சரத்து3, சரத்து4
-----------------
தற்போதைய யாப்பில் சரத்து3 இறைமையைக் குறிப்பிட சரத்து 4 ( a) சட்டவாக்க அதிகாரம் மக்களிடமும் ( சர்வஜனவாக்கெடுப்பு) மற்றும் பாராளுமன்றத்திடமும் இருப்பதைக் குறிப்பிடுகிறது; எனப்பார்த்தோம். புதிய யாப்பில் இந்த இரண்டுக்குமேலாக, மாகாணசபைகளிடமும் இருக்கின்றது; என்று குறிப்பிடப்பட்டால் அது மக்கள் நேரடியாக அரசியல் யாப்பினூடாக வழங்கிய அதிகாரமாக கொள்ளப்படும்.
இதேபோல் சரத்து4( b) யில் மேலதிகமாக மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பாக குறிப்பிடப்பிடப்பட்டால் அதுவும் மக்களிடம் இருந்து நேரடியாக வழங்கப்பட்டதாக கொள்ளப்படும்.
எனவே, புதிய யாப்பில் இறைமையைக் குறிப்பிட்டதன்பின் ( பெரும்பாலும் புதிய யாப்பிலும் அது சரத்து 3 ஆகவே இருக்கும்) சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் யார் யாருக்கு அல்லது எந்தெந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது; என்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும். மாகாணசபையும் அங்கு குறிப்பிடப்பட்டால் அது சமஷ்டித் தன்மையின் அதிகாரமாகும். மாறாக மாகாணசபையின் அதிகாரம் வேறு சரத்துக்களில் குறிப்பிடப்பட்டால் அது ஒற்றையாட்சித் தன்மையின் அடையாளமாகும்.
அதேநேரம் இவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டபோதும் இந்த அதிகாரத்தின் எல்லை, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துகின்றமுறை தொடர்பாகவும் அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படும்.
சட்டவாக்க அதிகாரத்தைப் பொறுத்தவரை இங்கு இரண்டு விடயங்களை பிரதானமாக நாம் கவனிக்க வேண்டும். அதாவது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட விடயதானங்களில் ( provincial list) மத்திய பாராளுமன்றம் தலையீடு செய்வதற்கு இடம் இருக்கின்றதா? என்பதும் அரசியலமைப்பைத் திருத்தும் விடயத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரம் தொடர்பான சரத்துக்களை பாராளுமன்றம் நேரடியாக திருத்தக்கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கின்றதா? என்பதுவும் கவனிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இருந்தால் வடிவத்தில் சமஷ்டித்தன்மையைக் கொண்டிருந்தாலும் யதார்த்தத்தில் ஒற்றையாட்சித்தன்மை நோக்கியதாக அது இருக்கும். மாறாக இந்த இரண்டு விடயங்களிலும் பாராளுமன்றம் சுயமாக எதுவும் செய்யமுடியாத கட்டுப்பாடு இருக்குமாயின் அது முழுமையான சமஷ்டியாக இருக்கும்.
இந்த ஒற்றையாட்சிக்கும் முழுமையான சமஷ்டிக்கும் இடைப்பட்ட பல படித்தரங்கள் பல நாடுகளில் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் புரிந்துகொள்வதில் பலருக்கு சிரமமிருக்கும். எனவே, அடுத்தடுத்த தொடர்களில் தேவைப்படும்போது சில நாடுகளில் உள்ள சில முக்கிய அம்சங்கள் மட்டும் குறிப்பிடப்படும், இன்ஷாஅல்லாஹ்.