அகமட் எஸ். முகைடீன்-
லங்கா ஸ்போர்ட்ரிஜென் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறிலங்கன் எயர்லைன் நிறுவனத்தின் அனுசரனையில் 17 வது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் ஓட்டப்போட்டி இன்று (8) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
லங்கா ஸ்போர்ட்ரிஜென் நிறுவனத்தின் தலைவர் திலக் வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பதில் அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, சிறிலங்கன் எயர்லைன் நிறுவனத்தின் பிரதிநிதிகள், லங்கா ஸ்போர்ட்ரிஜென் நிறுவனத்தின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் ஓட்டப்போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த 8,500 வீர, வீரங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் காலை 6 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது ஐந்துவிதமான தூர இலக்கைக் கொண்ட போட்டிகள் ஆண், பெண் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா 12 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் விமான பயனச் சீட்டு உள்ளிட்ட பணப் பரிசும் வழங்கப்பட்டன. அத்தோடு குறிப்பிட்ட நேரத்துக்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.