இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியும் - பாகம் 2

ன்று எல்லோருடைய கவனமும் தேர்தல் திருத்தச் சட்டத்தில்தான் இருக்கின்றது. அது தேவையானதுதான். மறுபுறம் இடைக்கால அறிக்கை வெளியாகி இருக்கின்றது. அதில் குறிப்பிடப்பட்ட வடகிழக்கு இணைப்புத் தொடர்பாக சிலர் சமூகவலைத்தளங்களில் சிலாகித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகமானவர்களுக்கு அதிகாரப்பகிர்வு என்றால் அதிலுள்ள ஒரே ஒரு விடயம் வடகிழக்கு இணைப்பு மாத்திரம்தான்.

அதுவும் ஒரு முக்கியமான விடயம்தான். ஆனால் இன்னும் முஸ்லிம்களைப் பாதிக்கக்கூடிய பல விடயங்கள் அதில் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம்தான் ஒற்றையாட்சி- சமஷ்டி என்பது.

தந்திரமாக சமஷ்டி உட்புகுத்தலும் மக்களைப் பிழையாக வழிநடத்தலும்
-------------------------------------------

இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்ததிலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் மற்றும் அரசைச் சேர்ந்த பலரும் நாட்டின் ஒற்றையாட்சித்தன்மைக்கு எந்தப் பாதிப்பும் வராது. சமஷ்டி தொடர்பாக எதையும் நாங்கள் இடைக்கால அறிக்கையில் உள்வாங்கவில்லை; என்று திரும்பத்திரும்ப சொல்லிவருகிறார்கள். ஆனால் தந்திரமாக அதற்குள் சமஷ்டியைத்தான் சொல்லியிருக்கின்றார்கள்; என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்று சொல்லாமல் சில வார்த்தைகளைத் தந்திரமாக பின்னிவிட்டு, இன்னும் சில வார்த்தைகளை சொல்லாமல் மறைத்தே விட்டார்கள். அதைத்தான் " சில விடயங்களை எழுதாமல் எழுதியிருக்கிறார்கள். திரு விக்னேஸ்வரனுக்கு எழுதியது மட்டும்தான் புரிந்தது. சம்பந்தன் ஐயாவுக்கு எழுதாததும் புரியும், அதனால்தான் திரு விக்னேஸ்வரன் இடைக்கால அறிக்கையை விமர்சித்தபோதும் சம்பந்தன் ஐயா, அதனை விமர்சிக்க வேண்டாம்; என்று தெரிவித்திருக்கின்றார்; எனத் தெரிவித்திருந்தேன்.

அதேபோல் மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த இடைக்கால அறிக்கையில் எழுதாமல் மறைத்துவைத்திருந்த சில விடயங்களையும் வெளிப்படுத்தி சமஷ்டிக்கு உடன்பாடு கண்டிருப்பதையும் போட்டு உடைத்துவிட்டார், சம்பந்தன் ஐயா. அதுமட்டுமல்லாமல் இன்னும் பல விடயங்களையும் கூறி, உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது தொடர்பாகவும் தெரிவித்திருக்கின்றார்.

சமஷ்டி தொடர்பாகவும் அதில் முஸ்லிம்களுக்குள்ள ஆபத்துக்கள் தொடர்பாகவும் எனது " அரசியலமைப்புச் சட்டமாற்றம்- 14 ம் பாகத்தில் சில தெளிவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வாசிக்காதவர்கள் தயவுசெய்து வாசியுங்கள். இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த தொடர்களிலும் சமஷ்டி தொடர்பான இன்னும் பல தகவல்கள் இடம்பெறும்.

அதேநேரம் "உள்ளக சுயநிர்ணய உரிமை" தொடர்பாக சம்பந்தன் ஐயா குறிப்பிட்டிருக்கிறார். இதன் தாக்கம், அதன் வீச்சு எத்தனை பேருக்குத் தெரியும். இந்தப் பதத்துடன் வடகிழக்கு இணைப்பும் " அதற்கு அப்பாலும்" சம்மந்தப்பட்டிருப்பது எத்தனை பேருக்குப் புரியும். காரணம் இல்லாமலா சம்பந்தன் ஐயா ' சுயநிர்ணய உரிமை' பற்றிப் பேசுகின்றார்?

இடைக்கால அறிக்கையின் தந்திரமான வார்த்தைப்பிரயோகங்கள்.
---------------------------------------

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துகின்ற மற்றும் மாற்றுகின்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் ( சர்வஜன வாக்கெடுப்பு) உரியது; என இடைக்கால அறிக்கை கூறுகின்றது. இது வெளிப்படையில் ஒற்றையாட்சித் தன்மையைக் குறிக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுகின்ற தன்மை பாராளுமன்றத்திற்குரியது, என்பது ஒற்றையாட்சியின் அடையாளமாகும். ஆனால் அந்த அதிகாரத்தில் கட்டுப்பாடு கொண்டுவந்து பாராளுமன்றம் அல்லாத இன்னொரு வெளிசக்தியிடம் ( மக்களிடம் இருப்பது வேறு) அது வழங்கப்படுமானால் ( உதாரணம் மாகாண சபை) அது சமஷ்டியாகும். ( எனது மேற்சொன்ன 14ம் பாகத்தை மீண்டும் வாசிக்குக)

மேல்சபை
----------
மேற்படி அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மேல் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதேநேரம் மேல்சபைக்கு ஒவ்வொரு மாகாணசபையில் இருந்தும் ஐவர் விகிதமும் பாராளுமன்றத்தால் பத்துப் பேருமாக 55 பேர் நியமிக்கப்படுவர்.

பொதுவாக அதிகாரப்பகிர்வில் மாற்றம் செய்வதற்கு எந்த மாகாணசபையும் விரும்பாது. எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு 2/3 பெரும்பான்மை மேல்சபையில் பெறுவது சிரமம், ஏனெனில் அதில் 45 பேர் மாகாணசபைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருக்கப் போகிறார்கள். இருந்தாலும் மத்தியில் உள்ள ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டில் வடகிழக்கிற்கு வெளியேயுள்ள மாகாணசபைகள் இருக்குமாயின் சிலவேளை மேல் சபையிலும் 2/3 சாத்தியப்படலாம்.

சமஷ்டி தொடர்பாக வேறு சில விடயங்களும் உடன்பாடு காணப்பட்டிருக்கின்றன; என்று சம்பந்தன் ஐயா கூறியிருப்பது என்ன? அந்த வேறுவிடயம் இவ்வாறு மேல்சபையிலும் ஆளும் கட்சி 2/3 பெரும்பான்மையைப் பெறக்கூடிய சூழல் இருக்குமென்பதால் அதனை தடுப்பதற்குரிய ஏற்பாடாக இருக்கலாம்.

அவ்வாறாயின் அது பின்வரும் வகைகளில் ஏதாவதொன்றாக அமையலாம்.
-----------------------------------------
1) Double Majority Principle In The Second Chamber ( மேல் சபையில் இரட்டைப் பெரும்பான்மை)

அதாவது அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாற்றம் செய்வதானால் 2/3 இற்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணசபைகளை மேல்சபையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அங்கத்தவர்களின் பெரும்பான்மையாலும் நிறைவேற்றப்பட வேண்டும்; என்ற ஒரு சரத்தோ அல்லது இதனைச் சாதிக்கக்கூடிய வேறு ஏதாவது ஒரு சரத்தோ உள்வாங்கப்படலாம்.

Self Rule and Shared Rule
( மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி)
-------------------------------------------
சமஷ்டித் தன்மையின் ஓர் அடையாளமாக மேல் சபை பார்க்கப்படுகின்றது. அதற்காக மேல்சபை இருக்கின்ற நாடுகளெல்லாம் சமஷ்டி நாடுகள் என்று பொருளல்ல. உதாரணமாக, சோல்பரி யாப்பின்கீழ் இலங்கையிலும் மேல்சபையான செனட் சபை இருந்தது. அதற்காக அப்பொழுது இலங்கை ஒரு சமஷ்டி நாடல்ல. ஆனால் பொதுவாக சமஷ்டி நாடுகளில் மேல் சபை இருப்பது வழமையாகும்.

சில அரசியல் நிபுணர்களின் கருத்துப்படி மேல் சபை இல்லாமல் அதிகாரம் பகிரப்பட்டால் அது autonomy/ self rule ஏ தவிர அது சமஷ்டி அல்ல என்றும் மேல்சபையின் ஊடாக மத்தியிலும் கூட்டாட்சி இருந்தால்தான் அது சமஷ்டியாகும். இதற்குப்பின்னால் இருக்கின்ற தத்துவம் மாநிலத்தின் நலனை மத்தியில் பாதுகாப்பதற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் மத்தியில் கூட்டாட்சி அவசியம் என்பதாகும். ஆனால் அதிகாரப்பகிர்வுக்குட்படுத்தப்பட்ட ஒற்றையாட்சியிலும் இந்தக் கூட்டாட்சி சாத்தியமாகும்; எதுவரை என்றால் மேற்படி இரட்டைப் பெரும்பான்மை ஊடாகவோ/ அல்லது நேரடியாகவோ பாராளுமன்றத்தின் ( கீழ் சபையின்) சட்டவாக்கத்தன்மை மாகாணங்களால் மேல்சபையினூடாக கட்டுப்படுத்தப்படுத்தப்படாதவரை. அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டால் அது சந்தேகமில்லாத சமஷ்டியாகும். இது எவ்வளவு தூரம் சாத்தியம்? ஏனைய கட்சிகள் ஒத்துக்கொள்ளுமா? என்ற கேள்விகள் இருந்தாலும் நாமும் விழிப்பாக இருக்க வேண்டும்.

2) மாகாணங்களின் அங்கீகாரமில்லாமல் அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது; என்ற ஒரு சரத்தைக் கொண்டுவருதல். இதற்கு தற்போது இருக்கின்ற 154G(2) வில் ஒரு சிறிய திருத்தம் கொண்டுவந்தால் போதும்.

அடுத்த தொடரில் பார்ப்பீர்கள். இந்த சமஷ்டியை அடைவதற்காக The Nature of the State ( அரசின் தன்மை) என்ற விடயத்தில் எவ்வாறு ஒரு பெரிய பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க இடைக்கால அறிக்கை முனைகிறது என்பதை. எனவே இவ்வாறான நுணுக்கங்கங்களைக் கொண்டுவருவது ஒன்றும் அரசுக்கு பெரிய வேலை அல்ல. இதே போல் இன்னும் பல விடயங்களில் நமக்குப் பாதகமான பல நுணைக்கங்களைப் புகுத்த வாய்ப்பிருக்கிறது இப்பொழுது கேள்வி இந்த நுணுக்கங்களை எவ்வாறு அடையாளம் காண்பது.

இன்றைய முஸ்லிம் அரசியலில் பாராளுமன்றில் ரவூப்ஹக்கீமைத்தவிர இதனை அடையாளம் காணக்கூடியவர்கள் இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை. ஆகக்குறைந்தது மற்றவர்களிடம் ஆலோசனை பெறுகின்ற பண்புகூட நம்மவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் தேர்தல் திருத்தம் சம்மந்தமான உபகுழுக் கூட்டங்களுக்கு போயிருப்பார்கள். அது புரியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் வந்து ஆலோசனை கேட்டிருப்பார்கள்.

அதேநேரம், ரவூப்ஹக்கீமிற்குப் புரிந்தாலும் பலருக்கு அவரது நிலைப்பாட்டில் நியாயமான சந்தேகங்கள் இருக்கின்றன. அவர் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த முயல்கின்றாரா? அல்லது வேறு சக்திகளைத் திருப்திப்படுத்த முயல்கின்றாரா? என்பதில் பலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்நிலையில் அல்லாஹ் அவருக்கு நல்ல மனதைக் கொடுத்து முஸ்லிம்களுக்காக அவர் செயல்பட்டால் நிலைமை ஓரளவு திருப்திகரமாக வரலாம். மற்றவர்கள் சந்தேகப்படுவதுபோல் அவர் வேறு சக்திகளைத் திருப்திப்படுத்த முற்பட்டால் முஸ்லிம்களின் நிலை அதோகதிதான். ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரவூப்ஹக்கீம் கையுயர்த்துகின்ற பக்கம் அவர்களும் கையுயர்த்துவார்கள். பின்னர் பழியை அவர்மீது போடுவார்கள்.

வடகிழக்கு இணைப்புத் தொடர்பாக ஏதாவது இருந்தால் மாத்திரம்தான் அவர்கள் சிலவேளை சுயமான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு புரிவது அது மட்டும்தான். அதையும் மிகவும் நுணுக்கமான முறையில் கொண்டுவந்தால் அம்போதான்.

இதை யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்லது கூட்டி மதிப்பிடுவதற்காகவோ குறிப்பிடவில்லை. கசப்பானதாக இருந்தாலும் இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம்.

இந்தப்பின்னணியில்தான் ஒரு சிவில் தலைமைத்துவ சபையின் தேவை அவசியமானதாகவும் அவசரமானதாகவும் இருக்கின்றது. இம்மாதம் 30, 31, மற்றும் நவம்பர் 1 ஆகிய திகதிகளில் இந்த இடைக்கால அறிக்கை பாராளுமன்றில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அரசியல் யாப்பு வரைபு ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியமானதாக இருக்கப் போகின்றது.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -